* தந்தை பெரியாரின் கொள்கை உலக மயம் ஆகிக் கொண்டிருக்கின்றது!
* வெறும் நம்பிக்கையைக் கடந்து எல்லாவற்றையும் கேள்வி கேட்கச் சொன்னவர் பெரியார்!
* பெரியார் அன்று சொன்னவை சட்டங்களாக உருப்பெற்றுள்ளன!
* பெரியார் கொள்கை வழி செயல்படும் ‘திராவிட மாடல்’ அரசு!
உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில்
தந்தை பெரியார் படத்தைத் திறக்கிறேன்!
இந்த நிகழ்ச்சி என்னை உணர்ச்சி வயப்பட வைத்துள்ளது!
லண்டன், செப்.5 தந்தை பெரியார் நூறு ஆண்டுகளுக்கு முன் சொன்னதெல்லாம் இன்று உலகம் ஒப்புக்கொண்டு வருகிறது. ஆம், பெரியார் உலக மயமாகிக் கொண்டி ருக்கிறார். பெரியார் காட்டிய வழியில் ‘திராவிட மாடல்’ அரசு நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. இந்த அரிய நிகழ்ச்சியில் பங்கேற்று தந்தை பெரியார் படத்தைத் திறக்கும் நான், மிகுந்த உணர்ச்சி வயப்படுகிறேன் என்றார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (4.9.2025) இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் உருவப் படத்தை திறந்து வைத்து ஆற்றிய உரை வருமாறு:
உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழ கத்தில் நடைபெறும் சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா, அதனைத் தொடர்ந்து கருத்தரங்கு நிகழ்ச்சி மற்றும் தந்தை பெரியார் அவர்களின் படத் திறப்பு விழா ஆகிய நிகழ்ச்சிகளில், பங்கேற்று சிறப்பித்துக் கொண்டிருக்கக்கூடிய
ஆக்ஸ்ஃபோர்டு பல்ககலைக்கழகத்தின் பேராசிரியர் ஃபைசல் பிரேம்ஜி அவர்களே,
பேராசிரியர் ஜிம் லெனின்ஸ் அவர்களே,
கல்வியாளர் திருமதி பிரமிளா பெஸ்டர் அவர்களே,
தமிழ்நாடு அரசின் தொழில்துறை அமைச்சர் தம்பி டி.ஆர்.பி.ராஜா அவர்களே,
இரண்டு நாள்கள் நடைபெறவுள்ள இந்தக் கருத்தரங்கில் பங்கேற்றிருக்கக்கூடிய வல்லுநர்களே,
ஆர்வத்தோடு கலந்து கொண்டிருக்கக்கூடிய பல்வேறு நாடுகளைச் சார்ந்திருக்கக்கூடிய மாண வர்களே, ஆராய்ச்சியாளர்களே,
உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்.
பல நூறு ஆண்டுகளாக, உலகின் சிறந்த அறி வாளிகளை உருவாக்கும் இந்த ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பேசுவதை நான் பெருமையாக கருதுகிறேன். இப்போது புளகாங்கித உணர்வோடு உங்கள் முன்னால் நான் நின்று கொண்டிருக்கிறேன்.
இங்கே நான் தமிழ்நாட்டின் முதலமைச்சர், தெற்கா சிய அரசியலை புரட்டிப் போட்ட இயக்கமான தி.மு.கழகத்தின் தலைவர் என்ற தகுதியுடன் மட்டுமல்ல; பெரியாரின் பேரன் என்கின்ற கம்பீரத்துடன் உங்கள் முன்னால் நான் நின்று கொண்டிருக்கிறேன்.
பகுத்தறிவுப் பகலவன் – அறிவாசான் தந்தை பெரியாரின் படத்தை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழ கத்தில் திறந்து வைத்ததை, என்னுடைய வாழ்நாள் பெருமையாக கருதுகிறேன்.
பகுத்தறிவுப் பட்டொளி, உலகம் முழுக்கப் பரவி வருகிறது என்பதன் அடையாளம்தான் இந்த படத்திறப்பு விழா!
பெரியார் இன்று உலகம் முழுவதும் தேவைப்படுகிறார் என்பதன் அடையாளமாக, அவருடைய படத்தை திறக்க திட்டமிட்டிருக்கிறீர்கள்!
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் அறிவுடைய அடையாளம் மட்டுமல்ல; உரிமையின் அடையாளம் இது! மனித உரிமையின் அடையாளம்! உலக அடை யாளம்! அப்படிப்பட்ட பெரியாரின் படம் இங்கு திறக்கப்படுவது என்பது உள்ளபடியே பெருமைக்குரிய ஒன்றாகும்!
பெரியார் உருவாக்கிய சுயமரியாதை இயக்கத்தை உலகமயமாக்கும் நோக்கத்துடன் இந்தக் கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ள பேராசிரியர்கள் ஃபைசல் பிரேம்ஜி, ஜிம்லெனின்ஸ் உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய நன்றி!
சுயமரியாதை இயக்கத்தின் தொடர்ச்சியாக இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பொறுப்பில் இருக்கின்ற எனக்கு, இதைவிடப் பெருமை எதுவும் இருக்க முடியாது.
தந்தை பெரியாரின் கொள்கை வாரிசு என்று நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன். பலமுறை பெரியாரை நான் பார்த்திருக்கிறேன். குறிப்பாக, எங்கள் வீட்டில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு அவர் வந்திருக்கிறார். அந்த நேரத்தில் நான் அவருக்கு உணவு பரிமாறி இருக்கிறேன். இதை சொல்லும்போதே எனக்கு பெருமையாக இருக்கிறது!
ஓர் இனத்துக்கே சுயமரியாதை உணர்வை ஊட்டி தலைநிமிர வைத்த தந்தை பெரியாரை இன்றைக்கு உலகம் கொண்டாடி வருவதுதான் தமிழ்நாட்டிற்கும், திராவிட இயக்கத்திற்கும் கிடைத்திருக்கக்கூடிய மிகப்பெரிய பெருமை!
இங்கிலாந்தில் இருக்கின்ற செயிண்ட் அந்தோணி கல்லூரியும், பெல்லியோல் கல்லூரியும் இணைந்து ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் இரண்டு நாள் மாநாட்டை ஒருங்கிணைக்கிறார்கள் என்று என்னிடம் சொன்னபோது, எனக்கு அளவில்லா மகிழ்ச்சி ஏற்பட்டது.
40 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் தலைவர் ஆசிரியர் – தந்தை பெரியாருக்கு நடைபெற்ற நூற்றாண்டு விழாவில் இதே ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் பங்கேற்றார்!
நினைத்துப் பார்க்கிறேன்…
1983 செப்டம்பர் 21 ஆம் நாள், இதே ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில், மானமிகு ஆசிரியர் தமிழர் தலைவர் அய்யா வீரமணி அவர்கள் கலந்து கொண்ட தந்தை பெரியார் நூற்றாண்டு விழா நடந்தது. அது நடந்து கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அதற்குப் பிறகு, இன்றைக்கு மீண்டும் ஆக்ஸ்ஃபோர்டில் தந்தை பெரியாரின் பகுத்தறிவு ஒளி பரவுகிறது!
தந்தை பெரியாருக்கு மிக மிகப் பிடித்த சொல் என்ன என்று கேட்டீர்கள் என்றால், சுயமரியாதை!
உலகத்தில் எந்த அகராதியை கொண்டுவந்து காட்டினாலும், இதைவிட சிறந்த சொல்லைக் காட்ட முடியாது என்று சொன்னார் தந்தை பெரியார்.
ஒரு மனிதனுக்கு சுயமரியாதை எண்ணத்தை ஊட்டிவிட்டால், அவன் வெற்றிப் பெற்றிடுவான் என்று சொன்னார்.
அதுமட்டுமல்ல, “உலகத்திலேயே உயிரைக் கொடுத்து பெற வேண்டிய ஒன்றே ஒன்று சுயமரியா தைதான்” என்று அழுத்தந் திருத்தமாகச் சொன்னார்.
மனிதனின் சுயமரியாதையைக் காக்கத்தான் அனைத்து அரசியல் தத்துவங்களும் தேவை என்று சொல்லி, தான் உருவாக்கிய இயக்கத்துக்கே சுயமரி யாதை இயக்கம் என்று பெயர் வைத்தார்.
அப்படிப்பட்ட சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டை முன்னிட்டு, இந்த மாபெரும் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர்களால் ஆய்வுரைகள் நிகழ்த்தப்பட்டிருப்பதை பார்த்து மகிழ்ச்சியும், மனநிறைவும் நான் பெறுகிறேன்.
தமிழ்நாடு அரசின் திட்டக்குழு துணைத் தலைவராக சிறப்பாகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் பேராசிரியர் ஜெயரஞ்சன் அவர்களும், MITS பேராசிரியரும், வரலாற்று ஆய்வாளருமான பேராசிரியர் ஆ.இரா.வெங்கடாசலபதி அவர்களும், பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகளை ஆய்வு செய்த பேராசிரியர் எஸ்.ஆனந்தி அவர்களும் இன்றைக்கு இங்கே வந்திருக்கிறார்கள்.
பெரியாரியம் உலக மயமாகிவிட்டதா?
இந்த விழாவுக்கு மகுடம் சேர்க்கின்றது போல, தமிழ்நாட்டின் மிகச்சிறந்த ஆய்வாளர்களில் ஒருவரான பேராசிரியர் முனைவர் ஆ.இரா.வெங்கடாசலபதி அவர்களும், முனைவர் கார்த்திக் ராம் மனோகரனும் இணைந்து உருவாக்கியிருக்கக்கூடிய, ‘‘The Cambridge Companion to Periyar’’ என்ற ஆய்வுக்கட்டுரைத் தொகுப்பு ஆங்கில நூல் வெளியீட்டு விழா அமைந்திருக்கிறது. இதை வெளியிடுகின்ற பெருமையும் எனக்குக் கிடைத்திருக்கிறது!
இந்த சிறப்பான நூலை, இந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றவரான ஆ.இரா.வெங்கடாசலபதி அவர்களுடைய முயற்சியால், பெரியார் குறித்த நூலை Cambridge University Press வெளியிட்டிருக்கிறது. பெரியார் உலகமயமாகிவிட்டார் என்பதன் அடை யாளம்தான் இது!
தந்தை பெரியாரின் உலகப் பயணங்கள்!
சுயமரியாதை இயக்கத்தை அவர் சாதாரணமாக தோற்றுவிக்கவில்லை. உலகம் முழுவதும் பயணம் செய்தார். உலகம் எப்படி இருக்கிறது என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்து, தமிழ்நாட்டிற்கு எடுத்துச் சொன்னார்! தமிழ்நாடும் தலைநிமிர்ந்தது! அதனால்தான் அவர் தந்தை பெரியார்!
தந்தை பெரியாரின் உலகப் பயணங்களை சுருக்கமாக பட்டியலிட்டுச் சொல்லவேண்டும் என்றால்,
1929 இல் – மலேசியா, சிங்கப்பூருக்கும் –
1932 இல் எகிப்து, கிரீஸ், துருக்கி, ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து, போர்ச்சுக்கல், சோவியத் ரஷ்யா என்று ஓராண்டு முழுவதும் பயணம் செய்தார்.
அப்போது, இந்த இங்கிலாந்து நாட்டில், 1932 ஜூன் 16 முதல் ஜூலை 6 வரைக்கும் பல்வேறு பகுதி களுக்குப் பயணம் செய்தார். இங்கேதான், கம்யூ னிஸ்ட் தலைவர் லெனின் எழுதிய ‘மதம்’ என்ற நூலை வாங்கினார்.
இங்கே இருக்கின்ற பார்ன்ஸ்லே-வில் நடந்த கூட்டத்தில் பங்கேற்று பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கிடையே துணிச்சலாக பேசினார். அந்தக் கூட்டத்தில் இருந்த நிறைய பேர், லேபர் பார்ட்டியைச் சேர்ந்தவர்கள். அப்போது இந்தியாவில் நடந்து கொண்டிருந்தது பிரிட்டிஷ் ஆட்சி. ஆனால், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், “இங்கே தொழிலாளர் நட்பு ஆட்சியை நடத்துவதாக சொல்கிறீர்கள். ஆனால், இந்தியாவில் தொழிலாளர்களுக்கு விரோதமாக ஆட்சி நடத்துகிறீர்கள்” என்று வெளிப்படையாக குற்றம் சாட்டினார். இந்த துணிச்சல்தான் தந்தை பெரியார். அதனால்தான், காலங்கள் கடந்தும், என்றென்றும் பெரியார் என்று எல்லோராலும் நினைக்கப்படுகிறார். இன்னும் எத்தனை நூறு ஆண்டுகள் கடந்தாலும், தந்தை பெரியார் தொடர்ந்து நினைக்கப்படுவார்; போற்றப்படுவார்!
அவர் இந்தச் சமூகத்தில் விதைத்தது நாத்திகம் இல்லை; பகுத்தறிவு! அதனால்தான் “நானே சொன்னா லும், உன் புத்திக்கு சரி என்று பட்டது என்றால், ஏற்றுக்கொள், இல்லையென்றால் விட்டுவிடு” என்று சொன்னார் தந்தை பெரியார்.
வெறும் நம்பிக்கையைக் கண்டுப்பிடிப்பாக ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று சொல்லி, எல்லா வற்றையும் கேள்வி கேட்கச் சொன்னார். எல்லா வற்றுக்கும் விடையை கண்டுப்பிடிக்க வேண்டும். எதையும் லாஜிக்கலாக அணுகவேண்டும். இந்த அறிவியல் சிந்தனையைத்தான் பரப்பினார்; அறிவியல் மனப்பான்மையைத்தான் அவர் விதைத்தார்.
இன்றைக்கு ஏற்பட்டிருக்கின்ற அத்தனை அறி வியல் மாற்றங்களையும், ‘இனிவரும் உலகம்’ என்று தொலைநோக்குப் பார்வையுடன் சொன்ன சிந்தனையாளர் தந்தை பெரியார். பகுத்தறிவும், அறிவியலும் ஒரே நேர்கோட்டில் இருக்கும். அறிவின் கூர்மைதான் பகுத்தறிவு என்று எடுத்துச் சொன்னதால்தான், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் அவரைப் பற்றி அவர் மறைந்து இத்தனை ஆண்டுகள் கழித்தும் விவாதிக்கிறது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் புத்தகம் வெளியிடுகிறது.
சுயமரியாதை இயக்கத்தை 1925-ஆம் ஆண்டு தொடங்கினாலும், சுயமரியாதைச் சிந்தனையானது பெரியாருக்கு இளமைக் காலத்திலேயே வந்துவிட்டது. அவர் அப்போதே அப்படித்தான்!
அவருடைய லைஃப் ஹிஸ்டரியை கொஞ்சம் பார்த்தால், அவர் காலத்தை மீறி செய்த புரட்சிகள் புரியும்!
இளம் வயதிலேயே பெரியார் பட்ட அவமானமும் – அதனால் ஏற்பட்ட தாக்கமும்!
ஆதிக்க ஜாதியினர் வீட்டில் தண்ணீர் குடித்ததால் அவமானப்படுத்தப்பட்டதும், தாழ்த்தப்பட்டோர் வீட்டில் தண்ணீர் குடித்ததால் சொந்த வீட்டில் அவமானப்படுத்தப்பட்டதும் சிறிய வயதிலேயே அவர் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.
பெரியாரின் தங்கை மகள் அம்மாயிக்கு 10 வயதிலேயே, 13 வயது பையன்கூட திருமணமாகி, மணமான அறுபதாவது நாளே மணமகன் இறந்து விட்டார். மறுமணத்துக்கு குடும்பத்தில் உள்ள எல்லோரும் எதிர்ப்பு தெரிவித்தாலும், அதையெல்லாம் மீறி, அந்த பெண்ணுக்கு இரண்டாவது திருமணம் நடத்தி வைத்தார். மாற்று சமூகத்தினரின் காதல் திருமணங்களை ஊரார் எதிர்ப்பை மீறி நடத்தி வைத்தார்.
தெருக்களுக்கு வைக்கப்பட்ட ஜாதிப் பெயர்களை நீக்கினார். நகராட்சிப் பள்ளிகளில் தீண்டப்படாத வகுப்புக் குழந்தைகள் சேரவும், படிக்கவும் வழி கண்டார். இந்திய விடுதலைப் போராட்ட இயக்கத்தில் சேர்ந்த பெரியார், அப்போதும் சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்புவதில் முனைப்பாக இருந்தார். சேரன்மாதேவி குருகுலத்தில் எல்லோருக்கும் சமமான உணவு தரப்படவேண்டும், வைக்கத்தில் எல்லோரையும் கோயில் உள்ள தெருக்களுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று போராடினார்.
இடஒதுக்கீடு உரிமைக்காக காங்கிரஸ் மாநாடுகளில் தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானங்கள் எல்லாம் தோற்கடிக்கப்பட்டன. அங்கேயும் உயர் ஜாதியினரின் ஆதிக்கம் இருப்பதைப் பார்த்து, அரசியல் விடுதலை மட்டும் போதாது, சமூக விடுதலையும் தேவை என்று அதிலிருந்து அவர் வெளியேறினார். அப்படி உருவானதுதான், இன்றைக்கு நாம் விழா எடுத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கின்ற சுயமரியாதை இயக்கம்!
உலகில் எந்த சீர்திருத்த இயக்கத்திற்கும் இல்லாத பெருமை, புகழ் பெரியார் இயக்கத்திற்கு உண்டு!
சமூகநீதி – பெண்களுக்கு சொத்துரிமை – தீண்டாமை ஒழிப்பு – பொது இடங்களில் பட்டியலினத்தவருக்கு தடை இருக்கக் கூடாது – நில உரிமை – கைம்பெண் மறுமணம் – தமிழுக்கு முக்கியத்துவம் – சமஸ்கிருத ஆதிக்க எதிர்ப்பு – ஹிந்தி திணிப்புக்கு எதிர்ப்பு ஆகி யவைதான் சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகள்.
இந்தக் கொள்கைகளுக்காக பெரியார் அலைந்த அலைச்சல் நினைத்தே பார்க்க முடியாதது, யாரும் அலையாதது. 14.2.1937 அன்று மட்டும், ஒரே நாளில், 17 சிற்றூர்களில், பெரியார் பேசி இருக்கிறார். 16.2.1962 அன்று மட்டும் 19 கூட்டங்களில் பெரியார் பேசி இருக்கிறார். அதுவும் அப்போது அவருக்கு என்ன வயது? 82 வயது! 82 வயதிலும் பேசியிருக்கிறார்! 95 வயதிலும் 98 நாட்கள் அலைந்திருக்கிறார் தந்தை பெரியார்.
இவ்வளவு உழைப்பு எதற்காக?
நம்முடைய மண்ணில் வாழுகின்ற மனிதர்களை மானமும், அறிவும் உள்ள சுயமரியாதைமிக்க மக்க ளாக்கத்தான் அவர் ஓயாமல் உழைத்தார்.
உலகத்தில் எந்த சீர்திருத்த இயக்கத்துக்கும் இல்லாத பெருமையும், புகழும் பெரியார் இயக்கத்துக்கு உண்டு.
பெரியாரின் இந்த சாதனைகள் எல்லாம், ஆயுதம் தாங்காத புரட்சிகள்! இரத்தம் சிந்தாத புரட்சிகள்!
அவருடைய சீர்திருத்தக் கொள்கைகள் எல்லாம், சட்டங்கள் ஆவதை பார்த்த பெருமை பெரியாருக்கே உண்டானது!
இது உலகத்தில் எந்த சீர்திருத்த இயக்கத்துக்கும் கிடைக்காத புகழ்!
உலகம் எத்தனையோ சிந்தனையாளர்களை, சீர்திருத்தவாதிகளைப் பார்த்திருக்கிறது! எத்தனையோ புரட்சிகரமான சிந்தனைகளை அவர்கள் பேசியிருக்கிறார்கள். ஆனால், அந்த சிந்தனைகளை செயல்வடிவமாக்குகின்ற ஆட்சியாளர்கள் இருக்க மாட்டார்கள்.
தந்தை பெரியார் வழியில், அண்ணா – கலைஞர் தலைமையில் ஆட்சிகள் சாதித்தவை!
நம்முடைய தமிழ்நாட்டில் மட்டும்தான், ஒரு சீர்திருத்த இயக்கம், அரசியல் இயக்கமாக எழுச்சிப் பெற்று, வெகுசன மக்களை கன்வின்ஸ் செய்து, அவர்களுடைய ஆதரவை வாக்குகளாக பெற்று, சீர்திருத்தக் கருத்துக்களை நடைமுறைப்படுத்தி, அவற்றை சட்டமாகவும் ஆக்கி அந்தச் சமுதாயத்தை மேன்மையடைய வைத்திருக்கிறது.
சமூகநீதிக் கொள்கையை தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுமைக்குமான கொள்கையாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெற வைத்தவர் தந்தை பெரியார். தமிழ்நாடு என்று பெயர் சூட்டப் போராடினார் தந்தை பெரியார். ஆட்சி அதிகாரத்தை அடைந்து, அதைச் செய்து காட்டினார் பேரறிஞர் அண்ணா. முத்தமிழறிஞர் கலைஞர் அனைத்துச் ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் கொண்டு வந்தார். பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை வேண்டும் என்று பெரியார் தீர்மானம் கொண்டு வந்தார். அதை சட்டம் ஆக்கியவர் முதலமைச்சராக இருந்த கலைஞர். அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை, அனைவருக்கும் அதிகாரம் வேண்டும் என்று பெரியார் சொன்னார். அதைச் சட்டம் ஆக்கி நிறைவேற்றித் தந்தது திராவிட இயக்கத்தின் ஆட்சி.
இவை எல்லாவற்றையும்விட, நான் பெருமையோடு சொல்கிறேன், ஜாதியைக் கடப்பதற்காக இந்தியா விலேயே வேறு எந்த மாநிலமும் செய்யாத முன்னெ டுப்பாக, பேரறிஞர் அண்ணா அவர்கள் “சுயமரியாதைத் திருமணச் சட்டத்தையும்”, தலைவர் கலைஞர் அவர்கள் “சமத்துவபுரம்” திட்டத்தையும் கொண்டுவந்து, தந்தை பெரியாரின் எண்ணங்களுக்குச் செயல்வடிவம் கொடுத்திருக்கிறோம்!
பெரியாரால் கல்வி பெற்றவர்கள் – வேலை வாய்ப்பைப் பெற்றவர்கள் – அதிகாரம் பொருந்திய பதவிக்கு வந்தவர்கள் – குறிப்பாக பெண்ணினம் அடைந்த வளர்ச்சி – ஒடுக்கப்பட்ட மக்கள் அடைந்த உயர்வுகள் அனைத்தையும் இன்றைக்கு நாம் கண் முன்னால் பார்த்துக் கொண்டிருக்கிறோம். படிக்கக் கூடாது என்று கல்வி மறுக்கப்பட்டவர்கள் இப்போது அனைத்துக் கல்வி நிலையங்களிலும் முதலிடத்துக்கு வந்து நிற்கிறார்கள். அதேபோல, வீட்டை விட்டே வெளிய வரக்கூடாது என்று தடுக்கப்பட்ட பெண்கள் – இன்று உலகத்தையே வலம் வருகிறார்கள். உலகத்தைத் தாண்டி விண்வெளிக்கே சென்று வருகிறார்கள். கோயிலுக்குள்ளே கால் வைக்கக் கூடாது என்று தடுக்கப்பட்டவர்களுடைய கரங்கள் இன்று கருவறையில் வழிபாட்டை நடத்திக் கொண்டிருக்கிறது.
இந்த அய்ரோப்பிய பயணத்தில் நான் பார்ப்பது, ஒடுக்கப்பட்ட குடும்பங்களில் இருந்து முன்னேறி வந்து ஏராளமான பேர் இங்கே நல்ல பொசிஷனில் இருக்கிறார்கள்.
பெரியார் காண விரும்பிய வளர்ச்சியை தமிழ்நாட்டில் செயல்படுத்தி வருகிறோம்!
தமிழ்நாடு எல்லாவற்றிலும் முன்னேறிக் கொண்டு வருகிறது. கல்வியில், பொருளாதாரத்தில், தொழில் வளர்ச்சியில், வாழ்க்கைத்தரத்தில், உள்கட்டமைப்பு வசதியில் முன்னேறி இருக்கிறோம். உழைப்பின் சாதனை, உற்பத்தி சாதனையாக மாறி இருக்கிறது.
பட்டினிச் சாவு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. வளமான தமிழ்நாடாக வளர்த்து வருகி றோம். மற்ற மாநிலங்கள் வியந்து பார்க்கும் மாநிலமாக உயர்ந்திருக்கிறோம். இதுதான் திராவிட இயக்கத்தின் சாதனை!
பெரியார் கண்ட வளர்ச்சியை நாங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்திக் காட்டி வருகிறோம். பெரியாருக்கே இந்த ஆட்சி காணிக்கை என்று சொன்னார் பேரறிஞர் அண்ணா அவர்கள். தந்தை பெரியார் மறைந்தபோது, அரசு மரியாதைக்கு ஆணை பிறப்பித்தார் தமிழினத் தலைவர் கலைஞர். பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாக அறிவித்து, செப்டம்பர் 17 அன்று தமிழ்நாட்டையே உறுதிமொழி எடுக்க வைத்திருக்கிறது நம்முடைய ‘திராவிட மாடல்’ அரசு.
அதற்காக, பெரியார் கண்ட கனவுகள் எல்லா வற்றையும் நாம் நிறைவேற்றிவிட்டோம் என்று சொல்லமாட்டேன். இந்த நூறாண்டுகளில் ஒரு சமூகமாக நாம் அடைந்திருக்கின்ற வளர்ச்சி என்பது, ஒரு குழந்தை நடை பழகுகின்ற மாதிரிதான்! நம்மு டைய பயணம் நெடியது. நாம் செல்ல வேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது. இந்தப் பயணத்தில் ஏற்படுகின்ற தேக்கங்களை – தேவையற்ற இடைஞ்சல்களை – பழைய குளறுபடிகளை நாம் ஒதுக்கவேண்டும். போலி பெருமைகளில் சிக்கி மறுபடியும் பின்னோக்கிப் போய்விடக் கூடாது. நம்மை பின்னோக்கி இழுக்க அத்தனைவிதமான தந்திரங்களையும் மேற்கொள்ளுவார்கள். கொஞ்சம் ஏமாந்தாலும், நம்முடைய அத்தனை உழைப்பும் கேள்விக்குறியாகிடும்.
பெரியார் சொன்னதெல்லாம் இன்று உலகம் ஒப்புக்கொண்ட உண்மைகள்!
ஜாதி வேறுபாடுகளையும், ஏற்றத்தாழ்வுகளையும் முற்றிலுமாக விலக்குகின்ற பயணத்தின் பல்வேறு படி நிலைகளை நாம் படிப்படியாகத் தாண்டி வரவேண்டும். அதற்காகத் தான் இந்த நிகழ்ச்சி. இதற்கான முயற்சிகளில் திராவிட முன்னேற்றக் கழகமும், நம்முடைய திராவிட மாடல் அரசும் தொடர்ந்து பயணிக்கிறது. 100 ஆண்டுகளுக்கு முன்பு, சுயமரியாதை இயக்கம் எந்த நோக்கத்துக்காகத் தொடங்கப்பட்டதோ, அந்த நோக்கம் படிப்படியாக நிறைவேறி வருகிறது.
* பிறந்த நாடு
* பேசும் மொழி
* வாழும் சூழ்நிலை
இதற்கெல்லாம் கட்டுப்பட்டு அறிவுரை சொன்னவர்கள் மத்தியில், இதற்கெல்லாம் வெளியே நின்று அறிவுரை சொன்னவர் பெரியார். திருவள்ளுவர் திருக்குறளை தமிழில் எழுதினாலும், அது உலகப் பொதுமறையாக இருப்பதைபோல, பெரியார் சிந்தனைகள் உலகம் முழுக்கத் தேவையானவை. உலக சமுதாயம் ஏற்றுக்கொள்ளத் தக்கவை. உலகமே கூட்டுறவுமயம் ஆகவேண்டும் என்று சொன்னார் பெரியார். மனிதப்பற்று தவிர வேறு எந்தப் பற்றும் தேவையில்லை என்று சொன்னார் பெரியார். நிறபேதம் இல்லை! இரத்தபேதம் இல்லை! பால் பேதம் இல்லை! என்று பெரியார் சொன்னதெல்லாம் இன்றைக்கு உலகம் ஒப்புக்கொண்ட உண்மைகள்.
அந்த வகையில், பெரியாரின் சிந்தனைகள் உலகம் முழுவதும் பரவவேண்டும். இங்கே நிலவுகின்ற அனைத்து விதமான ஒடுக்குமுறைகளையும் களையவேண்டும். சமூக உரிமைகள் முதல் தனிமனித உரிமைகள் வரை அனைத்தும் நிலைநாட்டப்படவேண்டும். ஒவ்வொரு பிரிவினரின் உரிமையையும் இடஒதுக்கீடு என்ற உரிமை மூலமாக நிலைநாட்டி இருக்கிறோம். அதேபோன்ற இடஒதுக்கீட்டுக் கொள்கையை அனைத்து நாடுகளும், ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களுக்கு வழங்கவேண்டும். சமூக உரிமையில் அக்கறை கொண்ட அமைப்புகள் முன்னெடுக்கவேண்டும். அஃபிர்மேட்டிவ் ஆக்சன் என்று சில நாடுகளில் இப்போதும் இருக்கிறது. கேம்பஸ் டைவர்சிட்டி, ஸ்டூடண்ட் டைவர்சிட்டி என்று பல முன்னணி கல்லூரி, பல்கலைக் கழகங்களிலும் இருக்கிறது.
என்னை உணர்ச்சிவயப்பட வைத்த நிகழ்ச்சி இது!
பல்வேறு உலக மொழிகளில் பெரியாரின் கருத்துகளை தமிழ்நாடு அரசு மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறது. இன்றைக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் வெளியிட்டு இருப்பது போல, மற்ற பல்கலைக்கழகங்களும் வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
“சுயமரியாதை உணர்ச்சிதான் உலக மக்களையே ஒரு குடும்ப சகோதரர்களாக மாற்றும். அப்போதுதான் இந்த இயக்கத்தின் உண்மைச் சக்தியும், பெருமையும் வெளிப்படும்’’ என்று பெரியார் சொன்னார். பெரியாரின் சுயமரியாதைக் கொள்கையை வென்றெடுக்க இதுபோன்ற கருத்தரங்குகள் வழிவகுக்கும்.
தமிழ்நாடு முதலமைச்சராக எத்தனையோ வெளி நாடுகளுக்கு நான் சென்றிருக்கிறேன். அங்கே நடை பெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு இருக்கிறேன். ஆனால், இந்த நிகழ்ச்சி, என்னை உணர்ச்சிவயப்பட வைத்திருக்கிறது. அந்த உணர்ச்சிக்கு உரியவர் யாரென்றால் தந்தை பெரியார். காரணம், இது பெரியாருக்கான நிகழ்ச்சி!
லண்டனில் இருக்கின்றேனா இல்லை, தமிழ்நாட்டில்தான் இருக்கின்றேனா என்று ஒரு சந்தேகம் வந்துவிட்டது. அந்த வகையில், இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது. இந்த அழகான, அவசியமான, அறிவுப்பூர்வமான, ஆக்கப்பூர்வமான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து, எல்லோருக்கும் எல்லாம் செய்து, பெருமைப்படுத்தியிருக்கும் எல்லோருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். பெரியார் உலகமயம் ஆகிறார். உலகம், மானுடத்தன்மையை மதிப்பதாக மாறட்டும்.
நன்றி, வணக்கம்.
– இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.