புதுடில்லி, செப்.1- ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி சீனா சென்றார். தியாஞ்ஜின் நகரில் நேற்று (31.3.2025) அவர், சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசினார். “280 கோடி மக்களின் நலன் இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையிலான ஒத்துழைப்புடன் இணைக்கப்பட்டு உள்ளது. சீனாவுடனான உறவுகளை முன்னெடுத்து செல்வதில் இந்தியா உறுதியாக உள்ளது. இது ஒரு புதிய இயல்பு” என்று மோடி கூறினார்.
சீன தலைவருடனான இந்த சந்திப்பை எதிர்க்கட்சியான காங்கிரஸ் கண்டித்து உள்ளது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் மற்றும் தகவல் தொடர்பு பொறுப்பாளர் ஜெயராம் ரமேஷ் இது குறித்து கூறும்போது, “2020-இல் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ஆக்கிரமிப்பால், நமது வீரர்கள் 20 பேரை இழந்தோம். லடாக்கில் இன்னும் ராணுவ நிலைகள் அகற்றப்படவில்லை. இந்தியா அதை வற்புறுத்தாமல், அரசு பயண வருகைகள் மூலம் சீனாவுக்கு பரிசு தருகிறது.
சீனா, யார்லுங் சாங்கோவில் ஒரு பிரமாண்ட நீர்வழித்தட திட்டத்தை அறிவித்து உள்ளது. இது நமது வடகிழக்கு பிராந்தியத்துக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். இந்த பிரச்சினையிலும் மோடி அரசாங்கம் ஒரு வார்த்தைகூட கண்டித்து பேசவில்லை.
சீனாவில் இருந்து கட்டுப் பாடற்ற முறையில் தரம்குறைந்த பொருட்களை இறக்குமதி செய்து நமது நாட்டின் சிறுகுறு தொழில்களை தொடர்ந்து அழித்து வருகிறது. சீன ஆக்கிரமிப்பு, மிரட் டல் மற்றும் நமது அரசாங்கத்தின் முதுகெலும்பற்ற தன்மை ஆகியவற்றால் ‘புதிய இயல்பு’ வரையறுக்கப்பட வேண்டுமா?”
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.