சென்னை, செப்.8- தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் தமிழ்நாடு அரசு பரிந்துரையை ஆளுநர் நிராகரிக்க முடியுமா? என்பது குறித்து முடிவு செய்ய இரண்டுக்கும் மேற்பட்ட முழு அமர்வு விசாரணைக்கு வழக்குகளை பரிந்துரை செய்து உயர் நீதிமன்றம் டிவிசன் பெஞ்ச் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
முன்கூட்டியே விடுதலை
அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாக்களை முன்னிட்டு, நீண்ட காலமாக சிறையில் இருக்கும் தண்டனை கைதிகளை முன் கூட்டியே விடுதலை செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
அதில், கொடூர குற்றத்துக்காக தண்டனை பெற்றவர்களை முன்கூட்டியே விடுவிக்க முடியாது என்று ஆளுநர் உத்தரவிட்டார். அரசின் பரிந்துரையையும் நிராகரித்தார். இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் விசாரிக்கப்பட்டன.
நிராகரிக்க முடியாது
இந்த வழக்குகளின் விசாரணையின்போது, மனுதாரர்கள் தரப்பில் வழக்குரைஞர்கள் ஆர்.சங்கரசுப்பு, பி.புகழேந்தி உள்பட பல வழக்குரைஞர்கள் ஆஜராகி, “இதுபோன்ற வழக்குகளின் விசாரணையின்போது, சென்னை உயர் நீதிமன்றம் 2 டி.விசன் பெஞ்சுகள் இரண்டு விதமாக தீர்ப்புகளை பிறப்பித்துள்ளது. கொடிய குற்றத்துக்காக 20 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்த வீரபாரதி என்பவரை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழ்நாடு அமைச்சரவை செய்த பரிந்துரையை ஆளுநர் நிராகரிக்க முடியாது. அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்.
அரசியல் சாசன பிரிவு 161-யை அரசுதான் பயன்படுத்த முடியுமே தவிர அந்த அதிகாரத்தை ஆளுநர் பயன்படுத்த முடியாது என்று நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி. சிவஞானம் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் கடந்த 2024ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி தீர்ப்பு அளித்துள்ளது.
ஆளுநருக்கு அதிகாரம்
ஆனால், நீதிபதிகள் ஜி.ஆர். சாமிநாதன், ஆர்.பூர்ணிமா ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் ஆளுநருக்கு அந்த அதிகாரம் உள்ளது என்று 2024ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி தீர்ப்பு அளித்துள்ளது என்று கூறினார். இதே வாதத்தை அரசு தரப்பிலும் முன் வைக்கப்பட்டது. இதையடுத்து, ‘இந்த வழக்கை இரண்டுக்கும் மேற்பட்ட நீதிபதிகளை கொண்ட முழு பெஞ்ச்தான் விசாரித்து, எந்த டிவிசன் பெஞ்ச் நீதிபதிகள் தீர்ப்பு சரியானது என்று முடிவு செய்ய முடியும். அதனால், இந்த வழக்குகளை எல்லாம் முழு அமர்வு விசாரணைக்கு உத்தரவிட கோரி உயர் நீதிமன்றம் தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்கிறோம்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.