தகுதி தேர்வு கட்டாயம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ஆசிரியர்களை அரசு பாதுகாக்கும் சங்க நிர்வாகிகளிடம் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி

 சென்னை, செப். 5- தகுதித் தேர்வு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு குறித்து தமிழ்நாடு ஆசிரியர்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஆசிரியர்கள், மாணவர்களை இந்த அரசு காக்கும், அரணாக இருக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

ஆசிரியர் தகுதித் தேர்வு

சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் நியமிக்கப்படும் ஆசிரியர், தகுதித் தேர்வு எழுதுவது கட்டாயமா என்ற வழக்கு உச்சநீதி மன்றத்தில் நடந்தது. அந்த வழக்கில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், ஆசிரியர்கள் பணியில் தொடர்ந்து நீடிக்கவும், பதவி உயர்வுகள் பெறவும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். ஓய்வு பெறும் வயதை அடைய 5 ஆண்டுகள் உள்ள ஆசிரியர் பணியில் நீடிக்கலாம். அதற்கு மேல் பணியில் நீடிக்க உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்றும். இல்லை என்றால் அவர்களை பணியில் இருந்து வெளியேற்றலாம் அல்லது கட்டாய ஓய்வு கொடுத்து அனுப்பலாம் என்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பால் தமிழ்நாட்டில் ஏராளமான ஆசிரியர்கள் பணியிழக்கும் அபாயம் உருவாகி உள்ளது. இது ஆசிரியர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து நேற்று முன்தினம் கருத்து தெரிவித்த தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆசிரியர்களை இந்த அரசு கைவிடாது என்று தெரிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக ஆசிரியர்கள் வைத்த வேண்டுகோளை ஏற்று ஆசிரியர் சங்கங்களுடன், நீதிமன்ற தீர்ப்பு குறித்து விவாதித்து என்ன நடவடிக்கை எடுப்பது என்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று நடந்தது. இதில், பெரும்பாலான ஆசிரியர் சங்கங்கள் பங்கேற்றன.

அந்த கூட்டத்தில் ஆசிரியர் சங்கங்களிடம் கருத்து கேட்டபின், அன்பில் மகேஸ் பொய்யாமொழி சங்க நிர்வாகிகளிடம் பேசியதாவது:

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் என்ற முறையில் நான் உங்களுக்கு தெரிவித்துக் கொள்வது என்னவென்றால், ஆசிரியர்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. உங்களைக் பாதுகாக்கும் அரசாக இந்த அரசு இருக்கும். நாங்கள் என்ன முடிவு எடுக்கிறோம் என்பதை உங்களிடமும், நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளும் அடிப்படையில் ஒரு கருத்து பரிமாற்றம் என்ற வகையில் இந்த கூட்டம் அமைந்துள்ளது. சட்டம் மற்றும் அறிவிப்புகள் என்ன சொல்கிறது. அதை எப்படி நடைமுறைக்கு கொண்டு வருவது என்பதற்காகவும், இங்கிருந்து பெறும் கருத்துக்களை முதலமைச்சரிடம் தெரிவித்து, ஒன்றிய அமைச்சரிடம் தெரிவிக்கலாம் என்றும் நினைக்கிறோம்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு கல்வித்துறைக்கு ஒரு சவாலாகவே உள்ளது. தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு தான் எதிர்த்தது. வழக்கு தொடர்ந்ததும் தமிழ்நாடுதான். ஆசிரியர்கள் நலன், மாணவர்கள் நலனாக இருந்தாலும் அவற்றை காக்கும் மாநிலம் தமிழ்நாடுதான். அதேபோல, இந்த விஷயத்திலும் முதல் குரல் கொடுத்ததும் தமிழ்நாடுதான். 1-8ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களின் பங்கு என்ன என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். அந்த ஆசிரியர்களுக்கு ஒரு நெருக்கடி என்றால் அவர்களுக்கு அரணாக இந்த அரசு இருக்கும். என்னென்ன செய்யலாம், எப்படி செய்யலாம் என்பதை நீங்கள் சொன்னால் அதை நாங்கள் ஆலோசித்து செயல்படுத்த முடியும். சங்கங்களின் கருத்தை கேட்டு முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *