ஈரோடு, செப்.7– அ.தி.மு.க.வினர் 1,500 பேர் கே.ஏ.செங்கோட்டை யனுக்கு ஆதரவாக தங்களுடைய கட்சி பதவியிலிருந்து விலகினர்.
செங்கோட்டையன் கட்சி பதவி பறிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோபி சட்டமன்ற தொகுதியில் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளருமான சத்தியபாமா பதவி விலகியுள்ளார். இதேபோல் கோபி சட்டமன்ற தொகுதியில் பதவி வகித்து வரும் ஒன்றிய, நகர, பேரூர், கிளை, வார்டு செயலாளர்கள் என அ.தி.மு.க.வினர் சுமார் 1,500 பேர் கே.ஏ.செங்கோட்டையனுக்கு ஆதரவாக தங்களுடைய கட்சி பதவியிலிருந்து விலகியுள்ளனர்.
இதற்கான கடிதத்தை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கையெழுத்திட்டு அனுப்பியுள்ளனர்.
அ.தி.மு.க.வினர் அனுப்பி உள்ள அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ள தாவது:-
அ.தி.மு.க. பழைய வலிமையை பெறவேண்டும். வெற்றிப் பாதையில் பயணிக்க வேண்டும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் மக்களுக்கு பயனுள்ள ஓர் ஆட்சி அமைய வேண்டும். இந்த நல்ல நோக்கம் நிறைவேற அ.தி.மு.க. ஒன்றுபட வேண்டும். கட்சியில் இருந்து பிரிந்தவர்களை இணைக்க வேண்டும் என்றுதான் செங்கோட்டையன் கூறுகிறார். அதற்காக அவருடைய கட்சி பதவிகளை பறித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, எங்களுடைய கட்சி பதவியிலிருந்து விலகுகிறோம். அனைவரும் ஒன்று சேர்ந்தால் பதவியில் நீடிப்போம்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.