தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை!

3 Min Read

யூனியன் வங்கி ஓபிசி நலச் சங்கம், தமிழ்நாடு – 14 ஆம் மாநில மாநாடு
வரலாறு படைத்த கோவை மாநாடு – நல சங்க மாநாடு, சமூக நீதி மாநாடாக மிளிர்ந்தது!

கோவை, செப்.3 கோவையில் கடந்த 23.08.2025 அன்று யூனியன் வங்கி ஓபிசி நல சங்கத்தின் 14 ஆம் மாநில மாநாடு மிக எழுச்சியுடன், சிறப்பாக நடைபெற்றது.

மாநாடு மெல்லிசையுடன் தொடங்கியது. தொடர்ந்து, முதல் நிகழ்ச்சியாக, சமூகப் புரட்சியாளர் தந்தை பெரியாரின் படத்திற்கு, வங்கியின் உயர் அதிகாரிகள், தோழமை அமைப்பு தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

வரவேற்புரையை தோழர் சாந்தி பிரபா சிறப்பாக  நிகழ்த்தினார். தொடர்ந்து மாநாட்டிற்கு வருகை தந்த விருந்தினர்களுக்கு  நலச் சங்கத்தின் சார்பில் பயனாடை, நினைவுப் பரிசு, தந்தை பெரியார் குறித்த நூல் அளித்து சிறப்பு செய்யப்பட்டது.

தொடர்ந்து, மாநாட்டு அறிமுக உரையை நல சங்கத்தின் பொதுச் செயலாளர் சி. நடராசன் விரிவாக எடுத்துரைத்தார். தொடர்ந்து வாழ்த்துரையை தோழமை அமைப்பின் தலைவர்கள் சி.கணேசன் (பாங்க் ஆப் பரோடா), ஏ.கிட்டுசாமி (ஜி.அய்.சி. – நியூ இந்தியா), மண்டலத் தலைவர்கள் சிவா கோட்டையா முந்தாலா (நெல்லை), பி.சாரதா தேவி (திருச்சி), எஸ்.எஸ்.லாவண்யா (கோவை), பி.எம்.செந்தில்குமார் (சேலம்), எம்.செல்லதுரை (திருப்பூர்), கோவை மண்டல துணை பொது மேலாளர் சி.பிரபு, ஓபிசி பெண்கள் அணி அமைப்பாளர் ஞா.மலர்க்கொடி ஆகியோர் வழங்கினர்.

சங்கத்தின் தலைவர் கோ.கருணாநிதி தலைமை உரையை எழுச்சி உரையாக நிகழ்த்தினார்.

சிறப்புத் தீர்மானம்

தமிழ்நாடு பள்ளிகளில் சமூக நீதி, நீதிக்கட்சி சாதனைகள், தந்தை பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் வரலாறு பாடத்திட்டத்தில் இடம் பெற வலியுறுத்தி, சிறப்புத் தீர்மானத்தை துணை பொதுச்செயலாளர் எம்.பாக்கியராஜ் முன் மொழிந்தார். தீர்மானத்தை பலத்த கையொலியுடன் உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டனர்.

தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள்

தமிழ்நாட்டின் தனித்தன்மை, முன்னேற்றம், பெருமை ஆகியவற்றின் அடிப்படை “சமூக நீதி” என்ற கோட்பாடே ஆகும். 1920ஆம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சியைத் தொடங்கியதிலிருந்து, சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும், சமூக நீதியை நிலைநாட்டிய தலைவர்களுக்கு மக்கள் எப்போதும் ஆதரவளித்து வந்துள்ளனர்; அதற்கு மாறாக செயல்பட்டவர்களை உறுதியாக எதிர்த்தும் வந்துள்ளனர்.

இந்த நிலை இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத தனிச்சிறப்பு ஆகும். ஆனால், வருத்தமளிக்கும் உண்மை என்னவெனில், இன்றைய இளம் தலை முறைக்கு இந்த வரலாற்றுப் புரிதல் மிகக் குறைவு. இதற்குக் காரணம் – நீதிக்கட்சி சாதனைகள், சமூக நீதி இயக்கங்கள், தந்தை பெரியார் உட்பட பல தலைவர்களின் பங்களிப்புகள் ஆகியவை பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் இடம்பெறாததே.

இது கவலைக்குரிய குறைபாடாகும். எனவே, தற்போதைய திராவிட மாடல் அரசின் அக்கறை மற்றும் திறன் மீது நம்பிக்கை வைத்து, வரும் கல்வியாண்டு முதலே,

*சமூக நீதி வரலாறு,

*நீதிக்கட்சி சாதனைகள்,

*தந்தை பெரியார் மற்றும் தலைவர்களின் பங்களிப்பு கள்

ஆகியவை பாடத்திட்டத்தில் முறையாக சேர்க்கப்பட வேண்டும் என, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களையும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரையும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இது கல்வியையும் சமூக உணர்வையும் இணைக்கும் வரலாற்றுச் செயல் ஆகும்.

கோவை மண்டலப் பொது மேலாளர் எஸ்.ஏ.ராஜ்குமார் மாநாட்டைத் தொடங்கி வைத்து வரலாற்று செய்திகளை நம் கண் முன்னே கொண்டு வந்து சிறப்பான உரை நிகழ்த்தினார்.

மாநாட்டு நிறைவுரையை சிறப்பு விருந்தினர், சென்னை மண்டலப் பொதுமேலாளர் சத்யபான் பெகரா  வழங்கினார்.

கோவை மண்டலச் செயலாளர் தோழர் பி.எம்.அய். எம்.கிருஷ்ணன் நிகழ்த்தினார்.

மாநாட்டில் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் தோழர்கள், ரயில், பேருந்து, வாகனங்கள் மூலமாக திரளாக கலந்து கொண்டனர். அரங்கம் நிரம்பி வழிந்தது.

வங்கியின் உயர் அதிகாரிகளின் கருத்தாழம் மிக்க பேச்சினை பலத்த கரவொலியுடன் வரவேற்றன.

அனைத்து வகையிலும், கோவை மாநாடு, ஒரு சமூக நீதி மாநாடாக பரிணமித்தது என்றால் அது மிகையல்ல.

மதியம் நலச் சங்கத்தின் 30ஆம் பொதுக் குழு கூட்டம், தலைவர் கோ.கருணாநிதி தலைமையில் நடை பெற்றது. ஆண்டு அறிக்கை, வரவு செலவு அறிக்கை பொதுக் குழு ஏற்றுக் கொண்டதற்குப் பின்னர், தலைவராக கோ.கருணாநிதி, பொதுச் செயலாளராக சி. நடராசன் உள்ளிட நிர்வாகிகள் மீண்டும் ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஓபிசி பெண்கள் அணிக்கும் புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *