கேரள மாநிலம், கொச்சியில் உள்ள கனரா வங்கி வளாகக் கேன்டீனில் மாட்டிறைச்சி உணவுகள் சாப்பிடவோ, சமைத்து விற்கவோ கூடாது என்று புதிதாகப் பொறுப்பேற்ற மேலாளர் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். இந்தியாவிலேயே மாட்டிறைச்சி உணவை அதிகம் உட்கொள்ளும் மாநிலம் கேரளம். ஒப்பீட்டளவில், தமிழ்நாட்டை விட மிகச்சிறிய மாநிலமான கேரளாவில், தமிழ்நாட்டை விட ஆண்டொன்றுக்கு 3 மடங்கு அதிகமாக மாட்டிறைச்சி உட்கொள்ளப்படுகிறது. ஒன்றிய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறையின் தரவுகளே இதை உறுதிப்படுத்துகின்றன.
அத்தகைய மாநிலத்திற்கு வங்கி ஊழியராகச் சென்ற, பீகாரைச் சேர்ந்த நபர், வடமாநிலங்களைப் போல கருதிக்கொண்டு, தனது கட்டுப்பாட்டில் உள்ள வங்கிக் கிளையின் உணவகத்தில் மாட்டிறைச்சி உண்ணக்கூடாது என்று விதித்த கட்டுப்பாடு, அம்மாநில வங்கிப் பணியாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, அந்த மேலாளருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும், தங்கள் உணவு உரிமையை வெளிப்படுத்தும் விதமாகவும் வங்கிப் பணியாளர்கள் கூட்டமைப்பின் சார்பில், மாட்டிறைச்சி உணவுத் திருவிழா நடத்தியுள்ளனர். “என்ன உண்ண வேண்டும்? என்ன உடுத்த வேண்டும்? என்பதை முடிவு செய்யும் அதிகாரம் உயரதிகாரிகளுக்கு இல்லை. அது எங்களின் உரிமை” என்று அவர்கள் வெளிப்படுத்திய எதிர்ப்பு, நாடெங்கும் கவனம் ஈர்த்துள்ளது.
உணவு உரிமைக்கு எதிராக, பா.ஜ.க. மற்றும் இந்துத் துவ அமைப்புகள் வெளிப்படுத்தும் கருத்துகள், நடவடிக்கைகளின் விளைவுதான் வங்கி மேலாளரின் இந்தப் புரிதலற்ற நடவடிக்கைக்குக் காரணம் என்றும், சமூக வலைதளங்களில் விவாதிக்கப் படுகிறது. நாடெங்கும் மாட்டிறைச்சிக்கு எதிராகப் பேசும் பா.ஜ.க.வோ அல்லது இந்துத்துவப் பரிவாரங் களோ அவர்கள் ஆளும் கோவாவில், மாட்டிறைச்சி தடை குறித்து, ஏன் வாய் திறப்பதில்லை என்று சிந்தித்தாலே, அதனுள் இருக்கும் அரசியல் புரியும்!
செய்திகள் சில வரிகளில்…
தசராவைத் தொடங்கி வைக்கும்
கன்னட இஸ்லாமியப் பெண் எழுத்தாளர்!
கன்னட இஸ்லாமியப் பெண் எழுத்தாளர்!
கருநாடக மாநிலத்தில் நடைபெறும் தசராவைத் தொடங்கி வைக்க, 2025-ஆம் ஆண்டின் புக்கர் விருது பெற்ற கன்னட எழுத்தாளரும், செயல்பாட்டாளருமான பானு முஸ்டாக்கை அழைத்திருக்கிறது கர்நாடக அரசு. அதை வழக்கம் போல் சங்கிகள் எதிர்க்கின்றனர். ஆனால், தசரா என்பது மதச்சார்பற்ற, மதம் தொடர்பற்ற விழா என்று கூறி, அந்த எதிர்ப்பைப் புறம் தள்ளியிருக்கிறார் கருநாடக முதலமைச்சர் சித்தராமையா. அய்தர் அலியும், திப்புசுல்தானும், திவான் மிஸ்ரா இஸ்மாயிலும் தசரா கொண்டாடியதற்கான சான்றுகள் இருக்கின்றன. வரலாற்றை அறியாத இந்த மதவாதப் பிடிவாதக்காரர்கள் தான் இதனை எதிர்க்கின்றனர் என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி மன்றங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு சட்டம்!
தெலங்கானாவின் உள்ளாட்சி மன்றங்களில் 42 விழுக்காடு பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கும் இரண்டு சட்ட முன்வரைவுகள் தெலங்கானா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. தாங்கள் இந்தச் சட்டத்தை ஆதரிப்பதாகவும், அதே நேரம் இது போன்ற மாநில அரசு நடத்திய சமூக, பொருளாதார கணக்கெடுப்புகளின் அடிப்படையில் அவசரச் சட்டங்களும், மசோதாக்களும் பீகார், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொண்டுவரப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குக் காத்திருக்கும் நிலையில், இந்தச் சட்டத்தை நிறைவேற்றுவதன் பலன் என்ன என்று அந்த மாநில பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் பாயல் சங்கர் கேள்வியெழுப்பியுள்ளாராம்.
“குடியரசுத் தலைவர் தானாக ஒப்புதல் வழங்குகிறாரா, ஒன்றிய அரசின் கருத்தின்படி ஒப்புதல் வழங்குகிறாரா?” என்று பதில் கேள்வி எழுப்பினால் பா.ஜ.க.வின் இரட்டை முகம் வெளியாகும்.