தெலங்கானாவில் வினோத கிராமம்:
திருமணமான பெண்கள் இறைச்சி சாப்பிட தடையாம்!
திருமணமான பெண்கள் இறைச்சி சாப்பிட தடையாம்!
தண்டா, ஆக. 31– தெலங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டம் வால்யநாயக் தண்டா என்ற கிராமத்தில் ஒரு விசித்திரமான வழக்கம் உள்ளது.
ஒரு பெண் திருமணம் செய்து கொண்டு மருமகளாக மாறினால் அவள் வாழ்நாள் முழுவதும் இறைச்சி சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன்பு காலரா பரவிய போது கிராமத் தலைவர் சீதம்மா மற்றும் மாரியம்மாவை வணங்கினார்.
கிராமத்தில் மருமகள்கள் காலரா வராவிட்டால் இறைச்சியைத் தொட மாட்டோம் என்று அப்போது சத்தியம் செய்தனர். இந்த கிராமத்தில் காலரா வராததால் இது தெய்வங்களின் அருள் என்று நம்பி இந்த வழக்கத்தைத் தொடர்கிறார்கள்.
2 ஆண்டுகளுக்கு ஒருமுறை துர்கா பவானி விழாக்கள் நடத்தப்படுகின்றன. திருவிழாவிற்கு முந்தைய நாள் சீதம்மா வணங்கப்படுகிறார். வெள்ளி அம்மனின் சிலைகள் தயாரிக்கப்பட்டு ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.
கிராமத்து குழந்தைகள் அல்லது ஆண்கள் யாராவது இறைச்சி சாப்பிட வேண்டியிருந்தால் அவர்கள் கிராமத்திற்கு வெளியே வெவ்வேறு சமையல் பாத்திரங்களில் சமைத்து, சாப்பிட்டு குளித்துவிட்டு பின்னர் வீட்டிற்கு வருவார்கள் என்று கிராம மக்கள் கூறினர்.
விநாயகர் ஊர்வலத்தில்
ஜாதி பற்றிய பாடலா?
நிறுத்திய காவல் துறையினர் மீது தாக்குதல்
நிறுத்திய காவல் துறையினர் மீது தாக்குதல்
தரங்கம்பாடி, ஆக. 31– தரங்கம்பாடியில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் காவல் துறையினரை தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, காட்டுச்சேரி கிராமத்தை சேர்ந்த ஒரு சமூகத்தினர், விநாயகர் சிலையை நேற்று முன்தினம் (29.8.2025) ஊர்வலமாக தரங்கம்பாடி கடற்கரைக்கு எடுத்து வந்தனர்.
அப்போது, சமுதாய பாடல்களை ஒலிபரப்பினர். பிரச்சினை ஏற்படும் என்பதால் அப்பாடல் ஒலிபரப்பை உளவு பிரிவு காவலர் கார்த்திக் நிறுத்தியுள்ளார்.
அதே சமயத்தில், தில்லையாடியில் இருந்து விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்து வந்த மற்றொரு சமூகத்தினர், திரைப்படம் ஒன்றில் வரும் தங்கள் சமூகம் குறித்த பாடலை ஒலிபரப்பினர்.
இதுகுறித்து, காட்டுச்சேரி இளைஞர்கள் புகார் தெரிவித்தனர். காவலர் கார்த்திக் பாடலை நிறுத்த அறிவுறுத்தினார். ஆனால், மீண்டும் அதே பாடலை ஒலிபரப்பியதால் புளுடூத் மூலம் பாடலை ஒலிக்க பயன் படுத்திய கைப்பேசியைக் கைப்பற்றி, பாடலை நிறுத்தியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தில்லையாடி இளைஞர்கள் சிலர், கார்த்திகை சரமாரியாக தாக்கி, தங்கள் கைப்பேசியை எடுத்துக்கொண்டு தப்பினர். காயமடைந்த கார்த்திக் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பொறையார் காவல் துறையினர், தில்லையாடி கிராமத்தை சேர்ந்த பாலாஜி, முருகானந்தம், ஆகியோரை கைது செய்தனர்.