தந்தை பெரியார் படத்தை லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 04.09.2025 அன்று நடக்கும் கருத்தரங்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றி திறந்து வைக்கிறார்.
இது குறித்து ‘‘ரூ.25,000 வாடகை செலுத்தி ஈ.வெ.ரா. படத் திறப்பு’’ என்ற தலைப்பில் தினமலர் வெளியிட்டுள்ள செய்தி கீழே தரப்பட்டுள்ளது.
‘‘ஆக்ஸ்போர்டு பல்கலையில், ஈ.வெ.ராமசாமி படத்திறப்பு என முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பை கண்டதும், அப்பல்கலை. பி.ஆர்.ஓ., மற்றும் நண்பர்களிடம் விசாரித்தேன். ‘ஆக்ஸ்போர்டு’ பல்கலை அதிகாரப்பூர்வமாக முதல்வர் ஸ்டாலினை அழைக்கவில்லை; ஈ.வெ.ராமசாமி படத்திறப்பும் இல்லை’’ என தெரிவித்தது. ஆக்ஸ்போர்டு பல்கலை வளாகத்தில் கருத்தரங்கம் நடத்த, சிறிய அரங்குகள், 210 பவுண்டுக்கு வாடகைக்கு கிடைக்கும்.
அப்படி சிறிய அரங்குகளை வாடகைக்கு எடுத்து யார் வேண்டுமானாலும் நிகழ்ச்சி நடத்தலாம். முதல்வர் ஸ்டாலின் பிரிட்டன் வருவதால், தி.மு.க.,வினர் ஆக்ஸ்போர்டு பல்கலை வளாகத்தில், சிறிய அரங்கை வாடகைக்கு எடுத்துள்ளனர். அதில் தான் ஈ.வெ.ராமசாமி படத்தை திறக்க இருப்பதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.’’
இவ்வாறு ஒருவர் சொன்னதாக தினமலர் செய்தி வெளி யிட்டுள்ளது.
‘உண்மையின் உரை கல்’ என்று தன்னுடைய பத்திரிகையை விளம்பரம் செய்யும் அந்தப் புரட்டு மலர், குறைந்தபட்சம் இந்தச் செய்தியைப் பதிப்பிக்கும்முன் இணையதளத்தில் தேடியிருக்கலாம். ஆனால், ‘உண்மை ஒரு முறை சுற்றி வருவதற்கு முன்னால் வதந்தி நூறு முறை சுற்றி வந்துவிடும் என்பதையே ‘தாரக மந்திரமாகக்’ கொண்டு செயல்பட்டு வரும் தினமலரும், இந்துத்துவ கும்பலின் ‘அய்.டி. விங்’குகளும் சமூக ஊடகத்திலும், பத்திரிகையிலும் பொய்யை, புரட்டைப் பரப்புவது என முடிவெடுத்து நேற்று (30.8.2025) முதலே இந்தப் பொய்ச் செய்தியைப் பரப்பி தந்தை பெரியாரையும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களையும் இழிவு செய்ய வேண்டும் என நோக்கோடு செயல்பட்டு வருகின்றனர்.
உண்மை இதுதான்! இந்த சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மாநாடு ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தின் செயின்ட் ஆண்டனி மற்றும் பெல்லியோல் கல்லூரி இணைந்து நடத்தும் நிகழ்வு ஆகும்.
இதுகுறித்து செயின்ட் ஆண்டனி கல்லூரியின் இணையதளத்திலும்,
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தின் இணையதளத்திலும் விவரங்கள் வெளி யிடப்பட்டுள்ளன. (அவற்றின் இணைப்புச் சுட்டியும் படமும் இங்கே தரப்பட்டுள்ளது.)
ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் ஆக்ஸ்போர்டு டாக்ஸ் (OXford Talks) பகுதியில் இடம் பெற்றுள்ள இணைப்பக்கங்களில் நிகழ்வை ஒருங்கிணைப்பது St
Antony’s College, 62 Woodstock Road OX2 6JF என்பதும், அதன் Asian Studies Centre துறை ஒருங்கிணைப்பதும், ஒருங்கிணைப்பாளர்கள் பெயர்கள் Jim Mallinson (University of
Oxford), Faisal Devji (St Antony’s College) என்பதும், துறையின் அலுவல் பூர்வ மின்னஞ்சல் முகவரி உள்ளிட்டனவும் கொடுக்கப்பட்டு, நிகழ்வில் பங்கேற்பதற்குப் பதிவு செய்ய இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. இதே போல் செப்.4 மாலை தமிழ்நாடு முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான இணைப்பும், மறுநாள் நடக்கும் கருத்தரங்கு தொடர்ச்சிகான இணைப்பும் தனித்தனியே வழங்கப்பட்டுள்ளன.
அப்படியிருக்க திமுகவில் இருந்து ஓடி போய் அண்மையில் பாஜகவில் இணைந்த ‘இவர் தாவாத கட்சியில்லை தரணியிலே’ என்ற சிறப்புக்குரிய ஒருவரது புரளிப் பேச்சை செய்தியாக்கி வெளியிடுவதுதான் அவாளின் பத்திரிகா தர்மமா?