லண்டன், செப்.8- சிறந்த உள்கட்டமைப்பு, அமைதியான சூழலால் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் குவிகின்றன என்று இங்கிலாந்து வாழ் தமிழர்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
தொழில் முதலீடுகள்
லண்டனில் ‘தமிழ் கனவு’ என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இங்கிலாந்து வாழ் தமிழர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழர்கள் அறிவில் சிறந்த வர்கள், கடுமையான உழைப்பாளிகள் என்று நீங்கள் எல்லோரும் இந்த அயலக மண்ணில் நிரூபித்து கொண்டிருக்கிறீர்கள். என்னுடைய இந்தப் பயணத்தின் நிறைவாக உங்களை எல்லாம் இங்கே நான் சந்திக்க வந்திருக்கிறேன். தமிழர்கள் எங்கே சென்றாலும் நம்முடைய மொழி, பண்பாட்டை விடமாட்டோம். அது மட்டுமல்ல, சுயமரியாதை சமத்துவ எண்ணம், சமூகநீதி கோட்பாட்டையும் விட மாட்டோம். அதற்கு எடுத்துக்காட்டாக, இங்கே தமிழர்கள் இருப்பதை கடந்த சில நாட்களாக கண்கூடாக பார்த்துக்கொண்டிருக்கிறேன். திராவிடத்தால் வாழ்கிறோம் என்ற பெருமிதத்துடன் சொல்கின்ற தமிழர்களை பார்க்கிறேன். சிறந்த உள்கட்டமைப்பு திறமையான இளைஞர்கள், அமைதியானசூழல், இதனால்தான், தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிகின்றன. தமிழ்நாட்டின் பெருமையை எடுத்துச் சொல்லுகின்ற தூதர்களாக இங்கே இருக்கின்ற உங்களை எல்லாம் நான் பார்க்கின்றேன்.உங்களை பார்க்கும்போதே, இங்கே இருக்கிறவர்களுக்கு நம்முடைய தமிழ்நாட்டைப் பற்றி ஒரு நல்ல எண்ணம் வரும். அந்த வகையில், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கின்ற நீங்கள் எல்லோரும் தமிழ்நாட்டின் அதிகாரப்பூர்வமற்ற தூதர்கள்.
உலக கதவுகளை திறந்துவிடுங்கள்
தமிழ்க்குழந்தைகளுக்கு உயர்தரப் படிப்பை வழங்குங்கள். அவர்களுடைய திறமையை வெளிப்படுத்துகின்ற வாய்ப்புகளை உருவாக்கி தாருங்கள். அடுத்த தலைமுறை தமிழர்கள், நம்மைவிட அதிக உயரத்தில் இருக்க வேண்டும். அதே சமயம் சக தமிழர்களையும் வளர்த்து விடவேண்டும்.
உங்களுடைய பரபரப்பான வாழ்க்கையை கடந்து, ஆண்டுக்கு ஒரு முறையாவது தமிழ்நாட்டுக்கு வாருங்கள். உங்களால் முடிந்ததை தமிழ்நாட்டுக்கு வந்து முதலீடு செய்யுங்கள். இங்கே இருக்கின்ற வேலைவாய்ப்புகளை பற்றி, தமிழ்நாட்டில் இருக்கின்ற நம்
முடைய இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.
அவர்களுக்கும் உலக கதவுகளை திறந்துவிடுங்கள்.
தமிழர்களின் வரலாற்றை, பண்பாட்டை வெளிக்காட்ட கீழடியைத் தொடர்ந்து, பொருநை அருங்காட்சியகம், கங்கை கொண்ட சோழ புரம் அருங்காட்சியகம் என்று அமைத்துக் கொண்டு வருகிறோம். நம்முடைய குழந்தைக ளுக்கு அதையெல்லாம் சுற்றி காண்பித்து, நம்முடைய வரலாற்றை எடுத்துச்சொல்லுங்கள்.
பழம்பெருமையை மட்டும் எடுத்துச் சொல்லாமல், நாம் எவ்வளவு வலிகளையும், வேதனைகளையும் கடந்து இன்றைக்கு தலை நிமிர்ந்திருக்கிறோம் என்பதையும் சொல்லித் தாருங்கள். இதையெல்லாம் நான் சொல்லக் காரணம், எப்போதும் தமிழர்களுக்குள்ளே ஒற்றுமை நிலவ வேண்டும். இந்த இனம்
எப்போதும் முன்னேற்றப் பாதையில் மட்டும்தான் பயணிக்க வேண்டும். அதற்காகத்தான் நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், தமிழ்நாட்டில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
தமிழ் என்ற வேரில்…
தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை உங்களுக்காக ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டிருக்கிறது. நம்மைப் பொறுத்தவரைக்கும், வாழ்வதும், வளர்வதும், தமிழும் தமிழ் இனமுமாய் இருக்க வேண்டும்.சாதி, மதம், ஏழை, பணக்காரன் போன்ற வேறுபாடுகள் நம்மை பிரிப்பதோடு, நம்முடைய இனத்தையே வளர விடாது.
நம்மை எதுவெல்லாம் பிரிக்குமோ, அதையெல்லாம் நாம் மறக்க வேண்டும். எதுவெல்லாம் நம்மை இணைக்குமோ, அதையெல்லாம் நாம் நினைக்கவேண்டும். எனவே தமிழ் என்ற வேரில் வளர்ந்திருக்கும் நாம், நம்முடைய அடையாளத்தை ஒருபோதும் மறக்கக்கூடாது.
அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வாருங்கள், உங்களுக்காக உங்கள் சகோதரனாக இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அங்கே இருப்பான். அந்த நம்பிக்கையோடு வாருங்கள். எல்லையில்லா அன்போடும், மறக்க முடியாத நினைவுகளோடும் தான் இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டிருக்கிறேன் உங்கள் அனைவருக்கும் நான் மீண்டும், மீண்டும் என்னுடைய இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்து, இந்த நட்பும், இந்த தொடர்பும், தொடர்ந்து இருக்க வேண்டும், இருக்கிறது, இருக்கும்.
இவ்வாறு அவர்பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, அயலக தமிழர் நல வாரியத்தின் தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி, உறுப்பினர்கள் ராம், புகழ் காந்தி, முகமது பைசல் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.