சென்னை, செப்.7 அதிமுக ஒரு ‘‘மூழ்கும் கப்பல்’’ என்றும், தமிழ்நாட்டில் தற்போது பாஜக தனது ‘‘சித்து விளையாட்டைத்’’ தொடங்கியுள்ளதாகவும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுக-பாஜக கூட்டணிக்கு மக்களிடையே ஆதரவு இல்லை என்பதை சுட்டிக்காட்டிய அவர், இதை உணர்ந்துதான் டி.டி.வி.தினகரன், ஓ.பி.எஸ். உள்ளிட்டோர் கூட்டணியிலிருந்து விலகியுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்தக் கூட்டணிக்கு மக்கள் அளித்த எதிர்ப்பு தெளிவாகத் தெரிந்தது என்றார். அதன் தொடர்ச்சியாகவே கூட்டணியில் இருந்து பலர் விலகி வருவதாகவும், அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் போன்றோரும் வெளியேறும் நிலை உருவாகி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
‘‘உறவாடி கெடுக்கும்
கட்சி’’
மேலும், பாஜக, ‘‘உறவாடி கெடுக்கும் கட்சி’’ என விமர்சித்த செல்வப்பெருந்தகை, நாட்டின் பல மாநிலங்களில் நடந்ததுபோல, தமிழ்நாட்டிலும் அதிமுகவுக்குள் பதற்றங்களை ஏற்படுத்த பாஜக முயற்சிப்பதாக எச்சரித்தார்.
பாஜகவின் சித்து விளையாட்டு இப்போதுதான் தொடங்கியுள்ளது, இன்னும் நிறைய நடக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.