எனக்கு அமைச்சர் தொல்லை கொடுக்கிறார்! புதுச்சேரி ஆளுங்கட்சி பெண் எம்.எல்.ஏ. பரபரப்பு குற்றச்சாட்டு

3 Min Read

காரைக்கால், செப்.1- ‘பாது காப்பான இடத்தில் நான் இல்லை. எனக்கு அமைச்சர் தொல்லை கொடுக்கிறார்’ என்று புதுச்சேரி ஆளுங்கட்சி பெண் சட்டமன்ற உறுப்பினர் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

இந்தக் காணொலி சமூக வலைதனத்தில் வைரலாக பரவி வருகிறது.

சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரியங்கா

புதுச்சேரி மேனாள் அமைச்சர் சந்திரகாசுவின் மகள் சந்திர பிரியங்கா (வயது 35). கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் காரைக் கால் பிராந்தியத்தில் நெடுங்காடு தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவருக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பதவி வழங்கப் பட்டது. அமைச்சரவையில் இருந்த ஒரு பெண் அமைச்சர் அவர்தான்.

இந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு அவரது பதவி திடீரென பறிக்கப்பட்டது. தற்போது அவர் நெடுங்காடு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

இந்த நிலையில் அவர் சமூக வலைத்தளங்களில் காணொலி ஒன்றை நேற்று முன்தினம் (30.8.2025) அவர் வெளியிட்டுள்ளார். 12 நிமிடம் 23 வினாடி ஓடக்கூடிய அந்த காணொலியை அவர் தனது காரில் அமர்ந்தபடி பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

பிறந்தநாள் கட்அவுட்

சில வாரங்களுக்கு முன்பு காரைக்காலில் ஒரு ‘கட்அவுட்’ பிரச்சினை பூதாகரமாக வெடித்தது. நீதிமன்றம் மூலமாக தாக்கீது வந்தது. அந்த கட்அவுட்டில் என் படம் இருந்ததால் நானும் பதில் சொல்ல வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தது.

அதை செய்தது யார்? என பார்த்தால் நீதிமன்ற செலவுக்கு கூட செய்ய முடியாத ஒரு ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த நபர். இதன் பின்னணியில் இருப்பது ஒரு ஆளுங்கட்சி அமைச்சர் என்பது நன்றாக தெரிகிறது. நான் ஒரு அமைச்சராக இருந்த போது பல டார்ச்சர்களை தந்தார். இப்ப சட்டமன்ற உறுப்பினராக இருக்கும்போது அதையும் மீறி ‘டார்ச்சர்’ (தொல்லை) கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

பாதுகாப்பான
இடத்தில் இல்லை

இன்னும் சொல்லப்போனால் நான் வீட்டுக்குப் போகும் பாதையெல்லாம் உளவாளி வைத்திருக்கிறார். குறிப்பாக என்னுடைய தொலைப்பேசியில் பேசும் ஆதாரங்களை அமைச்சர் பதவியை வைத்து வாங்குகிறார்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். நான் ஒரு பாதுகாப்பான இடத்தில் இல்லை என்பதும் தெரியும்.

அதையெல்லாம் மீறி ‘பீல்’ பண்ணி ஒரு புகார் தரலாம் என ஒரு உயர் அதிகாரியை சென்று சந்தித்தால், அவர் சொல்கிறார், வேண்டுமென்றால் உங்கள் சொத்துக்களை எல்லாம் வேறு யார் பெயரிலாவது எழுதி வைத்து விடுங்கள். இதெல்லாம் சகஜம் என அவர் கூறுகிறார். அந்த அதிகாரிக்கு எவ்வளவு அழுத்தம் கொடுத்து இருந்தால் இது போல் பேசுவார்.

மேனாள் அமைச்சராகவும், ஒரு சட்டமன்ற உறுப்பினர் ஸ்தானத்தில் இருக்கும் எனக்கே இப்படி என்றால், சாதாரண மக்களுக்கு என்ன செய்வார்கள்?.

என்னை வாழ விடுங்கள்

நமக்கெல்லாம் முதலாளி மக்கள்தான். அவங்களுக்கு நல்லதை செய்ய முன் வாருங்கள். இல்லை என்னிடம் பணம் உள்ளது. நான் என்ன ஆட்டம் வேணாலும் போடுவேன் என்றால், அதற்கு நான் ஆள் இல்லை.

நான் உங்களிடம் வரவேண்டும் என்ற அவசியமும் இல்லை. திருப்பி திருப்பி எனக்கு தொந்தரவு செய்றீங்க. குறைந்தபட்ச இந்த காணொலி எதுக்குன்னா. என்ன நீங்க தொந்தரவு செய்றீங்க என்று எனக்கும் தெரியும் என்பதை உங்களுக்கு காட்டத்தான்.

இன்னும் 8 மாதம் தான் இருக்கு தேர்தலுக்கு. அதனால் தேர்தல் வேலையை மக்கள் வேலையா பாருங்க. என்னையும் பார்க்க விடுங்க. ஒரு பெண் தானே என ஏளனமாக பார்க்காதீங்க. எல்லா தொகுதியிலும் பெண்கள் ஓட்டுதான் அதிகம். நீங்களும் வாழுங்க.. என்னையும் வாழ விடுங்கள். அவ்வளவு தான்!.

இவ்வாறு அவர் பேசி இருக்கிறார்.

சந்திர பிரியங்கா சட்டமன்ற உறுப்பினரின் இந்தக் காணொலி, தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *