மகாராட்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித்பவார், சோலாப்பூர் மாவட்டத்தில் நடக்கும் சட்டவிரோத சுரங்கப்பணியை நிறுத்தச் சென்ற நேர்மையான அய்.பி.எஸ். அதிகாரி அஞ்சனா கிருஷ்ணாவை தொலைப்பேசியில் மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த உரையாடலின் ஒலிப்பதிவு சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
சம்பவத்தின் பின்னணி
சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள குர்து பகுதியில் உள்ள பனாஸ்வாடி, உகந்த்காட், மர்கந்த்காவ் போன்ற பல பகுதிகளில், விலை உயர்ந்த தனிமங்கள் உள்ள மண்ணை சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டி, கள்ளச் சந்தையில் கோடிக்கணக்கில் விற்கும் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இதைத் தட்டிக்கேட்ட பலர் யாருக்கும் தெரியாத முறையில் இறந்துள்ளனர். இந்த மரணங்களைக் காவல்துறையினர் தற்கொலை என்றே முடித்து வைத்துள்ளனர்.
இந்த நிலையில், புதிதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகப் பொறுப் பேற்ற கேரளாவைச் சேர்ந்த அய்.பி.எஸ் அதிகாரி அஞ்சனா, இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்தார். திடீரென இறந்தவர்கள் அனைவரும் சட்டவிரோதச் சுரங்கம் தொடர்பாக புகார் அளித்தவர்கள் என்பதை அவர் கண்டறிந்தார்.
இந்தக் கொலை மற்றும் சுரங்கப் பணிகளில் ஈடுபடும் கொள்ளைக் கூட்டம் குறித்து கிராம மக்களிடம் பேசியபோது, பலர் புகார் தெரிவித்தனர். இருப்பினும், எழுத்துப்பூர்வமாக புகார் கொடுக்க யாரும் முன்வராத நிலையில், கணவரை இழந்த சில பெண்கள் துணிச்சலாக எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தனர்.
துணை முதலமைச்சர் அஜித்பவார் மிரட்டல்
புகாரைப் பெற்ற அதிகாரி அஞ்சனா, உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சட்டவிரோத சுரங்கம் நடப்பதைக் கண்டார். அங்கிருந்தவர்களைக் கைது செய்ய முயன்றபோது, அஜித்பவாரின் கட்சிக்காரர் ஒருவர் தனது தொலைப்பேசியை அவரிடம் கொடுத்துள்ளார். அதில் பேசிய துணை முதலமைச்சர் அஜித்பவார், “நான் துணை முதலமைச்சர் பேசுகிறேன். யாரையும் கைது செய்ய வேண்டாம். உடனடியாக இந்த நடவடிக்கையை நிறுத்திவிடுங்கள்” என்று கூறியுள்ளார்.
அதற்கு அதிகாரி அஞ்சனா, “சட்டவிரோதச் சுரங்கம் குறித்து எங்களிடம் புகார் உள்ளது. பாதிக்கப்பட்டவர் களுக்கு உதவுவது எங்கள் கடமை. இதுதான் எனக்கு அளிக்கப்பட்ட வேலை” என்று பதிலளித்தார்.
இதனால் கோபமடைந்த அஜித்பவார், “நான் துணை முதலமைச்சர் சொல்கிறேன், நடவடிக்கையை நிறுத்து. இல்லையென்றால் என்ன நடக்கும் என்று தெரியுமா?” என எச்சரித்தார்.
“உனக்கு எங்கிருந்து
இவ்வளவு தைரியம் வந்தது?”
அதற்கு அதிகாரி அஞ்சனா, “நீங்கள் துணை முதலமைச்சர் தான் என்று எனக்கு எப்படித் தெரியும்? துணை முதலமைச்சருக்கு மாவட்ட காவல் கண் காணிப்பாளர் எண் தெரியாதா? நீங்கள் நேரடியாக எனது எண்ணுக்கு அழையுங்கள்” என்று தைரியமாகப் பதிலளித்தார்.
இதனால் மேலும் கோபமடைந்த அஜித்பவார், “உனக்கு எங்கிருந்து இவ்வளவு தைரியம் வந்தது? என்னுடைய உண்மையான முகத்தைக் காட்டினால்…!” என்று மிரட்டிவிட்டு, “உன் மீது நான் நடவடிக்கை எடுப்பேன்” எனக் கூறியுள்ளார். பின்னர் அந்த அதிகாரியின் அலைப்பேசி எண்ணை பொதுவெளியில் கேட்டு, வாட்ஸ்அப் காணொலியில் பேசியுள்ளார். அதில் உடனடியாக வேலையை நிறுத்த வேண்டும் என்று கூறி, அங்கிருந்த வட்டாட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து வட்டாட்சியர், பெண் அதிகாரியிடம், “நாங்கள் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கவில்லை. எனவே, நீங்கள் நடவடிக்கை எடுக்க முடியாது” என்று கூறியுள்ளார். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் வட்டாட்சியர் மற்றும் பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி ஆகியோர் காவல் துறை அதிகாரியை அங்கிருந்து செல்லச் சொல்லியுள்ளனர்.
முக்கிய அரசியல் விமர்சனங்கள்
இந்தச் சம்பவம் குறித்து அஜித் பவாரைத் தொடர்பு கொள்ள முயற்சித்த போது, அவர் தரப்பிலிருந்து இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அதே சமயம், சோலாப்பூரில் உள்ள ஒரு கிராமம் பாஜக கூட்டணிக்கு வாக்களிக்கவில்லை என்று கூறியதால், அந்த கிராம மக்கள் மீது தேசத்துரோக வழக்கு, கொலை வழக்கு உட்பட 13 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மக்களின் வாக்குகளைப் பெறாமல் ஆட்சியில் அமர்ந்தவர்கள் மக்களின் குரலைக் கேட்க மாட்டார்கள் என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அஞ்சனா கிருஷ்ணா விசு அய்.பி.எஸ். கேரளாவைச் சேர்ந்தவர். 2022ஆம் ஆண்டு பிரிவு அய்.பி.எஸ். பதவிக்கு வந்தவர். இவரது தந்தை தேநீர் கடைகளில் வேலை செய்கிறார். இவரது தாயார் ஆட்சியர் அலுவலகம் இருக்கும் இடத்தில் கடை ஒன்றில் டைப்பிஸ்டாக வேலை பார்க்கிறார்.
மிகவும் ஏழ்மை நிலையில் இருந்து உயர்ந்த பதவியை அடைந்த அஞ்சனா துணிச்சலாக தன்னுடைய பணியைச் செய்த போது கொள்ளைக் கும்பலுக்கு ஆதரவாக மாநில துணை முதலமைச்சரே தொலைப்பேசியில் வந்து மிரட்டிய நிகழ்வு இந்தியாவையே பரபரப்பாக்கி உள்ளது.
இது தொடர்பாக மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் எந்தக் கருத்தும் கூறாமல் அமைதியாக இருப்பது இவர்களின் ஆட்சி யாருக்கானது என்று பட்டவர்த்தனாகவே தெரியவருகிறது.