‘‘தோழர்’’ என்று அழையுங்கள் என்று முதன்முதலில் சொன்னவர் தந்தை பெரியார்!
தந்தை பெரியார் பிறப்பதற்கு முன்னால் தமிழ்நாடு; தந்தை பெரியார் பிறந்ததற்குப் பின்னால் தமிழ்நாடு!
கண்ணியமிக்க மனிதர்கள் திராவிடர் கழகத் தோழர்கள்!
திராவிடர் கழகத் தொழிலாளர்களின் 4 ஆவது மாநில திறந்தவெளி மாநாட்டில்
தமிழ்நாடு தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் உரைதாம்பரம், மே 31 ‘‘தோழர்’’ என்று அழையுங்கள் என்று முதன்முதலில் சொன்னவர் தந்தை பெரியார்! தந்தை பெரியார் பிறப்பதற்கு முன்னால் தமிழ்நாடு; தந்தை பெரியார் பிறந்ததற்குப் பின்னால் தமிழ்நாடு! இன்றைக் குத் ‘திராவிட மாடல்’ அரசு நடைபெறுவதற்குக் காரணம் தந்தை பெரியார்தான்! கண்ணியமிக்க மனிதர்கள் திரா விடர் கழகத் தோழர்கள்! என்றார் தமிழ்நாடு தொழிலா ளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் அவர்கள்.
திராவிடர் கழகத் தொழிலாளரணியின்
4 ஆவது மாநில மாநாடு
கடந்த 20.5.2023 அன்று தாம்பரத்தில் நடைபெற்ற திராவிடர் கழகத் தொழிலாளர் அணியின் 4 ஆவது மாநில திறந்தவெளி மாநாட்டில் தமிழ்நாடு தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
திராவிடர் கழகத் தொழிலாளர் அணியின் 4 ஆவது மாநில மாநாட்டிற்குத் தலைமையேற்று இந்நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கக் கூடிய நம்முடைய மரியாதைக்கும், போற்றுதலுக்கும் உரிய தமிழர் தலைவர் மானமிகு அய்யா ஆசிரியர் அவர்களே,
இந்நிகழ்வில் கலந்துகொண்டு சென்றிருக்கக் கூடிய மாண்புமிகு நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அண்ணன் கே.என்.நேரு அவர்களே,
சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் எஸ்.ஆர்.ராஜா அவர்களே,
எனக்கு முன் ஒரு சிறப்பானதொரு உரையை ஆற்றி அமர்ந்திருக்கக்கூடிய திராவிடர் கழகத் துணைத் தலைவர் அய்யா மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,
மரியாதைக்குரிய மாணவர் கழக மாநில செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களே,
நன்றியுரையாற்றவிருக்கின்ற அண்ணன் முத்தையன் அவர்களே,
நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றி அமர்ந் துள்ள திராவிடர் கழகப் பொதுச்செயலாளரும், என் பாசத்திற்குரிய அருமை அண்ணனுமான துரை.சந்திர சேகரன் அவர்களே,
பொருளாளர் அண்ணன் குமரேசன் அவர்களே,
இந்நிகழ்வில் கலந்துகொண்டிருக்கின்ற திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் பாசத்திற்குரிய அன்புத்தம்பி மானமிகு வீ.அன்புராஜ் அவர்களே,
பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் அவர்களே, துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி அவர்களே,
மானமிகு அண்ணன் குணசேகரன் அவர்களே, அமைப்புச்செயலாளர்கள் செல்வம் அவர்களே, பன்னீர் செல்வம் அவர்களே, ஊமை.ஜெயராமன் அவர்களே, இரா.செந்தூர்பாண்டியன் அவர்களே,
மற்றும் என்னோடு வருகை தந்திருக்கின்ற சேர்மன் இப்ராகிம் அவர்களே, செயலாளர் தம்பி செல்வம் அவர்களே,
திராவிடர் கழகத்தினுடைய
அன்புச் சொந்தங்களே!
இங்கே நீண்ட நேரமாக அய்யா ஆசிரியர் அவர் களுடைய உரையைக் கேட்கவேண்டும் என்பதற்காக இங்கே அமர்ந்திருக்கக் கூடிய திராவிடர் கழகத்தினு டைய அன்புச் சொந்தங்களே உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கம்.
எப்பொழுதுமே நம்முடைய தமிழர் தலைவர் அவர்கள் எந்த நிகழ்ச்சிக்கு என்னுடைய பெயரைப் போட்டு அழைத்தாலும், நான் தவறாமல் வருவதற்கு என்ன காரணம் என்றால், அவர் எனக்கு சொந்தக்காரர்.
நான் இப்படி சொல்வதால், எப்படி சொந்தம் என்று வேறு கணக்குப் போடாதீர்கள்.
தந்தை பெரியாருக்கு நான் சொந்தக்காரன் என்றால், ஆசிரியர் அவர்களுக்கும் நான் சொந்தக்காரன்தான். எங்களையெல்லாம் சொந்தக்காரர்களாக ஆக்குவதற் காகத்தான் தந்தை பெரியார் அவர்கள் இத்தனை ஆண்டுகாலமாகப் போராடி இருக்கிறார்.
தந்தை பெரியார் விதைத்த விதைதான்!
நான் இவ்வளவு பெரிய மேடையில், வேட்டி – சட்டை அணிந்து இவ்வளவு கம்பீரமாக வந்து நிற்கிறேன் என்று சொன்னால், தந்தை பெரியார் விதைத்த விதை தான்.
தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் அண்ணன் தளபதியார் அவர்கள், இன்றைக்குத் ‘திராவிட மாடல்’ ஆட்சி நடத்துகிறார் என்று சொன்னால், அதற்குத் தந்தை பெரியார் அவர்கள்தான் காரணம். வேறு யாரும் காரணமல்ல.
இன்றைக்குப் பெரியாருடைய மறு உருவமாக இருக்கக்கூடிய நம்முடைய ஆசிரியர் அய்யா தமிழர் தலைவர் அவர்கள்தான் அதற்குக் காரணம்.
இன்றைக்குத் ‘திராவிட மாடல்’ அரசு நடைபெறுவதற்குக் காரணம்
தந்தை பெரியார்தான்!
ஆகவே, இன்றைக்குத் ‘திராவிட மாடல்’ அரசு, சமூகநீதி அரசு தமிழ்நாட்டில் சிறப்பாக நடைபெறுகிறது என்று சொன்னால், அதற்குத் தந்தை பெரியார்தான் காரணம் என்று நான் சொல்கிறேன்.
ஆசிரியர் அய்யா அவர்களைப் பார்த்து நான் பொறாமைப்படுகிறேன்.
ஏனென்றால், ஆசிரியர் அய்யா அவர்களுக்கு வயது 90 தாண்டியது என்று சொன்னார்கள்.
ஆசிரியர் அய்யா மேல் எனக்குப் பாசம் அதிக முண்டு: பொறாமையும் அதிகம் உண்டு.
ஏனென்றால், 90 வயதில், 20 வயது இளைஞனைப் போல இங்கே அமர்ந்திருக்கின்றார். அதைப் பார்க்கும் பொழுது எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சியாக இருக்கிறது.
17 வயதிலேயே, 227 இடங்களில் கூட்டங்கள்
ஆசிரியர் அய்யா அவர்களிடம் வேண்டுகோளாக வைக்கிறேன் – அவர் 12 வயதில் காரைக்குடிக்குப் பக்கத்தில், இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற முதல் மாவட்ட மாநாட்டில் உரையாற்றி இருக்கிறார்.
17 வயதில், 227 இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருக்கின்றார்.
அந்த வயதில், அவர் எவ்வளவு தூரம் பயணம் செய்திருக்கிறார் என்றால், 23 ஆயிரத்து 422 கிலோ மீட்டர் பயணம் செய்திருக்கிறார்.
அதைப் பார்த்து நான் அசந்து போனேன். ஆசிரியர் அய்யா அவர்கள் நூற்றுக்கணக்கான புத்தகங்களை எழுதியிருக்கிறார்.
56 முறை சிறைச்சாலைக்குச் சென்றிருக்கிறார்.
தந்தை பெரியார், யாரையெல்லாம் கைதூக்கிவிட வேண்டும் என்று நினைத்தாரோ – ஒடுக்கப்பட்ட மக்கள், அடித்தட்டு மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப் பட்ட மக்கள் என்று, யாரையெல்லாம் கைதூக்கிவிட வேண்டும் என்று விரும்பினாரோ, அதைத் தொடர்ந்து நடமாடும் பெரியார் அய்யாவாக இருக்கக்கூடியவர்தான் நம்முடைய தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள்.
எனக்கு 90 வயது என்றால், ‘‘நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள், உங்களுக்கு வேறு வேலையில்லை” என்று சொல்லி, நான் போய் படுத்துக்கொள்வேன்.
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரைப் போல் அமர்ந்திருக்கின்றார் நம்முடைய ஆசிரியர்!
ஆனால், ஆசிரியர் அய்யா அவர்களைப் பாருங்கள், 94 வயதில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் எப்படி அமர்ந்திருந்தாரோ, அதேபோல அமர்ந்திருக்கின்றார். அந்த அளவிற்குச் சிறப்புமிகுந்த மனிதர்.
தண்ணீர் தராத கருநாடகத்திற்கு
நாம் ஏன் மின்சாரம் தரவேண்டும் என்று போராடியவர் ஆசிரியர்!
56 முறை சிறைச்சாலைக்குப் போனதில், எங்களுக்கு ஒரு பெருமை என்னவென்றால், கடலூர் மாவட்டத்தில் பிறந்தவர், கடலூரில் நடைபெற்ற ஒரு பெரிய போராட் டத்தில் கலந்துகொள்கிறார்.
அந்தப் போராட்டம் என்னவென்றால், கருநாடக அரசாங்கம் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தரவில்லை. தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் கொடுக்காத கருநாடகத்திற்கு ஏன் நாம் நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தைக் கொடுக்கவேண்டும் என்று நெய்வேலியிலேயே போராட்டம் நடத்தினார்.
நான் உள்ளபடியே பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சியடைகிறேன்!
அப்படிப்பட்ட ஆசிரியர் அய்யா அவர்கள், இந்த மாநாட்டிற்கு என்னை அழைத்துப் பேச வைத்தமைக்காக நான் உள்ளபடியே பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சி யடைகிறேன். உள்ளபடியே நான் பெரியாரைப் பார்த்ததில்லை; பழகியதில்லை; பேசியதில்லை.
பெரியாரை நான் எங்கே பார்க்கிறேன் என்றால், பெரியாராக நம்முடைய ஆசிரியர் அய்யா அவர் களைத்தான் நான் பார்க்கிறேன்.
இந்த நேரத்தில் ஒரு கருத்தை நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
இந்திய வரலாற்றில் கி.மு. – கி.பி.!
இந்திய வரலாற்றில், ஏசு நாதர் பிறந்த பொழுது, அவர் பிறந்த நாளைக் குறிப்பிட்டு, ஏசு பிறந்ததற்குப் பின்னால், அது கி.பி. – ஏசு பிறப்பதற்கு முன்னால், அது கி.மு.
வரலாற்றில் படித்திருப்போம் கி.மு. என்றால் கிறிஸ்து பிறப்பதற்கு முன்னால்; கி.பி. என்றால், கிறிஸ்து பிறப்பதற்குப் பின்னால் என்று வைத்திருக்கிறோம்.
தந்தை பெரியார் பிறப்பதற்கு முன்னால் தமிழ்நாடு; தந்தை பெரியார் பிறந்ததற்குப் பின்னால் தமிழ்நாடு.!
என்னுடைய தனிப்பட்ட கருத்து என்னவென்றால், தந்தை பெரியார் பிறப்பதற்கு முன்னால் தமிழ்நாடு; தந்தை பெரியார் பிறந்ததற்குப் பின்னால் தமிழ்நாடு என்று வைத்துக் கொள்வதில் தவறில்லை.
தந்தை பெரியார் பிறப்பதற்கு முன்னால் தமிழ்நாடு எப்படி இருந்தது என்றால், தாழ்த்தப்பட்டவர்கள், அடக்கப்பட்டவர்கள், விளிம்பு நிலை மக்கள் சாலை களில் நடக்க முடியாது; செருப்புப் போட்டுப் போக முடியாது; உணவுக் கூடங்களில் சாப்பிட முடியாது; கோவிலுக்குள் போக முடியாது; உணவு விடுதியில் சாப்பிட முடியாது; பேருந்துகளில் ஒன்றாகப் போக முடியாது. இன்றைக்கும் சில இடங்களில் போக முடிய வில்லை. குளத்தில் தண்ணீர் எடுக்க முடியவில்லை. இதுதான் தந்தை பெரியார் பிறப்பதற்கு முன்னால்.
தந்தை பெரியார் பிறந்ததற்குப் பின்னால், ஆண்டான் – அடிமை; இருப்பவன் – இல்லாதவன்; ஏழை – பணக்காரன்; உயர்ந்தவன் – தாழ்ந்தவன் என்கிற வர்க்க வேறுபாடுகளை களைந்தெறிவதற்காக தன் வாழ் இறுதி மூச்சுநாள் வரை போராடினார்; அவருடைய கடைசி காலகட்டத்தில் மூத்திரப் பையைக்கூட மேடைக்கு மேடை தூக்கிச் சென்று, ஒடுக்கப்பட்ட மக்கள், அடக்கப் பட்ட மக்கள் சமூகத்தில் தலைநிமிர்ந்து நடக்கவேண்டும் என்பதற்காகப் போராடினார் தந்தை பெரியார் அவர்கள்.
அத்தனை உரிமைகளையும் பெற்றுத் தந்தவர் தந்தை பெரியார் அவர்கள்
இன்றைக்குப் பார்த்தீர்களேயானால், கோவிலுக்குள் செல்லலாம்; பேருந்துகளில் ஒன்றாகப் போகலாம்; ரயிலில் ஒன்றாகப் போகலாம்; குளத்தில் தண்ணீர் எடுக்கலாம்; பெண்கள் ரவிக்கை அணியலாம்; பெண்கள் கால் மேல் கால் போட்டு அமரலாம்; மாமனார், மாமியார் முன் பெண்கள் அமரலாம். இன்றைக்கு இத்தனை உரிமைகளையும் பெற்றுத் தந்தவர் தந்தை பெரியார் அவர்கள்.
அதனால்தான் சொன்னேன், தந்தை பெரியார் பிறப்பதற்கு முன்னால் – தந்தை பெரியார் பிறப்பதற்குப் பின்னால் என்று.
இதை நான் எந்தப் புத்தகத்தையும் பார்த்துப் படிக்க வில்லை; நானே மனதில் நினைத்ததை சொன்னேன். என் மனதில் பெரியார் என்றால் யார்? என்று சிந்தித்தேன். அப்பொழுதுதான் இது உதயமானது என் மனதில்.
நான் இந்த மேடையில் இவ்வளவு கம்பீரமாக நிற்கி றேன் என்றால், பெரியார் பிறந்ததற்குப் பின்னால்தான் இந்த உரிமை எனக்குக் கிடைத்திருக்கிறது.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டம்!
ஆகவே அப்படிப்பட்ட பெரியார் பிறந்த மண்ணில் இந்த மாநாடு நடைபெறுவது உள்ளபடியே மகிழ்ச்சியாக இருக்கிறது.
பெரியார் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டு வந்திருக்கிறார். கோவிலுக்குள் எந்தத் தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் உள்ளே செல்லக்கூடாது என்று சொன்னார்களோ, அதை ஒழிக்கவேண்டும் என் பதற்காக அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்ற சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்று விரும்பினார்.
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக வந்தவுடன், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற சட்டத்தைக் கொண்டு வந்தார்.
1929 தந்தை பெரியாரின் தீர்மானமும் – 1989 ஆம் ஆண்டு முதலமைச்சர் கலைஞரின் சட்டமும்!
1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை முதல் மாகாண மாநாட்டில், பெண்களுக்கு சமூகநீதி வேண்டும்; பெண்களுக்கும் சமத்துவம் வேண்டும்; பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும் என்கிற தீர்மானத்தைக் கொண்டு வந்தார் தந்தை பெரியார் அவர்கள்.
1989 ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன், பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு என்கிற சட்டத்தை நிறை வேற்றினார்.
பெண்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில்
50 சதவிகித இட ஒதுக்கீடு
இன்றைக்கு இருக்கின்ற நம்முடைய முதலமைச்சர், தன்னுடைய தந்தையைவிட ஒருபடி மேலே சென்று, உள்ளாட்சித் தேர்தலில் 50 சதவிகித இட ஒதுக்கீட்டைப் பெண்களுக்கு வழங்கவேண்டும் என்கிற உத்தரவைப் போட்டிருக்கிறார்.
இதெல்லாம் வருவதற்கு யார் காரணம்?
தந்தை பெரியார் பிறந்ததற்குப் பின்னால், அவரு டைய தியாகம், அவருடைய உழைப்பு, அவர் விரும் பியபடி இன்றைக்கு இந்நிலை வந்திருக்கிறது என்று சொன்னால், அது மிகையாகாது என்பதை நான் இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
இன்றைக்கு நடக்கின்ற மாநாட்டைப் பொறுத்த வரையில், இது தொழிலாளரணி என்கிற மாநாடு என்பதால், நம்முடைய அமைச்சர், தொழிலாளர் நலன் காக்கின்ற துறையில் இருக்கின்ற அமைச்சராக இருக்கின்ற கணேசன் கலந்துகொள்ளாமல் இருந்தால், அது சரியாக இருக்குமா? கட்டாயம் உரிய நேரத்தில் கலந்துகொள்ளவேண்டும் என்கிற காரணத்தினால்தான் நான் கலந்துகொண்டிருக்கின்றேன்.
‘‘தோழர்’’ என்று அழையுங்கள் என்று முதன்முதலில் சொன்னவர் தந்தை பெரியார்!
இந்தத் தொழிலாளர் அணி மாநாட்டில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புவது என்னவென்றால், தந்தை பெரியார் அவர்கள், சோவியத் நாட்டிற்குச் சென்று, அங்கே மே தின பேரணியைக் கண்டு களித்து, நாட்டிற்குத் திரும்பியவுடன், ‘மகாகணம் பொருந்திய’, ‘திரு’, ‘திருமதி’ என்பதையெல்லாம் விட்டுவிட்டு, ‘‘தோழர்” என்று அழையுங்கள் என்று முதன்முதலில் சொன்னவர் தந்தை பெரியார் அவர்கள்தான்.
அப்படிப்பட்ட தந்தை பெரியார் அவர்கள், தொழிலாளர்கள் எப்படி வாழவேண்டும்? எப்படி இருக்கவேண்டும்? என்கிற விதைகளை இந்த மண்ணிலே தூவிச் சென்றிருக்கின்றார்.
‘‘தொழிலாளர் நலத் துறை’’ என்பதை உருவாக்கியவர் டாக்டர் கலைஞர்
அந்த அடிப்படையில்தான் தந்தை பெரியாருடைய லட்சியங்களையும், கொள்கைகளையும் தன்னுடைய மனதில் ஏந்தியிருக்கின்ற முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள், 1969 ஆம் ஆண்டு முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடனேயே, தொழில், தொழிலாளர் நலன், கூட்டுறவுத் துறை என்று இருந்த அந்தத் துறையை மாற்றி, தொழிலாளர்களின் நலன் காப்பதற்காக, ‘‘தொழிலாளர் நலத் துறை” என்பதை உருவாக்கியவர் டாக்டர் கலைஞர் என்பதை இந்த நேரத்தில் நான் நினைவுபடுத்த விரும்புகின்றேன்.
அதற்குப் பிறகு இந்தியாவிற்கெல்லாம் முன்னோடி யாக பல்வேறு அமைப்புச் சாரா தொழிலாளர் நல வாரியங்களை – அது உப்புத் தொழிலாளர் வாரியமாக இருந்தாலும் சரி, முடிதிருத்துநர் வாரியமாக இருந்தாலும் சரி, பனை மரம் ஏறுகின்ற தொழிலாளர் வாரியமாக இருந்தாலும் சரி, ஆட்டோ ஓட்டும் தொழிலாளர் நல வாரியமாக இருந்தாலும் சரி, வீட்டு வேலை செய்கின்ற வர்களின் நல வாரியமாக இருந்தாலும் சரி – பல்வேறு நல வாரியங்களை உருவாக்கி, அவர்களுக்கெல்லாம் நலத்திட்டங்களை உருவாக்கித் தந்தவர்தான் நம்முடைய முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் என்பதை நான் இந்த நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகின்றேன்.
தொழிலாளர்களின் பிரச்சினைகளை
உடனடியாக நீக்குங்கள் என்றார் தளபதி
எல்லாவற்றையும்விட, நம்முடைய முதலமைச்சர், தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர், சமூகநீதி ஆட்சி நடத்துகின்ற முதலமைச்சர் அவர்கள், ‘திராவிட மாடல்’ ஆட்சி நடத்துகின்ற முதலமைச்சர் அவர்கள், ஆட்சிப் பொறுப்பேற்று, தொழிலாளர் துறை அமைச்சராக என்னை நியமித்தவுடன் என்னை அழைத்து, ‘‘கணேசன், தொழிலாளர்களுக்கு கடந்த ஆண்டில் என்னென்ன பிரச்சினைகள் இருந்ததோ, அவற்றையெல்லாம் நீங்கள் நீக்கவேண்டும்; தேவைப்பட்டால் என்னுடைய கவனத் திற்குக் கொண்டு வந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று சொன்ன அடிப்படையில், உடனடியாக அதனை ஆய்வு செய்தோம்; அப்படி பார்க்கும்பொழுது ஒரு லட்சத்து 7 ஆயிரம் தொழிலாளர் குடும்பங்களுக்கு வழங்கவேண்டிய நிலுவைத் தொகை இருந்தது 10 ஆண்டுகாலத்தில்.
ஒருவருக்கு விபத்து நடந்து 11 ஆண்டுகளாக பணம் கிடைக்கவில்லை. நாம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகுதான் கொடுத்தோம்.
24 மணிநேரத்தில் 50 ஆயிரம் தொழிலாளர் குடும்பங்களுக்கு…
ஆக, அந்த ஒரு லட்சத்து 7 ஆயிரம் தொழிலாளர் குடும்பங்களுக்கு, மூன்று மாதக் காலத்தில் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுத்து, முதலமைச்சரின் கவனத் திற்குக் கொண்டு சென்று, ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், ஒரே நாளில் 50 ஆயிரம் தொழிலாளர் குடும்பங்களுக்குச் சேரவேண்டிய பணத்தைச் சேர்த்தது ‘திராவிட மாடல்’ அரசு. ஒரு நாளில் என்றால், முதலமைச்சர் எப்பொழுது கொடுத்தாரோ, அதிலிருந்து 24 மணிநேரத்தில் 50 ஆயிரம் தொழிலாளர் குடும்பங்களுக்குப் பணம் போய்ச் சேர்ந்தது.
அதற்குப் பிறகு, 2 மாதங்கள் கழித்து, மீதம் இருந்த 57 ஆயிரம் தொழிலாளர் குடும்பங்களுக்கு, தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் திருக்கரத்தால் அவர்களுக்கு சேரவேண்டிய தொகையை சேர்த்த அரசாங்கம்தான் நம்முடைய தளபதி அரசாங்கம் என்பதை நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
கடந்த 10 ஆண்டுகாலமாக வாரியங்களில் இருந்த உறுப்பினர்கள் லட்சக்கணக்கானோர் ஒன்றும் நடை பெறவில்லை என்று சலித்து விட்டார்கள்.
ஒன்றரை ஆண்டு காலத்தில், 13 லட்சத்து 47 ஆயிரத்து 468 பேர் புதிதாக வாரியங்களில் உறுப்பினராக சேர்ந்தனர்!
ஆனால், நம்முடைய தளபதி அண்ணன் 2021 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் தேதி முதலமைச்சராகப் பொறுப்பேற்றதுமுதல் 30.4.2023 ஆம் தேதிவரை ஒன்றரை ஆண்டு காலத்தில், 13 லட்சத்து 47 ஆயிரத்து 468 பேர் புதிதாக வாரியங்களில் உறுப்பினர்களாக சேர்ந்திருக்கிறார்கள்.
ஏனென்றால், இந்த ஆட்சியில் நடக்கும்; கிடைக்கும் என்கிற நம்பிக்கையின் அடிப்படையில்தான் அவர்கள் இணைந்திருக்கின்றார்கள்.
லட்சத்து 4 ஆயிரத்து 372 பேருக்கு
நிலுவைத் தொகை!
11 லட்சத்து 4 ஆயிரத்து 372 பேருக்கு நிலுவைத் தொகையை வழங்கியிருக்கின்றோம்.
842 கோடியே 40 லட்சத்து 13 ஆயிரத்து 638 ரூபாயை இந்த இரண்டு ஆண்டுகாலத்தில், குடும்ப ஓய்வூதியம், தனி நபர் ஓய்வூதியம், விபத்து, மரணம், கல்வி இதுபோன்ற கொடுக்கப்படாமல் இருந்த நிலுவைத் தொகைகளைக் கொடுத்தோம். 5 ஆண்டுகள், 6 ஆண்டுகள், 7 ஆண்டுகளாக இருந்த நிலுவைத் தொகை களையெல்லாம் கொடுத்தோம்.
மூன்று மாதங்களுக்கு முன்பு, கரூரில் நடைபெற்ற விபத்தொன்றில் இரண்டு பேர் இறந்துவிட்டனர். முதல மைச்சர் அவர்கள் உடனடியாக என்னை அழைத்து, அதுகுறித்து விசாரிக்கச் சொன்னார்.
உடனே கரூர் மாவட்ட ஆட்சித் தலைவரை தொலைப்பேசியில் தொடர்புகொண்டேன். அதுகுறித்து விசாரிக்கச் சொன்னேன்; இங்கே இருக்கின்ற அதிகாரி களை எல்லாம் அழைத்துப் பேசினேன்.
48 மணிநேரத்தில்…
விபத்தில் இரண்டு பேர் இறந்துவிட்டார்கள்; அவர் களின் குடும்பத்திற்குப் பணம் கிடைப்பதற்கு எத்தனை நாள் ஆகும்? என்றேன்.
இயல்பாக குறைந்தபட்சம் 6 மாதத்திலிருந்து ஓராண்டு ஆகும். முயற்சி எடுத்தால், மூன்று மாதத்தில் வாங்கலாம் என்று சொன்னார்கள்.
ஆனால், இது ‘திராவிட மாடல்’ அரசு, தளபதியினு டைய அரசு – அங்கே இருக்கின்ற மாவட்ட ஆட்சித் தலைவரை அழைத்துப் பேசி, 48 மணிநேரத்தில் அந்தத் தொகையைக் கொடுக்கவேண்டும் என்று உத்தரவுப் போட்டேன்.
இறந்தவர்களை அடக்கம் செய்த 24 மணிநேரத்தில், இப்பொழுது இருக்கின்ற கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர், அவர்களுடைய வீட்டிற்குச் சென்று அந்தத் தொகையை வழங்கினார்.
இதுதான் ‘திராவிட மாடல்’ அரசு. 24 மணிநேரத்தில் அந்தத் தொகைப் போய்ச் சேர்ந்திருக்கிறது.
ஒரு மாத காலத்திற்குள்…
15 நாள்களுக்கு முன்புகூட ஓர் ஆய்வுக் கூட்டம் போட்டோம்; அக்கூட்டத்தில் சொன்னேன், ‘‘எந்த ஒரு தொழிலாளியும், கஷ்டப்படுகின்ற தொழிலாளி, உழைக் கின்ற தொழிலாளியினுடைய எந்த ஒரு நலத் திட்டமும், குறைந்தபட்சம் இந்த மாத இறுதிக்குள் எல்லாம் முடிவடைந்துவிட்டது என்கிற ரிப்போட்டைக் கொடுக்க வேண்டும்” என்று அரசாங்கம் சொல்லியிருக்கிறது.
அந்த அளவிற்கு தளபதியினுடைய அரசாங்கம் விறு விறுப்பாகவும், சுறுசுறுப்பாகவும் இயங்கிக் கொண்டிருக் கிறது.
கடந்தகால ஆட்சிக்கும், ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கும் உள்ள வித்தியாசம்!
குறிப்பாக, கடந்தகால ஆட்சிக்கும், ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கும் உள்ள வித்தியாசத்தைப் பாருங்கள்.
தொழிலாளியின் வீட்டு ஆண் மகனுக்கு 3 ஆயிரம் ரூபாய்; பெண் பிள்ளைக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள்.
இப்பொழுது எவ்வளவு தெரியுமா?
பெண் பிள்ளைக்கு திருமணம் என்றால், ரூ.5 ஆயிரத்தை ரூ.20 ஆயிரமாக உயர்த்தியிருக்கின்றோம்.
மகப்பேறுக்கு 3 ஆயிரம் என்று இருந்ததை, இப்பொழுது 18 ஆயிரம் ரூ£யாக உயர்த்தியிருக்கின்றோம்.
தொழிலாளருடைய பிள்ளைகள் படிப்பதற்கான உதவித் தொகை பட்டப் படிப்பிற்கோ, பிளஸ் 1, பிளஸ் டூ-விற்கோதான் கொடுப்பார்கள். இப்பொழுது 6, 7, 8, 9 ஆம் வகுப்புப் படித்தாலும் ஆண்டிற்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கச் சொல்லியிருக்கின்றோம்.
அதேபோல், 10, 11, 12 ஆம் வகுப்புப் படித்தால், ரூ.2,400 கொடுக்கச் சொல்லியிருக்கின்றோம்.
பட்டப் படிப்பு படித்தால், 4 ஆயிரம் ரூபாய், 6 ஆயிரம் ரூபாய் கொடுக்கின்றோம்.
கட்டடத்தில் வேலை செய்யும் தொழிலாளி இறந்து விட்டால், அவருக்கு 5 லட்சம் ரூபாய் கொடுக்கின்றோம்.
இயற்கை மரணம் அடைந்தால் ஏற்கெனவே இருந்த ரூ.50 ஆயிரத்தை உயர்த்தி, ஒரு லட்சம் ரூபாய் கொடுக்கின்றோம்.
திடீரென்று விபத்தில் இறந்துவிட்டால், ஏற்கெனவே இருந்த ஒரு லட்சம் ரூபாயாக இருந்ததை, இரண்டு லட்சம் ரூபாயாக உயர்த்திக் கொடுத்திருக்கின்றோம்.
எல்லாவற்றையும்விட இறுதியாக ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன் – கட்டுமானத் தொழில் பணிகளைச் செய்கின்ற தொழிலாளர்கள் – பெயிண்டிங், சித்தாள், கம்பி கட்டுகிறவர்கள், கொத்தனார் பணி செய்கின்றவர்கள் அந்தக் கட்டடத்தைக் கட்டியிருப் பார்கள்.
அந்த வழியே செல்லும்பொழுது, இந்தக் கட்டத்தை நான்தான் கட்டினேன். 13 ஆவது மாடிக்கு நான்தான் கம்பி கட்டினேன்; 20 ஆவது மாடியில் நான்தான் ஜல்லியைக் கொண்டு போய் கொடுத்தேன்; கயிற்றைக் கட்டிக்கொண்டு இந்தக் கட்டடத்திற்கு நான்தான் பெயிண்ட் அடித்தேன் என்று சொல்வார்கள்.
தலைவர் என்னை அழைத்துப் பேசும்பொழுது சொன்னேன், ‘‘அய்யா, முதலாளிகள் சொல்வார்கள், இது என்னுடைய கல்யாண மண்டபம், இது என்னுடைய மால், இது என்னுடைய வீடு என்று சொல்வார்கள்; ஆனால், அதைக் கட்டிய கொத்தனாரும், சித்தாளும், பெயிண்டரும், கார்ப்பரேட்டரும் இவற்றைப் பார்த்து விட்டு, ஏங்கிச் செல்கிறார்கள் என்ற அப்பொழுது சொன்னேன், அவர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று சொன்னேன்.
கட்டுமானத் தொழிலாளர்களுக்கு 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 10 ஆயிரம் வீடுகள்!
கருணை உள்ளோட்டத்தோடு மாண்புமிகு முதல மைச்சர் அவர்கள் சொன்னார், எந்தக் கட்டத்தை, எந்தத் திருமண மண்டபத்தைக் கட்டினார்களோ, அவர்கள் வீடில்லாமல் வீதியில் இருக்கக்கூடாது; ஒரு குடும்பத் திற்கு என்று 10 ஆயிரம் தொழிலாளிகளுக்கு 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 10 ஆயிரம் வீடு கட்டச் சொல்லி, இலவசம் என்று அறிவித்தவர் நம்முடைய முதலமைச்சர் அவர்கள்.
‘பெல்’ தொழிலாளர் பிரச்சினைகளை முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச்செல்வேன்!
இப்படிப்பட்ட ஒரு சிறப்பான திட்டத்தை அறிவித்து ‘திராவிட மாடல்’ அரசை நடத்திக் கொண்டிருக்கின்றார். எனவே, எந்தத் தொழிலாளிக்கும், இங்கே உரையாற்றிய பொழுது நம்முடைய அய்யா சொன்னார், ‘பெல்’ தொழிற்சாலையில் பிரச்சினைகள் இருப்பதாகச் சொன்னார், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, நிச்சயமாக அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்று அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.
கண்ணியமிக்க மனிதர்கள்
திராவிடர் கழகத் தோழர்கள்!
ஒரே ஒரு கருத்தைச் சொல்கிறேன் – திராவிடர் கழகத் தோழர்களைப் போன்று உலகத்தில் வேறு எங்கும் பார்க்க முடியாது.
ஏனென்றால், நீங்கள் ஊராட்சி மன்றத் தலைவர் பதவியையும் கேட்பதில்லை; சட்டமன்ற உறுப்பினர் பதவியைக் கேட்பதில்லை, அமைச்சர் பதவியையும் கேட்பதில்லை; எந்தப் பதவியையும் கேட்பதில்லை. இங்கே அமர்ந்திருக்கின்ற நம்முடைய அண்ணன் சந்திரசேகரன் அவர்கள், தேர்தல் பிரச்சாரத்திற்காக 5 ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு போங்கள் என்று சொல்லிக் கொடுத்தால், அதைத் திருப்பிக் கொடுத்து விட்டுப் போகக்கூடியவர். அத்தகைய கண்ணியமிக்க மனிதர்கள்தான் இங்கே இருக்கின்றார்கள் என்று சொன் னால், அதுதான் திராவிடர் கழகத்தின் தொண்டர்கள்.
தந்தை பெரியாரின் மறு உருவம்
நம்முடைய ஆசிரியர் அய்யா அவர்கள்!
இந்த நாட்டில் உள்ள அடித்தட்டு மக்களுக்காக, விளிம்பு நிலை மக்களுக்காக என்றென்றும் குரல் கொடுத்துக் கொண்டிருக்கக்கூடிய, குறிப்பாக தந்தை பெரியாரின் மறு உருவமாக இருக்கின்ற, பெரியா ராக நடமாடிக் கொண்டிருக்கின்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களை வணங்கி, விடைபெறு கிறேன்!
நன்றி, வணக்கம்!!
– இவ்வாறு தமிழ்நாடு தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் அவர்கள் உரையாற்றினார்.