சென்னை, செப்.2- நடப்பாண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடந்து முடிந்து தேர்வர்கள் தேர்வு முடிவுக்காகக் காத்திருக்கின்றனர். அக்டோபர் மாதம் இந்த முடிவு வெளியாகும் என ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி அறிவித்துவிட்டது. அதற்கான பணிகள் இப்போது வேகமாக நடந்து வருகிறது. செப்டம்பர் 28 ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகள் நடந்து முடிந்ததும், குரூப் 4 ரிசல்ட் மீதான எதிர்பார்ப்பு இன்னும் எகிறத் தொடங்கும். அண்மைக்காலமாக டிஎன்பிஎஸ்சி படுவேகமாக செயல்பட்டு, தேர்வு முடிவுகளை காலம் தாழ்த்தாமல், அதிகபட்சம் மூன்று மாதங்களுக்குள் வெளியிட்டு வருவதால், குரூப் 4 தேர்வு முடிவுகளையும் அக்டோபர் மாத்திற்குள் கட்டாயம் வெளியிட்டுவிடும். இதையே தேர்வர்களும் எதிர்பார்க்கின்றனர்.
காலிப் பணியிடங்கள்
ஆனால், இதைவிட 2 முக்கியமான எதிர்பார்ப்புகள் இப்போது தேர்வர்கள் மத்தியில் இருக்கிறது. முதலாவது என்னவென்றால் காலிப் பணியிடங்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இப்போது வரை 3,935 காலிப் பணியிடங்கள் மட்டுமே இந்த ஆண்டு குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த காலிப் பணியிடங்கள் கலந்தாய்வுக்கு முன்பு இன்னும் கூடுதலாக அதிகரிக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எவ்வளவு என்பதில் தான் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்கள் மத்தியில் இருக்கும் மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. வெறும் சொற்ப எண்ணிக்கையில் இந்த காலிப் பணியிடங்கள் அதிகரிப்பு இருந்துவிடக்கூடாது என தேர்வர்கள் நினைக்கின்றனர்.
11 லட்சத்துக்கும் அதிகமானோர் நடந்து முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை எழுதியிருக்கின்றனர். அதனால், குறைந்தபட்சம் 10 ஆயிரம் காலிப் பணியிடங்களாவது இந்த தேர்வின் மூலம் நிரப்பப்பட வேண்டும் என தேர்வர்கள் எதிர்பார்க்கின்றனர். காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு என்ற பெயரில் 5 ஆயிரம் அல்லது 6 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் இந்த அதிகரிப்பு இருந்துவிடக்கூடாது நினைக்கின்றனர். தமிழ்நாடு அரசின் நிதித்துறை மனது வைத்தால் மட்டுமே காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு என்பது அதிகம் இருக்கும் என்பதை தேர்வர்களும் நன்கு அறிந்து வைத்திருக்கின்றனர். அதனால், தேர்வர்களை திருப்திப்படுத்தும் வகையில் இந்த காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு இருக்க வேண்டும் என டிஎன்பிஎஸ்சியிடம் இருந்து எதிர்பார்க்கின்றனர்.
தேர்வர்களின் எதிர்பார்ப்பு
அடுத்து மிக முக்கியான இன்னொரு கோரிக்கை என்னவென்றால் நடந்து முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் உத்தேச விடைகளில் பாடப் புத்தகங்களில் இருக்கும் விடைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என தேர்வர்கள் எதிர்பார்க்கின்றனர். 6ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பாடநூலில் இருக்கும் விடைகளுக்கு மாற்றாக ஒருசில விடைகள் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 உத்தேச விடைகளில் இருக்கின்றன. அவற்றை நீக்கிவிட்டு, பள்ளிக்கல்வித்துறை பாடநூல்களில் இருக்கும் விடைகளுக்கு முன்னுரிமை கொடுத்து, இறுதி விடையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தேர்வர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
இந்த இரு கோரிக்கைகளையும் டிஎன்பிஎஸ்சி கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது தேர்வர்களின் இப்போதைய பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.