மதரஸாக்களுக்கு உத்தரகாண்ட் அரசு நெருக்கடி : சிறுபான்மையினர்அதிர்ச்சி

3 Min Read

டேராடூன், செப்.1 மதரஸாக்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த சிறுபான்மையினர் கல்வி முறைக்கும் மறு வடிவம்  வழங்குகிறோம் என்ற பெயரில் சிறுபான்மையினருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது உத்தரகாண்ட் அரசு.

இம்மாநிலத்தில், ‘உத்தராகண்ட் மாநில சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் மசோதா 2025’ கடந்த 20ஆம் தேதி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மதரஸாக்கள் மட்டுமின்றி, சீக்கியர்கள், ஜெயினர்கள், சமணர்கள், கிறிஸ்துவர்கள் மற்றும் பார்ஸி சமூகத்தினர் நடத்தி வரும் கல்வி நிறுவனங்களும் சிறுபான்மையினர் அந்தஸ்து பெற்று, அதற்கான பலன் சென்று சேரும் வகையில் இம்மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இஸ்லாமிய கல்வி நிறுவனங்களை தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக அம்மாநில பா.ஜ.க. அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கையே என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அங்கீகாரம் ரத்து

மத சிறுபான்மையினருக்கு மட்டுமின்றி, மொழி ரீதியாக சிறுபான்மையினராக உள்ளவர்களும் பயன்பெறும் வகையில் இம்மசோதா கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அதன்படி உத்தராகண்டில் குருமுகி மற்றும் பாலி மொழி பேசுவோர் சிறுபான்மையின அந்தஸ்து பெறுவர் என்றும் சொல்லப்படுகின்றது.

‘‘சிறுபான்மையின கல்வி நிறுவனங்களுக்கு வரும் நன்கொடைகள், மானியங்கள் மற்றும் பிற நிதிகளின் தவறான பயன்பாடு தடுக்கப்படுவதை இந்த மசோதா உறுதி செய்யும். அதன்படி முறைகேடுகள் நடந்திருப்பது உறுதியானால், உடனடியாக கல்வி நிறுவனத்துக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்படும். கல்வி நிறுவனங்களைக் கண்காணிக்க, சிறுபான்மையினர் கல்வி நிறுவன ஆணையமும் அமைக்கப்படவுள்ளது. அதன்படி புதிதாக கல்வி நிறுவனங்கள் துவங்குவோர், இனி இந்த ஆணையத்திடம் தான் அங்கீகாரம் பெற முடியும். இதற்காக சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள், சொசைட்டி சட்டம், டிரஸ்ட் சட்டம் மற்றும் கம்பெனிகள் சட்டத்தின் கீழ் முதலில் பதிவு செய்ய வேண்டும். நிலம், வங்கி கணக்கு மற்றும் பிற சொத்துகள் கல்வி நிறுவனத்தின் பெயரிலேயே பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். நிதி முறைகேடு, போதிய வெளிப்படைத்தன்மை இல்லாதது, மத மற்றும் சமூக நல்லிணக்கத்துக்கு எதிராக ஈடுபடுவது உள்ளிட்ட காரணங்கள் கண்டறியப்பட்டால், அந்த கல்வி நிறுவ னத்தின் பதிவு உடனடியாக ரத்தாகும்’’ என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

மசோதா ஏன்?

ஆனால், சட்டவிரோதமாக செயல்படும் மதரஸாக்களை மூடவே இந்த மசோதா கொண்டு வரப்பட்டதாக வெளிப்படையாக உத்தராகண்ட் முதலமைச்சர்  தாமி தெரிவித்துள்ளார்.

அரசு புள்ளிவிபரங்களின்படி உத்தராகண்டில், 450 பதிவு செய்யப்பட்ட மதரஸாக்கள் இயங்கி வருகின்றன. மேலும், கல்வித் துறையின் அனுமதியில்லாமல் 500க்கும் மேற்பட்ட மதரஸாக்கள் இயங்கி வருவதாகவும் தெரிய வந்துள்ளது. அவற்றில், 200 மதரஸாக்கள் சட்ட விரோதமாக செயல்பட்டு வருவதாக இந்துந்துவா அமைப்புகள் ஏற்கெனவே  எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் அதையே காரணமாக காட்டி, சட்டவிரோத அமைப்புகள் என்றும், பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவி செய்வதாகவும் குற்றம்சாட்டி மதரஸாக்களை முடக்குவதற்கு வசதியாக உத்தரகாண்ட் அரசு இச்சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

 எதிர்ப்பு

மதரஸாக்களை முற்றிலும் ஒழிக்கவே இந்த மசோதா கொண்டு வரப்பட்டதாக பெரும்பாலான முஸ்லிம் தலைவர்கள் விமர்சித்துஉள்ளனர். காங்கிரஸ் கட்சியும் இந்த மசோதாவுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முன்னாள் முதல்வரான ஹரிஷ் ராவத், ஆளும் பா.ஜ., அரசு குறுகிய மனப்பான்மையுடன் செயல்படுகிறது என குற்றஞ்சாட்டியுள்ளார். அவர்களுக்கு ‘மதரஸா’ என்ற உருது வார்த்தையே பிடிக்கவில்லை எனவும் விமர்சித்துள்ளார்.

உத்தராகண்ட் அரசு இப்படியொரு நடவடிக்கையை எடுத்திருப்பது முதல் முறை அல்ல. மற்ற மாநிலங்கள் தயங்கிய போது, பொது சிவில் சட்டத்தை அமல் படுத்திய முதல் மாநிலம் உத்தராகண்ட் தான்.

ஆர்.எஸ்.எஸின் மதவாத விருப்பங்களை நிறைவேற்றுவதில் உத்தரப்பிரதேச  அரசும், உத்தரகாண்ட் அரசும் போட்டிபோட்டு செயல்பட்டு வருகின்றன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *