அனைத்துத் திராவிடர் கழகத் தொண்டர்கள் சார்பிலும் இதயங்கனிந்த வாழ்த்துகளை நம் குடும்பங்களின் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களுக்கும், அவருக்கு அனைத்துமாக இருந்து காத்துவரும் மோகனா அம்மையாருக்கும் மிக்க மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மருத்துவர் சோம.இளங்கோவன்
இயக்குநர், பெரியார் பன்னாட்டு அமைப்பு
அவருடைய பெயர்த்தி மருத்துவர் சூரியா அவர்களின் வாழ்க்கைத் துணைநல விழா நம் அனைவர்க்கும் மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகின்றது.மணமக்கள் சூரியாவும், ராகுலும் வங்கக் கடற்கரையில் இணையும் தங்கச் செல்வங்கள்.மகிழ்ச்சிக் கடலில் அவர்கள்வாழ்க்கைப் படகு உன்னதமாகப் பயணிக்க வாழ்த்துகின்றோம்.
இந்த நேரத்தில் சிலவற்றைப் பதிவிட வேண்டியது நம் கடமையாகும்.
நமக்கெல்லாம் நன்கு தெரிந்த பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் பல்வேறு கடும் முயற்சிகளுக்குப் பின்னர் மிகப் பெரிய (இந்துஸ்தான் லிவர்) நிறுவனத்தில் விற்பனையாளராகத் தொடங்கினார். விடியற் காலையில் உண்டு, சாப்பாட்டைக் கையில் எடுத்துக் கொண்டுத் தொலைதூரம் நாள்தோறும் சென்று உழைத்தவர். தனது கடும் உழைப்பால் அந்த நிறுவனத்தில் அதற்கு மேலே வர முடியாது என்ற அளவிற்கு வளர்ந்து மற்றவர்களுக்குப் பயிற்சி தரும் பொறுப்பு வரை முன்னேறியவர். கழகத் தொண்டிற்கு நம்பிக்கையுள்ள உழைப்பாளி முக்கியத்தேவை என்ற காலகட்டத்தில் கடும்பணியை ஏற்றுக்கொண்டவர்.
அவர் சொல்வது “நான் பெரியாரின் தொண்டர்களுக்குத் தொண்டன்” என்பது தான். அதைப் பலமுறை நம்மில் பலருக்கு நேர்ந்த இக்கட்டான நேரங்களில் உணர்வுப்பூர்வமாகக் காட்டியுள்ளார். இப்படி ஒரு தலைவரா? என்று நம்மில் பலரே வியந்துள்ளோம்.
அவரைப் புரிந்து கொள்ளாத, உண்மைகளைத் தெரிந்து கொள்ளாதவர்கள், மற்றும் வேண்டுமென்றே அவதூறு பரப்பும் கூட்டத்தினர் இருக்கின்றார்கள். தந்தை பெரியாரின் கோட்பாடு படி “ அது அவன் சுபாவம், விட்டுத் தள்ளு. அதை ஏன் நீ சுமக்க வேண்டும்? “ என்று தூசி தட்டி விட்டுக் கருமமே கண்ணாகப் பணி செய்பவர்.
அவருடன் ஓரிரு நாட்கள் சேர்ந்து பயணித்தாலே அவரது எளிமை, அறிவாற்றல், செயலாற்றல், துணிவு, தெளிவு, உழைப்பு என்பவை புரிந்து விடும். அவரைக் கொச்சைப் படுத்தும் உடன் பிறப்புக்களே வாருங்கள். அவருடன் இரண்டு நாட்கள் பயணம் செய்து பாருங்கள். நான் ஏற்பாடு செய்து தருகின்றேன்.
தந்தை பெரியார் அவர்களை முழுதுமாக உள்வாங்கி எந்த நிலையிலும் தந்தை பெரியார் என்ன முடிவெடுப்பார் என்று அவர் சொல்வது போல “எனக்குச் சொந்த புத்தி வேண்டாம் பெரியார் தந்த புத்தி தான்” என்று முடிவெடுப்பார். என்னைப் போன்றோர் என்ன இப்படிச் செய்து விட்டாரே என்று எண்ணிய தருணங்கள் உண்டு. அவற்றைக் காலம் அய்ந்தாண்டுகள் கழித்து எங்களுக்குப் புரியவைத்துள்ள பல முடிவுகள் உண்டு!
அவருடைய உழைப்பு உண்மையிலேயே ஒவ்வொரு மணித்துளியும் நமது இனத்திற்காகத் தான் என்பதை நான் நன்கு உணர்ந்துள்ளேன் என்பதைப் பெருமையாகச் சொல்லிக் கொள்கின்றேன்.
வெளிநாடுகளுக்குச் செல்லும் போதெல்லாம் நமது நிறுவனங்களுக்கு மேலும் என்ன செய்யலாம் என்பதில் தான் கண்ணுங்கருத்துமாக இருப்பார். பலரையும் சந்தித்து அறிந்து கொள்வார். அங்குள்ள ஆசிரியப் பெருமக்கள் அமெரிக்கா, கனடா வந்து பயின்று முன்னேற ஆவன செய்தார்.
நல்ல நூல்களைத் தேடிச் சென்று வாங்குவது தான் அவர் பயணத்தின் முக்கிய வேலை! அவற்றை அவருக்கே உள்ள திறமையுடன் வாழ்வியல் சிந்தனைகளாக நமக்கு எளிதாக உரித்த வாழைப் பழமாகத் தருவார்! அதை உண்டு நாம் மட்டுமல்ல, அந்தந்தத் துறை வல்லுநர்களே மகிழ்ந்து பாராட்டியுள்ளனர்.
ஆசிரியர் அவர்களின் நன்றிப் பெருக்கு மிகவும் உன்னதமானது. அமெரிக்காவில் இதய அறுவை செய்து கொண்ட போது, பொருளாதார, மற்ற உதவிகள் செய்தவர்களை 39 ஆண்டுகள் கழித்துத் தன் “பெரியாரின் அடிச்சுவட்டில்” வரலாற்றுக் குறிப்பில் ஒருவர் விடாமல் அவர்கள் பெயரை எழுதி எனக்கே மறந்துவிட்டதையும் எழுதி நன்றி தெரிவித்தார். ஆம், தோழர்களே அந்த அறுவை சிகிச்சையில் நான் கூடவே இருந்தேன். சிகிச்சை முடிந்து மயக்கம் தெளிந்து வரும் அரை மயக்கத்திலே “நான் நன்றாக முடிந்து விட்டது சார்” என்று சொன்னதும் அவர் சொன்ன முதல் வார்ததைகள் என்ன தெரியுமா? “ தோழர்களுக்குச் சொல்லி விட்டீர்களா? “என்பது தான்.
அண்ணியார் மோகனா அம்மையார் பற்றி நிறையச் சொல்ல வேண்டும். சுருக்கமாகச் சொல்கின்றேன். செல்வச் செழிப்பில் மலேசியாவில் வளர்ந்த அவர் பட்டுச் சேலையை மாற்றி எளிமையான கருப்புச் சேலை மணமகளாக வந்த நாள் முதல் எளிமையான வாழ்க்கை. புரடசிக் கவிஞர் அன்றே சொன்னது போல வளமை எளிமையை விரும்பும் வியப்பாகத்தான் மாறிவிட்டார்.
ஆசிரியர் தந்தை பெரியாரிடம் ஊதியம் பெற்றுக் கொள்ள மாட்டேன் என்று பணிக்கு வந்ததிலிருந்து அம்மையார் தான் அனைத்துமாக அவருடைய சொத்துகளினால் தான் வாழ்க்கை. குழந்தைகள் என்ன படிக்கின்றார்கள் என்று கூடத் தெரியாத ஆசிரியர். அவரது அயராத உழைப்பு, பயணங்கள்! பயணங்கள்!! அன்னை மணியம்மையார் எப்படி எளிமையாக உழைத்தாரோ அதே எளிமை, அதே உழைப்பு. வெளியே அழகாகத் தெரியும்; அந்த வேனில் தான் சாப்பாடு, சுருண்டு படுத்துத் தூக்கம் என்று அவருடன் பயணங்கள். அதில் உடன் சென்றவர்களுக்குத் தெரியும் அந்தக் கொடுமை! அவர் மருத்துவர்களிடம் கேட்கும் கேள்விகள், அய்யாவின் உடல்நலனில் அவர் காட்டும் அக்கறையில் நான் அவர்களை “டாக்டரம்மா” என்றே அழைப்பேன்! அவருக்கு உணவு அவரது கவலை !
முதல் மகன் அசோக்ராஜ் (அனைவர்க்கும் தந்தை பெரியார் தான் பெயரிட்டார்) பொறியியல் படித்தவர். கிறித்துவரான சுபிதா அவர்களைக் காதல் மணம் புரிந்தவர். அவராகவே அமெரிக்கா வந்து கடுமையாக இருவரும் உழைத்து முன்னேறியவர்கள். ஒரு மகன் சுரேயின் அவராகவே நன்கு படித்து அமெரிக்கரை வாழ்விணையாராக ஏற்றுக் கொண்டவர். அவர்களது மகள் நிதிலா தாதியர் துறையிலே மேற்படிப்புப் படித்து மிகவும் பெருமையான பாசுடன் மருத்துவமனையில் பெரும் பொறுப்பில் பணியாற்றுபவர். அமெரிக்கரை மணமுடிக்க உள்ளார்.
நமக்கெல்லாம் நன்கு தெரிந்த பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் பல் வேறு கடும் முயற்சிகளுக்குப் பின்னர் மிகப் பெரிய (இந்துஸ்தான் லிவர்) நிறுவனத்தில் விற்பனையாளராகத் தொடங்கினார். விடியற் காலையில் உண்டு , சாப்பாட்டைக் கையில் எடுத்துக் கொண்டுத் தொலைதூரம் நாள்தோறும் சென்று உழைத்தவர். தனது கடும் உழைப்பால் அந்த நிறுவனத்தில் அதற்கு மேலே வர முடியாது என்ற அளவிற்கு வளர்ந்து மற்றவர்களுக்குப் பயிற்சி தரும் பொறுப்பு வரை முன்னேறியவர். கழகத் தொண்டிற்கு நம்பிக்கையுள்ள உழைப்பாளி முக்கியத்தேவை என்ற காலகட்டத்தில் கடும் பணியை ஏற்றுக்கொண்டவர். காதல் திருமணம் செய்து கொண்டவர். அவருடைய வாழ்விணையர் சுதா மிகவும் அடக்கமான திறமை சாலி. மூத்த மகள் கவின் பொறியாளராகப் படித்துத் தானே உழைத்து முன்னேறித் தானாகவே அமெரிக்கா நியூசெர்சி ரட்கர் பல்கலைக்கழகத்தில் படிக்க வந்தவர். அங்கு அவரைப் பார்த்து வியந்தோம். இந்த வயதில் இவ்வளவு திறமையா? அங்கு வரும் இந்திய மாணவர்களை வரவேற்று அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து தரக்கூடிய அமைப்பை உருவாக்கியவர்.
தான் பட்ட இன்னல்களை மற்றவர்கள் படக் கூடாது என்ற நல்லெண்ணத்தின் செயல் வடிவம் . அவர் புதுடில்லி நண்பர் ரோகித்தைத் துணையாக ஏற்று அவர்கள் கலிபோர்னியா அழகான இல்லத்திற்குச் சென்ற போது இட்டிலியும், கோழிக்குருமாவும் செய்து பரிமாறி மகிழ்வித்தார். அவரது வாழ்விணையர் ரோகித் கிடார் வாசித்தார். அவர்கள் வாழ்விணையர் விழா எளிமையாக அமெரிக்காவில், வரவேற்பு பெரியார் திடலில் நடந்தது.
தம்பி கபிலன் அய்யா அவர்களின் நிழலாக இருந்து ஆறுதலும் தந்து உற்சாகமூட்டுபவர்.
தற்போது வாழ்விணையர் ஏற்பு விழா நடத்திக் கொண்ட சூரியா நல்ல மதிப்பெண்கள் பெற்று மருத்துவத் துறையில் ஒளி வீசப் போகும் நட்சத்திரம். அவரது வாழ்விணையர் டாக்டர் ராகுல். இவர்களுக்கு வாழ்த்துச் சொல்லத்தான் இந்தக் கட்டுரையே! பாட்டியின் அன்பு அரவணைப்பில் வளர்ந்து “ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் பேத்தி” என்று மகிழ்ச்சிக் கடலில் வங்கக் கடலருகே வாழ்க்கைத் துணையுடன் வாழ்வைத் தொடங்கும் தங்கச் செல்வங்களுக்கு கழகக் குடும்பங்களுடன் சார்பில் இதயங்கனிந்த வாழ்த்துகள். ஆசிரியரின் மகிழ்ச்சிக்கு நீங்கள் தந்துள்ள இந்த உற்சாகம் அவரைப் பீடு நடை போடவைக்கும் அரு மருந்தாகும். இந்த நேரத்திலே அதைத்தந்தமைக்கு மிக்க நன்றி.
மூத்த மகள் அருள்செல்வி ஓர் உழைக்கும் எந்திரம். நன்றாக தொழிலியல் படித்து நியூயார்க்கில் மேல் படிப்புக்கு அவராகவே வந்தார். இங்கு நன்கு படித்து எளிமையான வேலைகள் செய்து இணையரைத் தானே பார்த்துக் கொண்டார். எந்த உதவிகளையும் பெற்றுக் கொள்ள மாட்டார். எங்கள் இல்லதிற்கு வந்த போது சிறிய நன்கொடை கொடுத்தாக நினைவு. அவ்வளவு தான். அவரே மலேசியா மாப்பிள்ளையான பாலகுரு அவர்களை எங்கள் இல்லத்திற்கு அழைத்து வந்தபோது மிக்க மகழ்ந்தோம். பின்னர் சிகாகோவில் வாழ்க்கைத் துணைநல விழா, அமெரிக்காவில் முதல் சுயமரியாதை வாழ்ககைத் துணைநல விழாவாகச் சிறப்பாக நடந்தது. ஆசிரியரும், அம்மாவும் இலண்டன் மாமாவும் வந்திருந்தனர். அய்யாவை மகனாக அன்பு காட்டிய வர்சீனியா கர்சனர் குடும்பத்துடன் சேலை கட்டி வந்து முன்னின்று நடத்தினார்.
தந்தை பெரியார் அவர்களே வந்து அவர் வீரமணி-மோகனா மணவிழாவை நினைவு கூர்ந்து வாழ்த்தினார். (பெரியாராக வந்தது தலைமை தாங்கிய நான் தான்). அமெரிக்காவின் பல நகரங்களிலிருந்து பலரும் வந்திருந்தனர். ஈழப் பாடகர் அய்ங்கரன் அவர்களின் இன்னிசை நடந்தது. சிகாகோ தமிழ்ச் சங்கம், தமிழ்ப் பள்ளிகள், பெரியார் பன்னாட்டமைப்பு என்று அவரின் உழைப்பு உன்னதமானது. போற்றத்தக்கது. விருந்தோம்பலின் சிகரம் அவர். அவரது செல்வர்கள் கவுதம், நீலன் இருவரும் அழகு தமிழ் பேசி அன்பு மழை பொழியும் செல்வங்கள்.உழைத்து முன்னேறி வருபவர்கள். தாத்தா பாட்டி மேல் அவர்கள் காட்டும் பற்றும் பாசமும் நண்பர்கள் போல் பழகுவதும் கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
கடைசி மகள் செல்ல மகள் கவிதா – அய்யா அடிக்கடி ஓய்வெடுத்துக் கொள்ளும் சிங்கப்பூர் வாசி. வாழ்விணையர் மாறன் கழகக் குடும்பத்தவர். அவருடைய தந்தையார் மானமிகு தி.நாகரெத்தினம் அவர்கள் திறமை மிக்கப் பேச்சாளர், செயல்வீரர். கடுமையான உழைப்பாளிகள். அவர்களது மகள் நிலா உண்மையிலேயே நிலவின் ஒளி போல மகிழ்ச்சி தரக்கூடியவர்.
சிங்கப்பூரின கல்வித் தரத்தின் விளை பயிர். இந்தப் பல்கலைக்கழகத்தில் வாழும் அனைவரும் நம் அன்பைப் பெற்றவர்கள்.
நமது இயக்கத்தின் தொண்டர்படையாம். இவர்கள் ஒவ்வொருவரையும் இதயங்கள் கனிய வாழ்த்துகின்றோம்.
வாழ்க பெரியார்! வளர்க அவர் தொண்டர்கள்!