சென்னை, செப்.1- ‘இயற்கையோடு இணைந்து வாழ வேண்டிய குரங்குகளுக்கு, பொங்கல், வடை என உணவளிப்பது சரியா?’ எனச் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சோளிங்கர் கோயிலில் உள்ள குரங்குகளைப் பிடிக்கும் வனத்துறையின் நடவடிக்கைக்குத் தடை கோரிய மனுவுக்கு, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் உள்ள சிறீ லட்சுமி நரசிம்மர் மற்றும் சிறீ ஆஞ்சநேயர் கோயில்கள் உள்ளன. ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ள மலை மற்றும் அதன் வளாகத்தில் ஏராளமான குரங்குகள் உள்ளன.
2018 முதல் கடிகாசல மாருதி டிரஸ்ட் பக்தர்களின் உதவியுடன் குரங்குகளுக்கு உணவு, குடிநீர் வழங்கி வருகிறதாம். இந்நிலையில், ஆகஸ்ட் 12-ஆம் தேதி, மாவட்ட வனத்துறை குரங்குகளைப் பிடித்து அங்கிருந்து அகற்றியது. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும், பக்தர்களின் மத நம்பிக்கையைக் காயப்படுத்துவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
நீதிபதி எழுப்பிய கேள்வி: இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், ‘இயற்கையோடு இணைந்து வாழும் குரங்குகளுக்குப் பொங்கல், வடை போன்ற உணவுகளை அளிப்பது சரியா?’ என மனுதாரர் தரப்பிடம் கேள்வி எழுப்பினார்.
மேலும், ‘பொங்கல், வடை போன்ற உணவுகளைச் சாப்பிட்டுப் பழகியதால், மனிதர்கள் வைத்திருக்கும் உணவுகளை அவை பறித்துச் செல்லும்’ என்றும் நீதிபதி கருத்துத் தெரிவித்தார்.
இந்த மனுவுக்கு இந்து சமய அறநிலையத் துறை ஆணையர், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர், வனத்துறை அதிகாரி ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையைச் செப்டம்பர் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.