எல்.ஓ.சி.எஃப் என்ற பெயரில் காவிக் கொள்கை திணிப்பு!
செப்.8 இல் திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
செப்.8 இல் திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
ஒன்றிய அரசின் எல்.ஓ.சி.எப் வரைவு அறிக்கையைக் கண்டித்து திராவிட மாணவர் கழகத்தின் சார்பில், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில், வரும் 8.9.2025 அன்று நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
ஒன்றிய அரசு திணித்த தேசியக் கல்விக் கொள்கையின் விளைவாக நாளும் கல்வித் துறையின் மீது தாக்குதல்கள் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றன. அண்மையில் பல்கலைக்கழக மானியக் குழுவால் (UGC- University Grants Commission) வெளியிடப்பட்டுள்ள எல்.ஓ.சி.எஃப் (LOCF – Learning Outcomes based Curriculam Framework) எனப்படும் ‘‘கற்றல் விளைவு அடிப்படையிலான பாடத்திட்டக் கட்டமைப்பு’’ பாரம்பரிய பாரத அறிவை முன்னிறுத்துதல் என்ற பெயரில் பிற்போக்குத்தனமான காவிக் கொள்கையின் கூறுகளை வெளிப்படையாகக் கொண்டிருக்கிறது. முன்மொழியப்பட்டுள்ள பாடத்திட்டம், பண்டைய கணிதம், வானியல் மற்றும் கலாச்சார பாரம்பரியம் உள்ளிட்ட பாரம்பரிய இந்திய அறிவு அமைப்புகளை முக்கிய உயர்கல்வியில் ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று சொல்லப்படுகிறது.
அதன் வெளிப்பாடாக, வேதியியல் பாடத்திற்கான கட்டமைப்பு சரஸ்வதி வந்தனத்துடன் தொடங்குகிறது. பண்டைய இந்தியாவின் வேத கலாச்சாரத்தின் வேதியியல் மரபு என்று பாடம் வைக்கப்படுகிறது.
கணிதத் துறையை, வேத பாட சாலை போல மாற்றுவதற்கானத் திட்டம்!
கணிதப் பாடத்தில், கால கணனா (பாரம்பரிய இந்திய நேரக்கணிப்பு), பாரதிய பிஜ்கனித் (இந்திய இயற்கணிதம்) மற்றும் புராணங்களின் முக்கி யத்துவம் போன்ற கருத்துகளில் இந்த வரைவு கவனம் செலுத்துகிறதாம்! பல்லுறுப்புக்கோட்டுப் பிரிவிற்கான ‘பரவர்த்ய யோஜயேத் சூத்திரம்’ உட்பட வேத கணிதத்திலிருந்து நுட்பங்களையும் மாணவர்கள் படிப்பார்களாம். மேலும் ‘இந்திய நாட்காட்டி (பஞ்சங்கா) குறித்தும் சடங்குகளுக்கான நல்ல நேரங்களை (மஹூர்த்தங்கள்) தீர்மானிப்பதில் அதன் பங்கு பற்றியும் அறிந்து கொள்வார்கள். பாடத்திட்டம் பண்டைய ஆய்வகங்கள், உஜ்ஜயினியின் முக்கிய நடுக்கோடு, மற்றும் காதிஸ், விகாதிஸ் போன்ற பாரம்பரிய நேர அலகுகளுக்கும் IST மற்றும் GMT போன்ற நவீன அமைப்புகளுக்கும் இடையிலான ஒப்பீடுகளையும் ஆராய்கிறது’ என்று உலகின் அதிநவீன அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு அடிப்படையாக இருக்கும் கணிதத் துறையை, வேத பாட சாலை போல மாற்று வதற்குத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
வரலாற்று பாடத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் என்று ‘மன்னிப்பு கடித மாவீரர்’ சாவர்க்கர் பெயரை முன்னிறுத்துவதும், மூடநம்பிக்கைகளுக்கு முக்கியத்து வம் தரும் வகையில் பாட கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் வழிகாட்டி இருப்பதும் அசல்
ஆர்.எஸ்.எஸ். கொள்கைகள் ஆகும்.
இந்தப் பாடத்திட்டத்தில் சூரிய சித்தாந்தம் போன்ற வற்றைக் கொண்டுவந்து, யுகங்கள், கல்பங்கள் முதல் பிரம்மாவின் நாள் (பிரம்ம வர்சா) வரையிலான அண்ட காலச் சுழற்சிகளையும், விஷ்ணு வர்சா, சிவ வர்சா போன்ற தெய்வீக சுழற்சிகளையும் விளக்கும் பாடங்கள் இடம்பெறுமாம், இடம்பெறவேண்டுமாம்!
கவுடில்யரின் அர்த்தசாஸ்திரம், உபநிடதங்கள், ராமாயணம், மகாபாரதம் மற்றும் காளிதாசர் போன்ற பாரம்பரிய படைப்புகளில் இருந்து அரசியல் கருத்துகள், ராம ராஜ்ஜியம் போன்ற கருத்துகளெல்லாம் வணிகக் கல்வியில் இணைக்கப்பட்டுள்ளன.
‘ஜோதிடம் அறிவியல் அல்ல’ என்று நோபல் பரிசு பெற்ற அறிஞர்கள் கையொப்பமிட்டு அறிக்கை வெளியிட்டனரே! இன்றும் அறிவியல்படி நிரூபிக்க முடியாத முட்டாள்தனத்தின் முடைநாற்றம் வீசும் மோசடியை மாணவர்களுக்குத் திணிக்கப் போகிறார்களா? சில ஆண்டுகளுக்கு முன்னால் நோபல் பரிசு பெற்றவரான அறிவியல் அறிஞர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், ஜோதிடம் என்பது போலித் துறை என்று வெளிப்படையாக அறிவித்தாரே! அதைத்தான் இந்த 21- ஆம் நூற்றாண்டில் மாணவர்களுக்குக் கற்றுத் தரப் போகிறார்களா?
கடந்த 30 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்.-சும் பா.ஜ.க.வும் தீவிர முயற்சி!
மதச்சார்பற்ற நாடான இந்தியாவைச் சிதைப்பதற்கு கல்வித் துறையின் வாயிலாக கடந்த 30 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்.-சும் பா.ஜ.க.வும் தீவிர முயற்சியில் இறங்கி உள்ளன.
1998 ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி நடைபெற்ற போது கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் சரஸ்வதி வந்தனா கூறப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய அன்றைய பொதுச்செய லாளரும், தமிழ்நாட்டின் கல்வி அமைச்சருமான இன மானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் மாநாட்டைப் புறக்கணித்து வெளியேறினார் என்பது வரலாறு.
அண்மையில் இந்தியாவின் சுதந்திர நாள் விழாவின்போதும், இந்திய விடுதலைக்குப் பாடுபட்ட காந்தியார், சுபாஷ் சந்திர போஸ், பகத்சிங் ஆகியோருடைய படங்களுக்கு மேல் சாவர்க்கரின் படத்தைப் போட்டு தங்களது ஹிந்துத்துவ புத்தியை காட்டிக் கொண்டனர் ஒன்றியத்தை ஆளும் பாஜகவினர்.
இந்நிலையில் உயர் கல்வித் துறையில் இன்னும் ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கையின் தாக்கம் விட்டபாடில்லை.
உயர்கல்வித்துறையில் ஒன்றிய அரசின் ‘அனுக்கிரகம்’ வேண்டி நிற்கும் சிலரால், தமிழ்நாட்டிலும் சில திணிப்பு கள் மறைமுகமாக சில பல்கலைக்கழகங்களில் நடந்து வருகின்றன என்பதையும் அறிய முடிகிறது. ஒன்றிய அரசின் இத்தகைய முயற்சிகளுக்குப் பணிந்து போகும் சிலரின் செயல்பாடுகளைத் தமிழ்நாடு அரசு உயர்கல்வித்துறை கவனமாகக் கண்காணித்து, உரிய நடவடிக்கைகள் மூலம் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.
தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில்
திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்!
திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்!
ஒன்றிய அரசின் எல்.ஓ.சி.எப் வரைவு அறிக்கையைக் கண்டித்து திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள், சென்னை, விழுப்புரம், சேலம், திருச்சி, மதுரை, தஞ்சை ஆகிய தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில், வரும் 8.9.2025 (திங்கள்கிழமை) அன்று நடைபெறும். திராவிட மாணவர் கழகம், திராவிடர் கழக இளைஞரணி, மகளிர் பாசறைத் தோழர்கள் உள்பட அனைத்து அணிகளின் தோழர்களும் பெருவாரியாக இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று ஹிந்துத்துவ காவிக் கல்விக் கொள்கையை
முறியடிப்பீர்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
4.9.2025