சென்னை, செப்.3- தமிழ்நாட்டில் வைரஸ் காய்ச்சல் (Viral Fever – Tamil Nadu Health Department) அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாடு சுகாதாரத்துறை சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
பொது இடங்களில் முகக் கவசம் அணிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் மக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதை முற்றிலுமாக தவிர்க்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
காய்ச்சல், இருமல் அறிகுறி தெரிந்தால் உடனடியாக மருத்துவமனைகளை நாடவும் தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. சென்னை, கோவை, நீலகிரி, மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. பகல் நேரங்களில் வெயிலும் மாலை நேரத்திற்கு பிறகு மழையும் என கிளைமேட் மாறி மாறி வருகின்றது. இதனால் மழைக்கால நோய்களும் அதிகரித்துள்ளன.
வைரஸ் காய்ச்சல்
குறிப்பாக தலைநகர் சென்னையில் கடந்த சில நாட்களாகவே சளி, காய்ச்சல், இருமல், தலைவலி, தொண்டை பாதிப்புகளோடு அதிக மக்கள் பாதிக்கப்படுவதாகவும், சிகிச்சை சேர்வோர்களின் எண்ணிக் கையும் அதிகரித்து வந்தது.
இதில் வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்து இருப்பதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தான் தமிழ்நாடு முழுக்க வைரஸ் காய்ச்சல் சோதனைகளை தமிழ்நாடு சுகாதாரத்துறை தீவிரப்படுத்தி யுள்ளது.
மேலும் பொதுமக்களுக்கும் சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்புடன் சென்று வர வேண்டும் என்றும், முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. இதில் குறிப்பாக முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் மக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதை முற்றிலுமாக தவிர்க்கவும், அவசியமாக சென்று வர வேண்டும் என்றால் முகக் கவசம் அணிந்து செல்ல வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
முகக் கவசம் அணிய வேண்டும்
காய்ச்சல், இருமல் அறிகுறி தெரிந்தால் உடனடியாக மருத்துவ மனைகளை நாடவும் தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. மேலும் சளி, காய்ச்சல், இருமல், தலைவலி, தொண்டை பாதிப்புகளோடு வரும் நோயாளிகளின் மாதிரிகளை பரிசோதனை செய்யவும் சுகாதார ஊழியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
சளி, காய்ச்சல், இருமல், தலைவலி, தொண்டை பாதிப்பு போன்ற அறிகுறிகள் இருந்தால் பொதுமக்கள் அலட்சியம் காட்ட வேண்டாம் என்றும் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் காய்ச்சல் தொடர்பாக மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் எனவும் தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.