ராமேஸ்வரம், ஆக. 31– ஜூன் 30-ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற ஏழு மீனவர்களுக்கு, இலங்கை மன்னார் நீதிமன்றம் நேற்றுத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. இரு வருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மற்ற அய்ந்து பேருக்கு ரூ25 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
சசிகுமார் (38) மற்றும் சீனிமாலிக் (42) ஆகிய இருவர், இரண்டாவது முறையாக எல்லை தாண்டி மீன்பிடித்ததால், அவர்களுக்குத் தலா இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
மற்ற அய்ந்து மீனவர்களுக்கும் தலா ரூ 5 லட்சம் வீதம் ரூ.25 லட்சம் (இந்திய மதிப்பில் சுமார் ரூ 7.25 லட்சம்) அபராதம் விதிக் கப்பட்டுள்ளது. இந்த அபராதத்தைச் செலுத்தத் தவறினால், அய்ந்து பேரும் தலா ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த ஏழு மீனவர்களும் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், இந்தத் தண்டனை அவர்களின் குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைக்கப் பட்டிருந்த நிலையில், இந்தத் தீர்ப்பு வெளியாகியுள்ளது.