அகமதாபாத், செப்.1 பிரதமர் மோடியின் சொந்த மாநிலமும், பாஜக ஆட்சி செய்யும் மாநிலமுமான குஜராத் மத வன்முறைகளுக்கு பெயர் பெற்றது. மோடி குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த போது நிகழ்ந்த வன்முறைகள் தான் தற்போது நாடு முழுவதும் அதே பாணியில் அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில், குஜராத் தலை நகர் அகமதாபாத்தில் உள்ள ஒரு பள்ளியில் நிகழ்ந்த மாணவர்களுக்கு இடையேயான குற்றச் சம்பவத்தின் மூலம் ஹிந்துத்துவா குண்டர்கள் மத வன்முறையை கிளப்பப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ஆகஸ்ட் 19 அன்று அகமதாபாத்தின் மணிநகரில் உள்ள செவன்த் டே அட்வென்டிஸ்ட் மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நண்பர்களான இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். கத்தியால் குத்தப்பட்ட மாணவர் ஹிந்து மதத்தைச் சேர்ந்தவர் என்ற நிலையில், குத்திய இரண்டு மாணவர்களும் ஹிந்து, முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஆனால் மாணவர் கத்தியால் குத்தப்பட்டதற்கு முஸ்லிம் மாணவர் தான் காரணம் என குற்றம்சாட்டி பஜ்ரங் தளம், விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட ஹிந்துத்துவா அமைப்பின் குண்டர்கள் பள்ளி வளாகத்திற்கு வெளியே திரண்டு போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தின் போது, “முஸ்லிம் மாணவர்களைப் பள்ளியில் சேர்க்கக் கூடாது” என ஹிந்துத்துவா குண்டர்கள் வெறுப்புப் பேச்சை கக்கினர். மேலும், அகமதாபாத்தில் மாணவர்களை பள்ளியில் சேர்க்க வேண்டாம் என ஹிந்துத்துவா குண்டர்கள் பல்வேறு பள்ளிகளில் மனுக்கள் கொடுத்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.