தந்தை பெரியார் பற்றி எத்தனைக் கவிஞர்கள் எழுதியிருந்தாலும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தீட்டிய ‘தொண்டு செய்து பழுத்த பழம்’’ என்று தொடங்கும் பாடலுக்கு நிகரானது ஏதுமில்லை. அந்தப் பாடலின் கடைசி வரிதான் ‘மண்டைச் சுரப்பை உலகு தொழும்’’ என்பதாகும்.
தொலைநோக்கோடு இன்றைக்கு 67 ஆண்டு களுக்குமுன் சிதம்பரத்தில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தலைமையில் ஜாதி ஒழிப்புக்கான சட்ட எரிப்புப் போராட்டத்தில் சிறை சென்று விடுதலையான கருஞ் சட்டைத் தோழர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது.
பொதுக் கூட்டத்திற்குமுன், மிகப் பெரும் கருஞ்சட்டைப் பேரணி நடைபெற்றது. அந்தப் பேரணியைக் கண்ட ஓர் உழவன் உழத்திற்குச் சொல்லுவது போன்ற பாடல் அது.
தந்தை பெரியார் மறைந்த 52 ஆண்டுகள் ஓடி மறைந்திருந்தாலும் அன்றாடம் அவர்தம் சிந்தனைகள் ஏதோ ஒரு வகையில் மக்களிடம் புழக்கமாகவே இருந்து வருவதை நாட்டு மக்கள் அறிவார்கள்.
40 ஆண்டுகளுக்குமுன் லண்டன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள், தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவில் பங்கேற்றார்.
அதே பல்கலைக் கழகத்தில் நமது சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் உயர் எண்ணங்கள் மலரும் சோலையாம் தந்தை பெரியாரின் படத்தினைத் திறந்து வைத்து சுயமரியாதை – பகுத்தறிவுப் பொன் மழையைப் பொழிந்திருக்கிறார்.
‘தந்தை பெரியார் உருவப்படத்தினை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் திறக்கப் போகிறோம்’ என்ற தகவலை அறிந்தபோதே சொல்லொணா மகிழ்ச்சியில் திளைத்ததை வெளியிட்டு இருந்தார். படத்திறப்பு விழாவிலும் அதனைக் குறிப்பிட்டதோடு முகமலர்ந்து நெகிழ்ச்சியோடு ஒவ்ெவாரு சொல்லையும் அளந்து அளந்து வைத்து ஆற்றிய உரை, இன்று வெளிவந்து நாளை மறையக் கூடியதல்ல.
எந்த அகராதியைப் புரட்டினாலும் கிடைக்காத பொருள் பொதிந்த அந்தச் ‘சுயமரியாதை’ என்ற சொல்லை தந்தை பெரியார் தன்னால் துவக்கப்பட்ட இயக்கத்திற்குப் பெயராகச் சூட்டினார்.
அதுதான் திராவிடர் கழகமாக, திராவிட இயக்கமாக இன்று பரிணமித்து மணக்கிறது.
‘‘ஓர் இனத்துக்கே சுயமரியாதை உணர்வை ஊட்டி தலை நிமிர வைத்த பெரியாரை இன்றைக்கு உலகம் கொண்டாடி வருவதுதான் தமிழ்நாட்டிற்கும் திராவிட இயக்கத்திற்கும் கிடைத்திருக்கக் கூடிய பெருமை’’ என்று நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்ட சொற்கள் உதட்டிலிருந்து உதிர்த்தவையல்ல; உள்ளத்தின் ஆழமான ஆணி வேரிலிருந்து பழுத்து வந்த பலாச்சுளை நிகர்த்த பகுத்தறிவுத் தேன் சுரப்பாகும்!
‘பெரியாரியல் என்றால் என்ன?’ என்ற வினாவை எழுப்பி அதற்கான விடையையும் அர்த்தமுள்ள சொற்களால் அணி மலராய்த் தொகுத்து அட்டவணைப்படுத்தியுள்ளார்.
சுயமரியாதை,
பகுத்தறிவு,
சமதர்மம்,
சமத்துவம்,
மானுடப்பற்று,
இரத்த பேதமில்லை,
பால் பேதமில்லை,
சுய முன்னேற்றம்,
பெண்கள் முன்னேற்றம்,
சமூகநீதி
மதச் சார்பற்ற அரசியல்
அறிவியல் மனப்பான்மை
என்று, அய்யாவின் அத்தனைக் கொள்கையையும், ஒரு குப்பியில் அடைக்கப்பட்ட அருமருந்து போல் உதிர்த் திருக்கிறார்.
தந்தை பெரியார் அரசியலுக்குள் அடி வைத்தார் இல்லை; பதவி நாற்காலியில் அமர்ந்தார் இல்லை; ஆனால் அவர்தம் கொள்கைகளை ஆட்சியில் அமர்ந்தவர்கள் சட்டம் இயற்றியதை, செயல்படுத்தியதை ‘கண்ணாடிச் சட்டம்’ போட்டுக் காட்டியிருக்கிறார்.
முதலமைச்சர் அண்ணா நிறைவேற்றிய சென்னை மாநிலத்திற்குத் ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டியது, சுயமரியாதைத் திருமணச் சட்டம், கொண்டு வந்தது, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ‘அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்று சட்டம் கொண்டு வந்தது, பெண்களுக்குச் சொத்துரிமைச் சட்டம், சமத்துவபுரம் திட்டம் கொண்டு வந்ததை எல்லாம் எடுத்துக்காட்டுக்காக ஒன்றிரண்டை எடுத்துச் சொல்லியிருக்கிறார். பட்டிய லிட்டால் நீளும் என்பதற்காக! தன்னடக்கம் காரணமாக நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தந்தை பெரியார் கொள்கைகளின் அடிப்படையில் தமது ஆட்சியில் நிறைவேற்றிய மறுமலர்ச்சித் திட்டங்களைக் கூறினார் இல்லை.
தந்தை பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாக அறிவித்து, அந்நாளில் அனைத்து அரசுப் பணியாளர்களும் ‘சமூகநீதி சூளுரை’யை எடுக்கும்படிச் செய்துள்ளாரே! தந்தை பெரியார்தம் படைப்புகளை 21 மொழிகளில் கொண்டு வந்துள்ளாரே! பெண்களின் வாழ்வில் புலிப் பாய்ச்சல் போல அடுக்கடுக்கான திட்டங்களை, நிதி உதவிகளை அளித்ததெல்லாம் சாதாரணமா?
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் ‘அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும்’ சட்டத்தைக் கொண்டு வந்தார் என்றால், அதனைச் செயல்படுத்திக் காட்டிய சீலர் அல்லவா நமது மாண்புமிகு முதலமைச்சர்.
திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரான நமது ஆசிரியர் அவர்கள் ‘பெரியாரை உலகமயமாக்குவோம் – உலகத்தைப் பெரியார் மயமாக்குவோம்!’’ என்று சொல்லி வருவதெல்லாம் வெற்றுச் சொற்கள் அல்ல – வினையாற்றும் செயல்களே!
பெரியார் பன்னாட்டு மய்யம் அமெரிக்காவின் சிகாகோ – இலினாய்சில் 1994ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி தொடங்கப்பட்டது.
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, மேனாள் ஒன்றிய அமைச்சர் சந்திரஜித் யாதவ் போன்ற பெரு மக்கள் அந்நிகழ்ச்சியில் பங்கேற்றுச் சிறப்புச் செய்தனர். அதன் கிளைகள் லண்டன், பிரான்சு, ஜெர்மன், மலேசியா, சிங்கப்பூர், குவைத், மியான்மர் முதலிய நாடுகளில் பெரியார் கொள்கையை பரப்பும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை ஜெர்மன் (கொலோன் பல்கலைக் கழகம்) அமெரிக்காவில் வாசிங்டன், கனடா முதலிய நாடுகளில் பெரியார் பன்னாட்டு மாநாடுகள் நடைபெற்றுள்ளன. பன்னாட்டு அறிஞர் பெருமக்கள் தந்தை பெரியார்தம் சீர்மைமிகு சிந்தனைகளை ஆய்வு அடிப்படையில் எடுத்துக் கூறினர்.
வரும் நவம்பர் 1 மற்றும் 2 தேதிகளில் ஆஸ்திரேலியாவில் அம்மாநாடு நடைபெற உள்ளது.
இந்த வரிசையில் நமது மாண்புமிகு முதலமைச்சர் லண்டன் மாநகரில் உலகப் புகழ் பெற்ற ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியார் உருவப் படத்தினைத் திறந்து வைத்து மகுடம் சூட்டியுள்ளார்.
இன்றைய சூழலில் மதவாத பிற்போக்குச் சக்திகள் தலைத் தூக்க எத்தனிக்கும் கால கட்டத்தில், தந்தை பெரியாரின் சித்தாந்தம் என்ற மாமருந்துதான் இந்த நோய்க்கான அருமருந்தாக இருக்க முடியும் – இருந்தே தீரும் என்பதில் அய்யம் சற்றும் இல்லை.
வாழ்க பெரியார்!
வளர்க அவர்தம் தத்துவம்!!