பல்கலைக்கழக மானியக் குழுவின் கற்றல் விளைவுகள் சார்ந்த பாடம் கட்டமைப்பு (LOCF) வரைவிற்கு திராவிட மாணவர் கழகம் கண்டனம்

3 Min Read

சென்னை, செப். 1- பல்கலைக் கழக மானியக் குழுவின் கற்றல் விளைவுகள் அடிப்படையிலான கட்டமைப்பு (LOCF) வரைவிற்கு திராவிட மாணவர் கழகம் கண்டனம் தெரிவித்தும், அக்.4 செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநில மாநாட்டிற்கு மாணவர்கள் பங்கேற்க அழைப்பு விடுத்து திராவிட மாணவர் கழக மாநில பொறுப்பாளர்கள் சந்திப்புக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சென்னை பெரியார் திடல் அன்னை மணியம்மையார் அரங்கத்தில் திராவிட மாணவர் கழக மாநில பொறுப்பாளர்கள் சந்திப்புக் கூட்டம் 31.08.2025 அன்று காலை 11.00 மணிக்கு தொடங்கி எழுச்சியோடு நடைபெற்றது. திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் இரா.செந்தூரபாண்டியன் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. அவர் திராவிட மாணவர் கழகம் செய்ய வேண் டிய அடுத்த கட்டப் பணிகள் குறித்து உரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் அவர்கள் சுயமரியாதை இயக்கமும், தந்தை பெரியாரும், திராவிடர் கழகமும் கடந்து வந்த பாதைகளையும், திராவிட மாணவர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்றும் எடுத்துக் கூறி சிறப்புரையாற்றினார். திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் மாணவர் கழகத்தின் வேலைத் திட்டங்கள் குறித்து கருத்துரை வழங்கினார். கழகப் பேச்சாளர் அதிரடி அன்பழகன் அவர்களும் இதில் பங்கேற்றார்.

திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் மு.இளமாறன் கூட்டத்தின் தொடக்கத்தில் கடவுள் மறுப்பு கூறினார். திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர்கள் மு.இராகுலன், ஆ.அறிவுச்சுடர், தேவ.நர்மதா, சீ.தேவராஜபாண்டியன் மற்றும் மாநில விளையாட்டு அணி அமைப்பாளர் ம.பூவரசன், மாநில சட்டக் கல்லூரி துணை அமைப்பாளர் ச.மணிமொழி, வடசென்னை மாணவர் கழகச் செயலாளர் சஞ்சய், காரைக்கால் மாணவர் கழக பொறுப்பாளர் அறிவுசெல்வன், மருத்துவ கல்லூரி மாணவர் அறிஞன், மாணவர் கழகப் பொறுப்பாளர் சுபாஷ், தருமபுரி மாணவர் கழகம் இராஜேஷ், ஆத்தூர் மாணவர் கழகம் அஜித், நாகராஜ், கருப்பசாமி உள்ளிட்ட மாணவர் கழகத் தோழர்கள் 20 பேர் பங்கேற்றனர். மாநில மாணவர் கழகத் துணைச் செயலாளர் செ.பெ.தொண்டறம் நன்றி கூறினார்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

2025 அக்டோபர் 4 அன்று செங்கல் பட்டு மாவட்டம் மறைமலை நகரில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமையில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா திராவிடர் கழக மாநில மாநாட்டில் திராவிட மாணவர் கழகம் சார்பில் பெருந்திரளாகப் பங்கேற்பது என்றும், ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் 100 மாணவர்களை அழைத்து வருவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 147 ஆம் பிறந்த நாள் விழாவினை (செப்-17- சமூகநீதி நாள்) ஒவ்வொரு மாவட்டத்திலும் திராவிட மாணவர் கழகம் சார்பில் எழுச்சி யோடு கொண்டாடுவது என்றும், பள்ளிக் கல்லூரி வாயில்களில் அய்யா படத்தினை வைத்து இனிப்புகள் வழங்கி மாணவர்களை ஒருங்கிணைத்து கொண்டாடுவது என்றும், ஒவ்வொரு மாவட்டத்திலும் திராவிட மாணவர் கழகம் சார்பில் கருத்தரங்கங்களை நடத்துவது என்றும் முதல் கட்டமாக வரும் செப்-14 அன்று கன்னியாகுமரியில் மாவட்ட திராவிட மாணவர் கழகம் சார்பில் கருத்தரங்கத்தை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

பல்கலைக் கழக மானியக் குழுவின் கற்றல் விளைவுகள் சார்ந்த பாடத்திட்டக் கட்டமைப்பு (LOCF) வரைவில் வேதியியல் பாடம் சரஸ்வதி வணக்கத்துடன் தொடங்குவதும், வணிகப் பாடத்திட்டம் அர்த்த சாஸ்திரத்தை அடிப்படையாக கொண்டதாகவும், இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் சாவர்க்கர் பற்றிய பாடத்தினைத் திணித்தும் முழுக்க முழுக்க கல்வியை காவிமயமாக்கும் முயற்சியாகவும், அரசமைப்புச் சட்டத்தின் சரத்து-51A(h) க்கு எதிரானதாகவும், வரலாற்றைத் திரிப்பதை நோக்கமாகவும் கொண்டுள்ள வரைவினைத் திராவிட மாணவர் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.

தமிழ்நாடு மாணவர்களிடையே பல்வகைப் போதைகளுக்கும் அடிமை யாகாமல் காப்பதற்கான ‘போதை ஒழிப்புப் பிரச்சாரம்’ பணிகளைத் தீவிரப்படுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மதியம் 1.00 மணி அளவில் பெரியார் வலைக்காட்சி தோழர்கள் கமலேஷ் மற்றும் அருள் ஆகியோர் ஊடகத்தில் செயல்படுவது தொடர்பான பயிற்சியினை திராவிட மாணவர் கழகத் தோழர்களுக்கு வழங்கினர்.

இதனை தொடர்ந்து சமூக, பன்னாட்டு வரலாற்றை அறியும் நோக்கில் திராவிட வரலாற்று ஆய்வு மய்யத்தின் ஒருங்கிணைப்பில் 4 மணி முதல் 6 மணி வரை சென்னை அரசு அருங்காட்சியகத்தினை மாணவர் கழகத் தோழர்கள் பார்வையிட்டனர். இதில் தொல்லியல் துறை பேராசிரியர் முனைவர் ச.தீபிகா மாணவர்களுக்கு வரலாற்றைத் தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் புரிந்து கொள்ள வழி காட்டினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *