வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுக்குப் பதில் சொல்ல முடியாமல், அதனால் கோபம் கொண்டுள்ள மக்களை எதிர்கொள்ள முடியாமல், மிகவும் கீழான ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர் பா.ஜ.க.வினர்!

4 Min Read

பீகாரில் நடைபெறவிருக்கும் தேர்தலுக்கு முன்னேற்பாடாகத் தாங்கள் வெற்றி பெறுவதற்காக வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் என்ற பெயரில் 65 லட்சம் வாக்காளர்களைப் பட்டியலிலிருந்து நீக்கி, முகவரியில்லாதோர், முகமில்லாதோர் என்று லட்சக்கணக்கானோரைப் பட்டியலில் போலியாகச் சேர்த்து வாக்குத் திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பா.ஜ.க.வுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் எதிராக காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியும், பீகாரின் மேனாள் துணை முதலமைச்சரும், ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவருமான தேஜஸ்வி ஆகியோர் மேற்கொண்ட “வாக்காளர் உரிமைப் பயணம்” மாபெரும் எழுச்சியை உண்டாக்கியிருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர், ஜார்க்கண்ட் முதலமைச்சர் உள்பட இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பலரும் அப் பயணத்தில் பங்கேற்ற ஜனநாயகத்தைக் காக்கக் குரல் கொடுத்துள்ளனர்.

பீகார் தேர்தல் களம் கொதித்துக் கிடக்கிறது. பீகாரில் நிதிஷ் குமார் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் பா.ஜ.க.வுக்கு இந்த வாக்காளர் உரிமைப் பயணம் கிலி ஏற்படுத்தியுள்ளது. இதில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்குத் திராணியற்று விழி பிதுங்கி நிற்கிறது பா.ஜ.க!

இந்தச் சூழலில் தான், தன்னுடைய தாயைக் காங்கிரஸ் இகழ்ந்துவிட்டதாக, மோசமானதொரு திசைதிருப்பல் நாடகத்தை நடத்தத் தொடங்கியுள்ளார் பிரதமர் மோடி. வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுக்கு தெளிவான, ஆதாரபூர்வமான பதில் சொல்ல முடியாமல், அதனால் கோபம் கொண்டுள்ள மக்களை எதிர்கொள்ள முடியாமல், மிகவும் தரமற்ற ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் அல்லது ராஷ்டிரிய ஜனதா தளத்தில் எந்தத் தலைவர் அப்படி பேசினார் என்ற கேள்விக்கு அவர்களிடம் பதில் இல்லை.

பயணத்திற்கான வரவேற்புக் கூட்டங்களில், முகமறியாத ஒருவர், எங்கோ ஓரிடத்தில், தலைவர் யாரும் இல்லாத ஏதோ ஒரு மேடையில் பிரதமர் மோடியின் தாயாரை இகழ்ந்துவிட்டதாக, ஒரு காணொளியைச் சமூக ஊடகங்களில் அதிகம் பகிர்ந்து பரப்பியவர்கள் பா.ஜ.க.வினர் தான்! அதைத் தான் இப்போது பிரதமர் தனது பிரச்சாரக் கருவியாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளார்.

அந்தோ, பரிதாபம்! ஒரு நாட்டின் பிரதமருக்கு, ஒரு மாநிலத் தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்கு, அதன் அரசியல் பிரச்சினைகளோ, ஆளும் தங்கள் கூட்டணியின் சாதனைகளோ, எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்குப் பதிலோ சொல்வதற்கு எதுவுமில்லாமல், ‘முதலைக் கண்ணீர்’ வடிக்கும் இத்தகைய பிரச்சாரத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறார்! இது இவர்கள் கூட்டணியின் கடைசிக் கட்ட ‘ஸ்கிரிப்ட்’ தான்! கடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டிலும் இது ‘எடுபடுமா’ என்று பார்த்தார்கள். அதையே மேடைக்கு மேடை பேசி, கண்ணீர் வடித்தார்கள். பயனின்றிப் போயிற்று!

ஆனால், அதைத் தொடக்கத்திலேயே கையிலெடுக்கத் தொடங்கியிருக்கிறார் நரேந்திர மோடி என்றால், அங்குள்ள தேர்தல் நிலவரம் அப்படி மோடி பாஜகவை அச்சுறுத்தத் தொடங்கி இருக்கிறது என்பதற்கு இதுவே சான்று அல்லவா? தோல்வி பயம் இப்போதே பிடித்து ஆட்டத் தொடங்கிவிட்டது என்று தானே பொருள்!

தனிநபர் – குடும்பத்தினர் குறிப்பாக மகளிர் பற்றிய தனித்த பண்பாட்டுக்குக் கீழாக எவர் பேசினாலும் அது கண்டிக்கத்தக்கது என்று நாம் ஏற்பதில்லை.

சரி, இப்படியெல்லாம் பொது மேடையில் அவதூறு பேசலாமா? தனி நபர் விமர்சனம் செய்யலாமா? பெண்களைக் (பெண் சக்தியைக்) குறித்து பேசலாமா என்று கேட்பவர்களே இப்படியெல்லாம் கடந்த காலங்களில் வாய் கூசாமல் பேசியிருக்கிறார்களே! பா.ஜ.க.வினர் எல்லோரையும் விடுவோம் – பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பேசாத பேச்சா? தரந்தாழ்ந்த விமர்சனங்களைப் பிரதமர் ஆவதற்கு முன்பும் பின்பும் அவர்கள் உதிர்த்ததில்லையா?

‘ஜெர்சி மாடு, கலப்பினக்கன்று’

2004-ஆம் ஆண்டு குஜராத்தில் மோடி, ‘‘சோனியா பென் டூ ஏக் ஜெர்சி கே சே, ஆ ராகுல் ஏக் ஹைப்ரிட் வச்சர்டு சே (சோனியா பென் ஒரு ஜெர்சி மாடு, மற்றும் ராகுல் ஒரு கலப்பின கன்று)’’ என்றும் குறிப்பிட்டார்” என்று அப்போது குஜராத் செய்தியாளராக இருந்த தீபால் திரிவேதி வெகு காலத்திற்கு முன்பே குற்றம் சாட்டினாரே, இதுவரை பதில் இல்லையே!

சசி தரூரின் மனைவியை “50 கோடி ரூபாய் பெண் தோழி” (50 க்ரோர் கி கேர்ல் பிரண்ட்) என்று விமர்சித்தவர் தானே நரேந்திர மோடி!

பிரதமரானதற்குப் பிறகும், 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில், “விதவை பென்சன் என்ற பெயரில் பிறக்காத குழந்தைகளுக்கெல்லாம் பணம் அனுப்புகிறது காங்கிரசின் திட்டம். காங்கிரஸ் கட்சியில் இருக்கும் எந்த விதவைக்கு இந்தப் பணம் செல்கிறது?” என்று சோனியா காந்தி அம்மையாரை மறைமுகமாக ‘விதவை’ என்று குறிப்பிட்டு இழிவுபடுத்தும் வகையில் “காங்கிரஸ் கி வித்வா” என்று பேசியவர் தானே நரேந்திர மோடி?

2021 மேற்கு வங்கச் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது (மார்ச் 25, 2021) மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜியை நோக்கி, சாலையில் திரியும் சில்வண்டுப் பையன்கள், தங்கள் பகுதி பெண் பிள்ளைகளை நோக்கிக் கூவுவது போல, பிரதமர் மோடி “தீதி ஓ… தீதி” என்று பேசி கடும் எதிர்ப்பைச் சந்திக்கவில்லையா? இதையெல்லாம் விட பல கூட்டங்களில் தரந்தாழ்ந்து பேசுபவர் தானே உள்துறை அமைச்சர் அமித்ஷா!

அவை நாகரிகத்தைப் பற்றி யாரெல்லாம் பேசுவது? திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மொஹுவா மைத்ரா ஆங்கிலத்தில் எழுதியுள்ள எக்ஸ் தளப் பதிவில் கேட்டுள்ளார் – “Today’s ‘Mind Your Language speech’ from him is a bit rich!” பிரதமர் நரேந்திர மோடியின் இன்றைய பேச்சு, அவருக்கே மிகையானதாக இல்லையா? என்று எள்ளல் தொனியில் கேட்டுள்ளாரே!

பீகாரின் தேர்தல் போக்கு எப்படி என்பதை பிரதமர் நரேந்திர மோடியின் பரிதாபத் தேடல்களுக்கானதே என காண்பதை வெளிப்படுத்தியுள்ளது. இன்னும் கீழான பிரச்சாரங்களுக்கும், அவதூறுகளுக்கும், செயல்களுக்கும் செல்வதற்கும் கூட பா.ஜ.க. ஒரு போதும் தயங்காது!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *