கத்தார் நாட்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்து உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், பக்கிரிபாளையம் கிராமம், ரஹமான்பேட்டையைச் சேர்ந்த நவாஸ் (35 வயது) த/பெ.அன்வர் என்பவர் கத்தார் நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த 25.8.2025 அன்று நிகழ்ந்த சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்தார் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். கத்தார் நாட்டில் சாலை விபத்தில் உயிரிழந்த நவாசின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த நவாசின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ஐந்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
20 பேர் உயிரிழப்பு, 100-க்கும்
மேற்பட்டோர் காயம்
மேற்பட்டோர் காயம்
காபூல், செப். 1- ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் நேற்று (ஆகஸ்ட் 31) ஏற்பட்ட 6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.. இந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்ததாகவும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கப் புவியியல் ஆய்வு நிலையம் (USGS) வெளியிட்ட தகவலின்படி, இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணங்களைத் தாக்கியது. நிலநடுக்கத்தின் அதிர்வுகளை 5 லட்சம் பேர் உணர்ந்ததாகக் கூறப்படுகிறது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் உள்ள முறையான கட்டமைப்பற்ற கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தலிபான் செய்தித் தொடர்பாளர் ஒருவர், பாதிக்கப்பட்டவர்களை மீட்க உள்ளூர் அதிகாரிகளும் பொதுமக்களும் இணைந்து அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகக் கூறினார்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கான மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.