மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான ஒன்றிய அரசின் போக்கு! தி.மு.க. மாற்றுத் திறனாளிகள் அணி மாநிலச் செயலாளர் பேராசிரியர் தா.மீ.நா.தீபக் குற்றச்சாட்டு

சென்னை, செப்.7 ஒன்றிய அரசின் மாற்றுத் திறனாளிகள் மீதான அக்கறையாற்றப் போக்கு ஓர் நம்பிக்கையின்மையை அவர்களிடையே உண்டாக்குவதாக பேராசிரியர் தா.மீ.நா. தீபக் குறை கூறி உள்ளார். அவரது அறிக்கை வருமாறு:

அண்மைக் காலங்களில் ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் ஒட்டு மொத்த மனித சமூகத்திற்கே எதிர்வினைகளை ஆற்றி வருகிறது. பன்னாட்டு மற்றும் உள்ளூர் சந்தை அழுத்தங்களினால் ஒன்றிய அரசு சில மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது. இந்தியா முழுமைக்கான ஜிஎஸ்டி வரி திருத்தத்தில் நினைவில் கொள்ளப்படாத மாற்றுத்திறனாளிகள் இம்முறையும் மறுதலிக்கப்பட்டிருக்கிறார்கள்.

மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் உதவி உபகரணங்கள் மீது எந்த வரி குறைப்பும் செய்யாதது மாற்றுத் திறனாளிகள் சமூகத்திற்கு பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது.  மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் உதவி உபகரணங்கள் அவர்களின் மாண்பையும் கண்ணியத்தையும் நிலை நிறுத்தும் அறிவியலின் கொடை என்பதை ஒன்றிய அரசு  உணர வேண்டும்.

ஜி.எஸ்.டி வரி விதிப்பில் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் உதவி உபகரணங்கள் மீதான அதிக வரி விதிப்பை, திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ச்சியாக எதிர்த்து வந்துள்ளது. இந்த வரி விதிப்பு முறையை எதிர்த்து  நிதி அமைச்சர்   நிர்மலா சீதாராமன் அவர்களை நேரில் சந்தித்து மாற்றுத்திறனாளிகள் சமூகத்தின் மனக்கிடக்கையை சிரமங்களை ஏற்ெகனவே தி.மு.க.வின் துணை பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி அவர்கள் எடுத்துரைத்திருக்கிறார். இப்பிரச்சினை குறித்த ஜி.எஸ்.டி குழு விவாதங்களின் போது தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் உதவி உபகரணங்கள் மீதான வரி விதிப்பை தனது நிதி அமைச்சர் உறுப்பினர் மூலமாக எதிர்த்தே வந்துள்ளது.

நிபுன் மல்கோத்ரா எதிர் இந்திய அரசு வழக்கில் உச்ச நீதிமன்றம் வரிவிதிப்பை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தியுள்ள போதும் ஒன்றிய அரசு கண்டும் காணாமல் நடந்து கொள்வது ஏற்புடையது அல்ல.

இந்நிலையில் ஜி.எஸ்.டி வரி விதிப்பில், நாங்கள் பயன்படுத்தும் அனைத்து விதமான உதவி உபகரணங்கள் மீதும் முழு வரி விலக்கு அளித்திட வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழக மாற்றுத் திறனாளிகளின் அணியின் சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.

அதேபோல, போட்டித் தேர்வுகளில் பார்வையற்றோருக்கான தேர்வெழுதும் உதவியாளர் (Scribe) முறைக்கு, கடும் மாற்றங்களைக் கொண்டு வந்து, பார்வையற்ற தேர்வர்கள், தங்களுக்கான உதவியாளர்களைத் தாங்களே ஏற்பாடு செய்து கொள்ளும் முறையை ரத்து செய்துள்ளது உள்ளபடியே பார்வையற்ற மாற்றுத்திறன் சகோதர சகோதரிகளுக்கு கடும் மன  உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றிய அரசின் இந்தச் சுற்றறிக்கை பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் மீதுள்ள நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.

2013இல் மாற்றுத் திறனாளிகளுக்கான தலைமை ஆணையருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், தேர்வின் போது, தேர்வு நடத்தும் முகமையின் (Examining Body) விதிக்கப்பட்ட கடமையைச் செய்யாமல், தேர்வு எழுதுவோர் மீது அவநம்பிக்கையுடன் பார்வையற்றோருக்கான தேர்வு  உதவியாளர்களை, பார்வையற்றோரே தேர்ந்தெடுக்கும் முறையைத் தடுக்கக் கூடாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இத்தீர்ப்பை நீர்த்துப்போக வைக்கும் முன்னெடுப்பாகத் தற்போதைய சுற்றறிக்கையை பார்க்கப் படுகின்றது.

பார்வையற்ற தேர்வர்கள் தாங்கள் படித்துள்ள படிப்பிற்கு இரண்டு வகுப்பு அல்லது மூன்று வகுப்பு குறைவாகக் கற்றவர்களையே தேர்வு உதவியாளர்களாகக் கொள்ள வேண்டும் என்பது பல நடைமுறை சிக்கல்களை ஏற்படுத்தும்.

தேர்வு நடத்தும் முகமை, தனது கண்காணிப்பை அதிகப்படுத்த காட்சிப் பதிவு அல்லது குரல் பதிவு கொண்டு, மறு சரிப்பார்ப்பு முறையை (Cross Verification) கைக்கொள்ள வேண்டும் என்பதே சரியான முறையாக இருக்கும்.

பார்வையுள்ள தேர்வர்களுக்கு வினாத்தாள் அமைவதைப் பொறுத்து கடினமாகவோ, இலகுவாகவோ தேர்வு அமையும். ஆனால் பார்வையற்ற தோழர்களுக்கு, தேர்வு எழுதும் உதவியாளர் அமைவதைப் பொறுத்து தான் அத் தேர்வு அமையும் என்பது நிதர்சனத்தில் உள்ள பெரும் சவால்.

மேலும் அத் தேர்விற்குப் பார்வையற்ற தோழர்கள் சிறப்பாகத் தயார் செய்திருந்தாலும் இதுவே நிலை. இந்நிலையில் பார்வையற்ற தேர்வர்கள் தங்கள் உதவியாளரைத் தேர்ந்தெடுக்கும் முறைக்குத் தடை விதித்திருப்பது அய்.நா. மாற்றுத் திறனாளிகள் உடன்படிக்கையை மீறும் செயலாகும்.

ஆகவே ரத்து செய்யப்பட்டுள்ள பார்வையற்ற தேர்வர்களின் தேர்வு உரிமை உடனடியாக மீட்டு பார்வையற்ற தோழர்களின் சமூக உள்ளடக்கத்தை வேலை வாய்ப்பு உரிமையையும் சமன்படுத்த வேண்டும்” என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *