பழங்குடிப் பெண் குடியரசுத் தலைவரைப் புறக்கணித்தது
தீண்டாமைக் கொடுமையே!பேராசிரியர்
மு.நாகநாதன்
கோடைக் காலத்தில் அனலைக் கக்கும் வெப்பக் காற்று, குளிர்காலத்தில் ‘கடிக்கும்’ குளிர் (biting cold as described by Delhi people) ஆகியன புதுடில்லியின் நிரந்தர அடையாளங்கள். சில ஆண்டுகளாகச் சுற்றுச் சூழல் பாதிப்பால் காற்றின் மாசு உச்ச நிலையைத் தொட்டுள்ளது. பெருகி வரும் காற்றின் நச்சுத் தன்மையால் ஆண்டுதோறும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் நிலை உள்ளது. யமுனை நதி உலகின் 10 மாசு நிறைந்த நதிகளில் ஒன்றாக உள்ளது. மனிதர்கள் வாழத் தகுதியற்ற இடமாக உள்ள புதுடில்லியில் இருக்கின்ற நாடாளுமன்ற இடமே போதுமானது. அப்படி ஒரு புதிய நாடாளுமன்றத்தைக் கட்ட வேண்டும் என்றால் தென்னாட்டில் ஒரு நகரில் கட்டியிருக்க வேண்டும். தென்னாட்டு மக்களை மதிக்கும் மாண்பாவது நிலைப் பெற்றிருக்கும். குளிர்கால நாடாளுமன்றக் கூட்டத் தொடரையோ அல்லது நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரையோ தென் நாட்டின் தலைநகர்களில் நடத்த லாம். ஒன்றிய அரசு செய்யும் வீண் செலவினைக் குறைத்தால் தென்னாட்டில் நாடாளுமன்றத்தை அமைக்க முடியும். நடத்தவும் முடியும்.
இந்திய ஒருமைப்பாடு என்பது உரத்த குரலில் ஒலிப்பதல்ல.
பன்முக மக்களின் இணைவில் உயர்வதுதான் நாட்டின் ஒருமைப்பாடு. இந்த உயர்நெறிகள் பாசிச உணர்வுகளுக்குத் தெரியாது. அதனால் தான் எல்லா அரசியல் உயர் மரபுகளும் புதைகுழிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
நாட்டின் பெரும்பான்மையான மக்கள் வறுமையின் பிடியில். ஏற்றத் தாழ்வுகள் பெருகுகின்றன. பெரும் பணக்காரர்களின் பணமும், செல்வமும் நாளும் உயர்ந்து வருகிறது.
எத்தகைய ஜனநாயகம்! டில்லியில் ஏழைகள் இஸ்லாமியர்கள் குடியிருப்புகள் இடிக்கப்படுகின்றன. புதிய நாடாளுமன்ற வளாகம் திறக்கப்படுகிறது. நல்ல வேளை, நாடாளுமன்றத்தில் இடம் பெற்ற 19 எதிர்க் கட்சிகள் விழித்துக் கொண்டன. விழாவைப் புறக்கணிப்பு செய்துள்ளன.
சனாதன சங் பரிவாரங்களின் செருக்கு நிறைந்த, பேராதிக்க, அறிவற்ற, வெற்று முழக்கமிடுகிற அதி காரக் குவியலின் அடையாளம் தான் இன்றைய ஒன்றிய அரசின் ஆட்சி முறை. ஜனநாயகத்தின் அனைத்துக் கூறுகளும் சரிந்து சாய்ந்து வருகின்றன.
சென்ற மாதத்தில் புதுடில்லியில் சனாதன ஆட்சி பீடத்தில் ஜனநாயகமும், கூட்டாட்சி இயலும் வெட்டிச் சாய்க்கப்பட்டுள்ளன. புதுடில்லி ஆம் ஆத்மி ஆட்சியின் சார்பில் முதலமைச்சர் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் அய்ந்து நீதிபதிகளின் அமர்வு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சருக்கு இந்திய ஆட்சிப் பணி அதிகாரி களை மாற்றும் அதிகாரம் உள்ளது என்று சில நாள் களுக்கு முன்பு தீர்ப்பு அளித்தது. உடனடியாக புதிய அவசரச் சட்டம் ஒன்றிய அரசால் பிறப்பிக்கப்பட்டு உச்ச நீதிமன்றத் தின் தீர்ப்பு மாய்க்கப்பட்டது. கொலை வெறியை விட மோசமான சர்வாதிகார வெறியின் ஒட்டு மொத்த கூறுகளும் இந்த அவசரச் சட்டத்தின் உள் நோக்கத்தில் தென்படுகிறது.
நாடாளுமன்ற ஜனநாயக அடிப்படையின் உயர் நோக்கங்கள் சிதைக்கப்பட்டு வருகிறது. இன்று நாட்டிற்குத் தேவைப்படுவது புதிய அழகு கட்டடம் அல்ல. பன்முகத் தன்மையைப் போற்றும் மாநிலங்களுக்கு முழு ஆளும் உரிமைகளை அளிக்க புதிய ஜனநாயகம்.
கடந்த 10 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெறுவதில்லை என்பதைப் பல புள்ளிவிவர ஆய்வுகள் எடுத்துரை க்கின் றன. நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் பங்கேற்று விவாதிக்கும் நாள்கள் குறைந்து கொண்டே வருகின்றன என்பதைப் புள்ளிவிவரங்கள் எடுத் துரைக்கின்றன.
1952 முதல் 1970ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டி லும் சராசரியாக நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்று விவாதம் செய்த நாள்கள் 121 ஆகும். 2000 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஆண்டு சராசரி நாட்கள் 68 ஆக விழுந்துவிட்டது. 1990ஆம் ஆண்டிற்குப் பிறகு ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையின் மீதான விவாதங்கள், துறை சார்ந்த விவாதங்கள் குறைந்து வருகின்றன.
இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்களில் 43 விழுக்காட்டினர் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளன. இதில், 119 பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன. கொலை வெறி கோட்சேவின் வாரிசான பிரக்யா சிங் எனும் பெண் சாமியார், மாலேகான் பயங்கரவாத குண்டு வெடிப்பில் தண்டனைப் பெற்றவர். அவரும் நாடாளுமன்ற உறுப்பினர். அடிக்கடி காந்தி படத்தைச் சுட்டு கோட்சே புகழ் பாடுபவர்.
1993ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்படுகிற சட்டங்களை – அதற்கு முன்பாகவே உரிய முறையில் பல கட்சிகளைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆய்வு செய்து உரியப் பரிந்துரைகளை வழங்குவதற்கு நிலைக்குழுக்கள் உருவாக்கப்பட்டன. இது நாடாளுமன்ற நடவடிக்கைகள் விரைந்து நடைபெறப் பல நிலைகளில் உதவியது. ஆனால் 2004 ஆம் ஆண்டிற்குப் பிறகு 45 விழுக்காடு சட்ட வரையறைகள் தான் நிலைக் குழுக்களின் ஆய்விற்கு அனுப்பப்பட்டன. நாடாளு மன்ற உறுப்பினர்களை நம்பாத நாடாளுமன்றம் எப்படி ஜனநாயகத்தைச் செம்மைப்படுத்த இயலும்?
அதானி மோசடிகளை விசாரணை மேற்கொள்வ தற்கு நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்விற்கு உட்படுத்த வேண்டும் என்று அனைத்துக் கட்சிகள் சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது. பாஜக ஆட்சியால் இக்கோரிக்கை புறந்தள்ளப்பட்டது. நீதித்துறை, சட்டம் இயற்றும் துறை ஆகித் தளங்களில் நிர்வாகத்துறை, ஆக்கப்பூர்வமான அணுகுமுறையோடு செயல்பட்டால் தான் ஆட்சியியல் சீர் பெறும். குறிப்பாக எதிர்க்கட்சிகளின் அரிய கருத்துக்களை, ஆலோசனைகளைச் செவி சாய்த்து நல்லவற்றை ஏற்றுக் கொண்டு செயல்படுவதுதான் ஜனநாயக மாண்பினை உறுதிப்படுத்தும்.
நீதித்துறையுடன் மோதுதல், எதிர்க்கட்சிகளை பழி வாங்குதல், செய்தி தொலைக்காட்சி ஊடகங்களை அச்சுறுத்தல், நேர்மையாகச் செயல்படும் அரசின் உயர் நிலை அலுவலர்களைத் தவறான செயல்க ளுக்கு உறுதுணையாக இருக்க வலியுறுத்தல், ஒத்துப் போகாதவர்களைப் பழிவாங்குதல் ஆகியன மக்கள் விரோத, நாட்டு விரோத செயல்களாகும். இவை தான் இன்றைய பாஜக ஆட்சியின் இலட்சி யம். நான் வைத்தது தான் சட்டம் ஆட்சி, நீதி என்பது பாசிசத்தின் உச்ச வடிவம்.
குடியரசுத் தலைவரைப் புதிய நாடாளுமன்ற வளாகத் திறப்பு விழாவிற்கு அழைத்துச் சிறப்பு செய்யாமல் புறக்கணித்தது அரசமைப்புச் சட்டத்திற்கும், குடியரசு முறைக்கும் முற்றிலும் எதிரானதாகும். பழங்குடி இனத்தைச் சார்ந்த ஒரு பெண் தலைவரை அழைக்காதது தீண்டாமையாகும். அதுவும் காந்தி யைச் சுட்டுக் கொன்ற கோட்சே வழக்கில் குற்றவாளி பட்டியலில் இடம் பெற்ற, விடுதலைப் போரில் பல மன்னிப்பு மடல்களை பிரித்தானிய ஆட்சியாளர்க ளிடம் அளித்து கெஞ்சி விடுதலை கோரிப் பெற்ற ஒரு மாபெரும் கோழை சாவர்க்கர் பிறந்தநாளில், அதுவும் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையில் புதிய நாடாளுமன்ற வளாகத்தைத் திறப்பது சனாதனத் திமிரின் உச்சமாகும்.
பாசிசம் வீழட்டும்
கருணை இல்லா ஆட்சி
கடுகி ஒழியட்டும்.
தனியுடைமை கொடுங்கோன்மை
சாயட்டும்
பொதுவுடைமை மலரட்டும்.!
‘தீக்கதிர்’ 31.5.2023