சென்னை, செப். 4- தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியிருந்த 394 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
நிதித் தட்டுப்பாடு
தமிழ்நாடு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சிவசங்கர், கோவி.செழியன் ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டாக 2.9.2025 அன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:-
தி.மு.க. 2021ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற போது கரோனா தொற்று மற்றும் கடும் நிதித் தட்டுப்பாடு இருந்தது. ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சீரிய நடவடிக்கையால் தமிழ்நாடு தற்போது வளர்ச்சி பாதையில் சென்று கொண்டு இருக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தமிழ்நாடு 11 சதவீதம் என்ற இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டி உள்ளது.வருவாய் நிதி பற்றாக் குறை 3.14 சதவீதத்தில் இருந்து 1.17 ஆகவும், நிதி பற்றாக்குறை 4.9-ல் இருந்து 3 சதவீதமாகவும் குறைக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் 46,189 ஆக இருந்த தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 52,614 ஆக உயர்ந்துள்ளது. தி.மு.க. ஆட்சியில் மொத்தம் 897 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு உள்ளன. ரூ.10.28 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. 32 லட்சத்து 23 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் அளிக்கப்பட்டு உள்ளன. புதிய டைட்டல் பூங்காக்கள், தொழிற்பூங்காக்கள் ஆகியவை ஏற்படுத்தப் பட்டு உள்ளன. 2021-ல் தமிழ்நாட்டின் ஏற்றுமதி மதிப்பு 21.15 பில்லியன் டாலராக இருந்தது. இப்போது இரட்டிப்பாகி 52.70 ஆக உயர்ந்து இருக்கிறது.
மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடுதான் முதலிடத்தில் இருக்கிறது. மொத்த காலணி ஏற்றுமதியில் 38 சதவீதம் தமிழ்நாட்டின் பங்கு இருக்கிறது. அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முத்திரை பதித்து வருகிறது. தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த 505 வாக்குறுதிகளில் 394 நிறைவேற்றப்பட்டு உள்ளன. 40 பரிசீலனையில் உள்ளது. மீதமுள்ள வையும் நிறைவேற்றப்படும்.இந்த ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம் என சொன்ன திட்டங்கள் மட்டுமல்லாமல் காலை உணவு திட்டம், புதுமை பெண், தமிழ்புதல்வன், நான் முதல்வன் உள்ளிட்ட சொல்லாத பல திட்டங்களையும் நிறைவேற்றி இருக்கிறோம். 1 லட்சத்து 8 ஆயிரம் பேருக்கு பல்வேறு தேர்வா ணையங்கள் மூலம் பணிகள் வழங் கப்பட்டு இருக்கிறது.
இழப்பீடு
ஒன்றிய அரசின் நிதி பகிர்வில் தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டாலும், முதலமைச்சரின் நடவடிக்கை, நிதி மேலாண்மையால் தமிழ்நாடு தொடர்ந்து மக்களுக்கான பணி களை, திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசின் ஜி.எஸ்.டி. சீர்திருத்ததை செயல்படுத்துவதில் தமிழ்நாடு எதிரானது இல்லை. ஜி.எஸ்.டி. வரி குறைப்பால் கம் பெனிகளுக்கு அல்ல, மக்களுக்கு பலன் கிடைக்க வேண்டும் என்பது தான் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு. இந்த சீர்திருத்தத்தால் தமிழ்நாட்டிற்கு எவ்வளவு இழப்பீடு ஏற்படும் என்பதை மதிப்பிட்டு வருகிறோம்.
தமிழ்நாட்டின் வளர்ச்சி 11 சதவீதம் என்பதனை எடப்பாடி பழனிசாமி ஒரு மாயை என்றும், இது இறுதியானது அல்ல என்றும் சொல்வதாக கேட்கிறீர்கள். இந்த வளர்ச்சி சதவீதத்தை நாங்கள் சொல்லவில்லை. ஒன்றிய ஆட்சியில் உள்ள அவரது கூட்டணி கட்சிதான் சொல்கிறது. எடப்பாடி பழனிசாமியே ஒரு மாயையில்தான் இருக்கிறார். பழனி-கொடைக்கானல் இடையே ரோப் கார் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்தது. ஆனால் அதில் சில பகுதிகள் அடர்ந்த வனப்பகுதிகளுக்கு வருவதால் அதற்கான அனுமதியைப் பெற முடியவில்லை. எனவே இந்த திட்டம் நிறுத்தப்பட்டு விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்