முதலமைச்சரின் அறிவிப்பு மனிதாபிமானத்தின் அடையாளம்!
தமிழர் தலைவர் அறிக்கை
ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற மிக மோசமான ரயில் விபத்தில் இதுவரை இருநூற்றுக்கும் மேற் பட்டோர் உயிரிழந்திருக்கும் செய்தி பேரதிர்ச்சி யையும், பெரும் கவலையையும் அளிக்கிறது.
விபத்தில் உயிரிழந்தோருக்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். படு காயம் அடைந்திருப்போருக்கும், மருத்துவ உதவி தேவைப்படுவோருக்கும் உடனடியாகச் சிகிச் சைகள் நடைபெற்று வருவது ஆறுதலானது. அவர்கள் பாதிப்பிலிருந்து மீண்டு வர நம்முடைய விழைவை தெரிவித்துக் கொள்கிறோம்.
மீட்புப் பணிகளில் ஒன்றிய அரசு கவனம் செலுத்துவதுடன், விபத்துக்கான காரணத்தைத் தீவிரமாக ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை களுக்கும், இனி இத்தகைய விபத்துகள் நடக்காமல் இருப்பதற்குமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை களுக்கும் ஆவன செய்ய வேண்டும்.
உடனடியாக ஒடிசா மாநில முதலமைச்சரைத் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடர்பு கொண்டு, தேவைப்படும் உதவிகளைத் தமிழ்நாடு அரசு செய்யும் என்று அறிவித்திருப்பதும், பாதிக்கப்பட்ட வர்களுக்கு உதவக் கூடிய வகையில் தமிழ்நாடு அரசின் அமைச்சர்கள் தலைமையிலான குழுவை உடனடியாக அனுப்பியிருப்பதும் ஆறுதல் அளிக்கக் கூடியதாகும்.
இன்று (3.5.2023) கொண்டாடப்படவிருந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளை ரத்து செய்து, இன்று ஒரு நாள் தமிழ்நாடு அரசின் சார்பில் துக்கம் கடைப் பிடிக்கப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பு மனிதாபிமானத்தின் அடையாளமாகும்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
3.6.2023