*நூறு ஆண்டைத் தாண்டிய மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்குத் தடையா?
*மருத்துவக் கல்லூரிகளின் சில குறைகளுக்காக சமூகமும்,எதிர்கால மாணவர்களின் கல்வி வாய்ப்பும் பாதிக்கப்படக் கூடாது!
* குற்றங்கள் வேறு; குறைகள் வேறு; குறைகள் திருத்தப்படவேண்டியவை!
மருத்துவக் கல்லூரிகளின் சில குறை களுக்காக, சமூகமும், எதிர்கால மாணவர் களின் கல்வி வாய்ப்பும் பாதிக்கப்படக்கூடாது; குற்றங்கள் வேறு; குறைகள் வேறு. குறைகள் திருத்தப்படவேண்டியவை. இங்கே குற்றம் நடக்கவில்லை; குறைகள்தான் இருந்துள்ளன; நிவர்த்தி செய்திட வாய்ப்பு தந்து, தடையை ரத்து செய்ய ஆவன செய்யவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அறிக்கை வருமாறு:
தமிழ்நாடு – மருத்துவத் துறையிலும், மருத்துவக் கல்வியிலும் வளர்ந்துவரும் ஓர் எடுத்துக்காட்டான மாநிலமாகும்.
அதில் பயின்று வெளிவரும் பட்டதாரிகளும், மேற் படிப்புப் படிப்போரும், வெளிநாடுகளிலும் நல்ல பெயரும், புகழும் பெற்றுத் தருபவர்களாக உள்ளனர்.
மிகவும் அதிர்ச்சிதரும் ஆணையாகும்!
இந்த நிலையில், இவ்வாண்டு பல மருத்துவக் கல்லூரிகளின் கல்வித் தரம்பற்றி ஆராய்ந்து சான்றும், அனுமதியும் வழங்கும் முறை 100 ஆண்டைத் தாண்டிய கல்லூரிகளுக்கும்கூட தேவையா? என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும், ஆய்வு செய்த மருத்துவக் கவுன்சில் ஆய்வுக்குழுவினர் மூன்று மருத்துவக் கல்லூரிகளுக்கு இவ்வாண்டு மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்கும் ஆணை பிறப்பித்திருப்பது மிகவும் அதிர்ச்சிதரும் ஆணையாகும்.
மறுசீராய்வு செய்வது
அவசியம், அவசரமாகும்!
சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, திருச்சி (அரசினர்) கி..ஆ.பெ.விசுவநாதன் மருத்துவக் கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி, புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் சில நிர்வாகக் குறை பாடுகளுக்காக இவ்வாண்டு மாணவர் சேர்க்கைக்கான அனுமதி மறுத்தல் செய்து அம்மருத்துவக் கவுன்சில் அமைப்பு கடுமையான தண்டனை வழங்குவது போன்ற தங்களது முடிவினை மறுசீராய்வு செய்வது அவசியம், அவசரமாகும்!
கல்லூரி முதல்வர்,
பேராசிரியர்களின் கடமை
முறைப்படி ஆசிரியர்கள் பதிவேடு (Primary Method – வருகைப் பதிவு), மேலும் சில உள்கட்டமைப்பின் குறைபாடுகளை அந்தக் கல்லூரிகளின் முதல்வர்கள் (டீன்), பேராசிரியர்கள் நிவர்த்தி செய்து, அக்குழுவின் ஆய்வுக்கொப்ப பெருங் குறைபாடு இன்றி செய்வதும், மீறி ஏதாவது இருந்தால் (அவர்கள்) அக்கவுன்சில் வருகைக்குள்ளாக – அதற்குரிய காரண காரியங்களை அவர்களுக்கு விளக்குவதும் – அக்கல்லூரி முதல்வர், பேராசிரியர்களின் கடமை என்பதை நாம் மறுக்கவில்லை. என்றாலும், இப்பிரச்சினையால் வெகுவாகப் பாதிக்கப்படுகிறவர்கள் இவ்வாண்டு வந்து சேர்ந்து படிக்கவேண்டிய மாணவர்கள். அவர்களுக்கு இப்படி ஒரு இடக்குறைப்பு மூலம் பாதிப்பு ஏற்படுத்துவது – எவ்வகையிலும் அறம் அல்ல!
நிர்வாகக் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி, அவை களை அவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் நிவர்த்தி செய்து, பதில் அனுப்பி, மறுமுறையும் மெடிக்கல் கவுன்சிலின் அனுமதியைப் பெறவேண்டும் என்று குறிப்பும், எச்சரிக்கையும் தந்து, இதுபோன்ற அதிர்ச்சியைத் தவிர்த்திருக்கவேண்டும்.
மாணவர்களையும், பெற்றோர்களையும் தண்டிக்க வேண்டுமா?
தமிழ்நாடு மருத்துவத் துறையில் சிறப்புடன் முன்மாதிரி மாநிலமாக வரும் நிலையில், இதற்கு இப்படி ஒரு சிறு கறை – தடைகூடத் தவிர்க்கப்படல் வேண்டும் என்பது ஒருபுறம் இருந்தாலும், அக்கல்லூரிகளில் வந்து சேரவிருக்கும் மாணவர்களையும், அவர்களை மருத்து வர்களாக்கிப் பார்க்க விரும்பும் பெற்றோர்களையும் தண்டிக்கவேண்டுமா?
பல மாநிலங்களில் மருத்துவக் கல்லூரிகளின் அடிக்கட்டுமானமும், வசதி வாய்ப்புகளும் மிகக் குறைவு என்பது அக்குழு அறியாதவையா?
50, 100 ஆண்டுகள் தாண்டிய கல்லூரிகளுக்கு இப்படி ஓர் ஆணை என்றால், தமிழ்நாட்டின் ஆட்சிக்கு ஒரு களங்கப் புள்ளியை ஏற்படுத்தும் வகையான உள்ளார்ந்த திட்டமா என்ற கேள்வியும் இயல்பாக எழவேச் செய்யும்!
சிறு குறைபாடுகளுக்குப்
பெருந்தண்டனை தரப்படுகிறதோ!
ஏனெனில், ‘நீட்’ தேர்வைத் தொடக்கத்திலிருந்தே கடுமையாக எதிர்த்துவரும் மாநிலம் தமிழ்நாடும், இன்றைய ‘திராவிட மாடல்’ ஆட்சியும் என்பதால், இப்படி சிறு குறைபாடுகளுக்குப் பெருந்தண்டனை தரப்படுகிறதோ என்ற கேள்வியும், அய்யமும் எழவே செய்யும். இதில் ‘‘அரசியல்” மூக்கு நுழைக்க வைக்கப் படுகிறதோ என்றும், எவரும் நினைப்பதை, பேசுவதைத் தடுக்கவே முடியாது!
ஆய்வு தவறு என்பதல்ல நமது வாதம்; அணுகுமுறை நியாயமானதா?
முந்தைய அகில இந்திய மெடிக்கல் கவுன்சில் தலைவர் கேதன் தேசாய் வீட்டில் ரெய்டு நடத்திய போது, அவரது அறையில் இருந்து ஏராளமான தங்கம் எடுத்ததை அப்போதைய செய்தி ஏடுகள் வெளியிட்டு வந்த செய்திகளும் மறக்கப்பட முடியாவை என்பது ஒருபுறம் இருந்தாலும், ஆய்வு தவறு என்பதல்ல நமது வாதம்; அணுகுமுறை நியாயமானதா? என்பதே நம் கேள்வி.
மனிதாபிமானத்தின் அடிப்படையில் முடிவுகள் வருவது அவசியம், அவசரம்!
ஏனெனில், இது சமூகத்தின் எதிர்காலத்தை, மருத்துவ வளர்ச்சியைப் பாதிக்கும் நிகழ்வு. எனவே, மறுபரிசீலனை செய்து மனிதாபிமானத்தின் அடிப்படை யில் முடிவுகள் வருவது அவசியம், அவசரம்!
மருத்துவக் கல்லூரிகளின் சில தவறுகளுக்கு, சமூகமும், எதிர்கால மாணவர்களின் கல்வி வாய்ப்பும் பாதிக்கப்படக்கூடாது என்ற சமூகக் கவலையில்தான் நாம் இதனை குழுவினருக்கு வேண்டுகோளாக வைக்கின்றோம்.
தடையை ரத்து செய்ய ஆவன செய்க!
குற்றங்கள் வேறு; குறைகள் வேறு; பிழைகள் வேறு.
குறைகள் திருத்தப்படவேண்டியவை. இங்கே குற்றம் நடக்கவில்லை; குறைகள்தான் இருந்துள்ளன.
எனவே, நிவர்த்தி செய்திட வாய்ப்பு தந்து, தடையை ரத்து செய்ய ஆவன செய்திடுக!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை
31.5.2023