சென்னை, ஆக.31– அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நாய், பாம்பு கடிக்கு தேவையான மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
நலம் காக்கும் ஸ்டாலின்
சென்னை மணலியில் நடந்த ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (30.8.2025) ஆய்வு செய்தார். அப்போது, மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்றிதழை வழங்கினார்.
பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
மக்களை தேடி மருத்துவம் திட்டம் 2 கோடி பயனாளிகளை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த திட்டத்திற்கு அய்க்கிய நாடுகள் மன்றம் விருதும் வழங்கியுள்ளது. இதே போல, நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். மொத்தம் 1,256 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டது. இதுவரை 3 வாரங்கள் இந்த முகாம்கள் நடைபெற்றுள்ளன. 4ஆவது வாரமாக தமிழ்நாடு முழுவதும் இன்று (30.8.2025) தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அனைத்து வருவாய் மாவட்டங்களிலும் இந்த முகாம்கள் ஒவ்வொரு வாரமும் நடத்தப்பட உள்ளது.
இதுவரை நடந்த 112 முகாம்களின் மூலம் 1,48,290 பேர் பயனடைந்துள்ளனர். எலும்பியல், நரம்பியல், இருதயம், மகப்பேறு உள்ளிட்ட 17 வகையான சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் சிரமம் இல்லாமல் தங்களுக்கான சான்றிதழை பெற்றுச் செல்கிறார்கள். காப்பீடு திட்ட அட்டைகள் குறித்தும் முகாம்களில் சரிபார்த்துக்கொள்ளலாம்.
மருத்துவ முகாம்
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டு தேவையான சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. இந்த முகாமில் பரிசோதனைக்கு வரும் நபர்களுக்கு முழுமையான பரிசோதனை செய்யப்பட்டு அதற்கான ஆவணங்கள் அவர்களிடமே உடனடியாக ஒப்படைக்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு மக்களிடத்தில் மிகப்பெரிய ஆதரவை பெற்று வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.
சென்னையில் 3,081 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால்வாய்கள் உள்ளது. வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு இந்த வடிகால்வாய்களை தூர் வாரும் பணியை மாநகராட்சி செய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய பின்னர் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டிய பகுதிகள் கணக்கெடுக்கப்பட்டு அங்கு மருத்துவ முகாம்கள் நடைபெறும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நாய்கடி, பாம்புக்கடிக்கு தேவையான மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்வில், மாநகராட்சி நிலைக்குழு தலைவர் சாந்தகுமாரி, சென்னை மாநகராட்சி நகர நல அலுவலர் ஜெகதீசன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.