மும்பை, செப்.1 மராட்டியத்தில் மராத்தா சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டு மாநில தலைநகர் மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் 29.8.2025 அன்று மனோஜ் ஜரங்கே காலவரையற்ற உண்ணநிலைப் போராட்டத்தை தொடங்கினார். அவருக்கு ஆதரவாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மராத்தா சமூகத்தினர் மும்பைக்கு படையெடுத்தனர். இதன் காரணமாக மத்திய, தென்மும்பை பகுதிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தன. குறிப்பாக தென் மும்பை பகுதியில் இயல்பு நிலை குலைந்தது.
இந்தநிலையில் 30.8.2025 அன்று 2-ஆவது நாளாக மனோஜ் ஜரங் கேவின் உண்ணாநிலை போராட்டம் நீடித்தது. இந்த போராட்டம் காரணமாக நேற்றும் தென்மும்பை பகுதி போக்குவரத்து நெரிசலால் முடங்கியது. தென்மும்பையில் எங்கு பார்த்தாலும் மராத்தா சமூகத்தினர் கூட்டம், கூட்டமாக செல்வதை காணமுடிந்தது.
இதற்கு மத்தியில் மராத்தாக் களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அமைக்கப்பட்ட கமிட்டியின் தலைவரான மேனாள் நீதிபதி சந்தீப்ஷிண்டே, போராட்ட மேடைக்கு சென்று மனோஜ் ஜரங்கேயை சந்தித்து பேசினார். ஆனால் அவரது சமரசத்தை மனோஜ் ஜரங்கே ஏற்க மறுத்து விட்டார். மராத்தா இடஒதுக்கீட்டுக்காக அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.