கோபி, செப். 3- நேற்று (2.9.2025) காலை முதல் குள்ளம்பாளையத்தில் உள்ள செங்கோட்டையன் வீட்டின் முன்பு செய்தியாளர்கள் காத்திருந்த நிலையில் வீட்டை விட்டு கட்சி அலுவலகம் வந்த செங்கோட்டையன், வரும் 5ஆம் தேதி மனம் திறந்து பேச உள்ளதாகவும், அதுவரை அனை வரும் ஒத்துழைப்பு அளிக்க வேண் டும் என்றும் கூறிச்சென்றார். தொடர்ந்து கரட்டூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு சென்ற செங் கோட்டையன் அங்கு ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
நேற்று சுமார் 4 மணி நேரம் நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட செங்கோட்டையனிடம், கூட்டம் முடிந்து வெளியே வந்த போது, எடப்பாடி பழனிசாமி மீதான அதிருப்தி குறித்தும், அதிமுகவில் சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை இணைக்க திட்டம் உள்ளதா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, 5ஆம் தேதி அனைத் திற்கும் பதில் அளிக்கிறேன். அதுவரை ஒத்துழைப்பு அளியுங்கள் என்று கூறிச்சென்றார்.இந்நிலையில் செங்கோட்டையனிடம் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. அவர்களிடமும் இதே கருத்தை செங்கோட்டையன் கூறியதாக தெரிகிறது. எடப்பாடி பழனிசாமி மீது கடும் அதிருப்தியில் உள்ள செங்கோட்டையன் கட்சியில் இருந்து வெளியேறி, சசிகலா, ஓபிஎஸ், டிடிவி.தினகரன் ஆகியோரை இணைத்து தனி அணியாக செயல்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவரது இந்த நடவடிக்கை அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.