மல்லேசப்பா மடிவாளப்பா கல்புர்கி ஹிந்து அமைப்பினரால் கொல்லப்பட்ட நாள் (இன்று (30.08.2015)
கருநாடகத்திலும் பகுத்தறிவு இயக்கம் வலிமையானது. சாகித்திய அகாடமி விருது பெற்றவரான கல்புர்கி, மூட நம்பிக்கைகளுக்கும் மூடப் பழக்கவழக்கங்களுக்கும் எதிராகத் தொடர்ந்து பேசியும் செயல்பட்டும் வந்தவர்.
கலாச்சாரம் என்ற பெயரில் ஊறிப்போன பல பழக்கவழக்கங்களைக் கடுமையாக தொடர்ந்து எதிர்வினையாற்றினார். குறிப்பாக காலில்விழுவதை கடுமையாக எதிர்த்தார்.. பொட்டு வைப்பது, முக்காடு போடுவது, நல்லநேரம் பார்ப்பது என பல செயல்களை கண்டித்ததால் கல்புர்கியைக் கொல்லப்போவதாக ஹிந்து அமைப்பின் தலைவர் 2013 ஆம் ஆண்டு மிரட்டல் விடுத்தார்.
2014 ஜூன் முதல் அவருக்கு காவல்துறை பாதுகாப்பு தரப்பட்டிருந்தது. அந்தப் பாதுகாப்பு வேண்டாம் என்று சில மாதங்களுக்கு முன்னால் அவர் எழுத்துப் பூர்வமாகத் தெரிவித்து, காவல்துறைப் பாதுகாப்பை விலக்கிவிட்டார். பொதுத்தளத்தில் விமர்சனங்களை முன்வைப்பவர்களுக்கு இவை இரண்டுமே பழக்கப்பட்டவை என்பதால், கல்புர்கி இத்தகைய மிரட்டல்களையெல்லாம் ஒருநாளும் தீவிரமாக எடுத்துக்கொண்டதில்லை.
பகுத்தறிவு எழுத்தாளர் நரேந்திர தபோல்கர் 2013-லும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கோவிந்த பன்சாரே 2015-லும் கொல்லப்பட்டனர். அதன் பிறகு கவுரிலங்கேஷ். இந்த நான்கு படுகொலைகளிலும் கொலைகாரர்கள் இளைஞர்கள், இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளனர். வெகு அருகில் இருந்து கொலைசெய்திருக்கின்றனர். முதல் கொலை நடந்தவுடனேயே தீவிரமாகத் துப்புத்துலக்கி கொலையாளிகளையும், அவர்களை ஏவிவிட்ட சதிகாரர்களையும் பிடித்துத் தண்டித்திருந்தால், இது தொடர்கதையாக மாறியிருக்காது.
பொதுவாக, நம் சமூகத்தில் எழுத்தாளர்கள் விளிம்புநிலையினர். நம்மூரில் ஒரு தெருவில் முண்டா தட்டும் ஒரு ஜாதியவாதிக்கோ, மதவாதிக்கோ உள்ள பராக்கிரமம், படைபலம் எழுத்தாளர்களுக்கு இங்கே கிடையாது. ஆனால், அவர்கள்தான் இந்த சமூகத்தை அடுத்த தளம் நோக்கி நகர்த்தும் பணியில் ஈடுபட்டிருப்பவர்களில் முக்கிய இடத்தில் இருக்கிறார்கள். பேச்சுரிமையும் எழுத்துரிமையும்தான் சுதந்திரத்தின், ஜனநாயகத்தின் அடித்தளமாக அமைக்கின்றன.