இந்தியாவில் ஒரு நாளைக்கு சராசரியாக 18 வரதட்சணை மரணங்கள் நிகழ்வதாக தேசிய குற்ற ஆவணப் பணியகம் தெரிவித்துள்ளது. வரதட்சணைக் கொடுமை காரணமாக பெண்கள் வன்முறைக்கு ஆளாகி உயிரிழக்கும் அவலத்தை இந்த புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன.
தேசிய குற்ற ஆவணப் பணியகத்தின் 2022-ஆம் ஆண்டு அறிக்கைப்படி, இந்தியாவில் 6,516 வரதட்சணை மரணங்கள் பதிவாகியுள்ளன. இது, அதே ஆண்டில் பதிவான பாலியல் வன்கொடுமைக் கொலைகளை விட 25 மடங்கு அதிகம். மேலும், 13,641 பெண்கள் வரதட்சணைக் கொடுமை வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
வரதட்சணை மரண வழக்குகளில் நீதி கிடைப்பது அரிதாகி விட்டது. 2022-ஆம் ஆண்டின் இறுதியில், 60,577 வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்தன. அந்த ஆண்டில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 3,689 வழக்குகளில், வெறும் 33 விழுக்காடு வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும், புதிதாக விசாரணைக்கு வந்த 6,161 வழக்குகளில், 99 வழக்குகளில் மட்டுமே தண்டனை கிடைத்துள்ளது. இதன் மூலம், ஒரு ஆண்டில் தண்டனை கிடைப்பதற்கான வாய்ப்பு இரு விழுக்காட்டுக்கும் குறைவாக உள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், வரதட்சணை முறையை பெண்களை அடிமைப்படுத்தும் மற்றும் பொருளாதார ரீதியாகச் சுரண்டும் ஒரு கருவியாகக் கடுமையாக விமர்சித்தார். அவரது இந்த எச்சரிக்கை, இன்றும் இந்தியாவில் வரதட்சணை தொடர்பான வன்முறைகள் தொடர்வதைக் காட்டுகிறது. சமீபத்தில் நொய்டாவில் வரதட்சணைக் கொடுமை காரணமாக ஒரு பெண் தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் – இந்தப் பிரச்சினை இன்னும் ஆழமாக வேரூன்றியிருப்பதை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.
2004-2005ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட இந்திய மனித வளர்ச்சி கணக்கெடுப்பு, திருமணச் செலவுகளில் மணமகள் குடும்பங்கள் மணமகன் குடும்பங்களை விட 1.5 மடங்கு அதிகமாக செலவிடுவதாகக் கூறியது.
24 விழுக்காடு குடும்பங்கள் டிவி, கார், மோட்டார் சைக்கிள் போன்ற பொருட்களை வரதட்சணையாக வழங்குவதாகத் தெரிவித்துள்ளன. மேலும், 29 விழுக்காடு பேர், வரதட்சணைக் கோரிக்கைகளை பூர்த்தி செய்ய முடியாதபோது பெண்களை அடிப்பது ‘பொதுவானது’ என்று கூறியுள்ளனர்.
2019-2021 தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பின் படி, 18 முதல் 49 வயதுடைய திருமணமான பெண் களில் 29 விழுக்காட்டினர் உடல் அல்லது பாலியல் வன்முறைக்கு ஆளாகியுள்ளனர். இவர்களில் 3.3 விழுக்காட்டினர் கடுமையான தீக்காயங்கள் போன்ற கொடுமைகளை சந்தித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்கள் கடைசி நிமிடம் வரை சட்ட உதவியை நாடுவதில்லை என்பதையும் இந்த வழக்குகள் உறுதிப்படுத்துகின்றன. பெண்களிடம் இன்னும் போதிய விழிப்புணர்வு இல்லை என்பதைத் தான் இது காட்டுகிறது.
வரதட்சணை, சட்டவிரோதமான பழக்கமாக இருந்தாலும், சமூகத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது. இதை ஒழிக்க விழிப்புணர்வு, கல்வி, மற்றும் கடுமையான சட்ட அமலாக்கம் அவசியம்!
வரதட்சணை என்பது ஆரியப் பார்ப்பனர்களின் வாழ்க்கை முறை. ‘வரதட்சணை’ என்பதே சமஸ்கிருத சொல்தான்!
தமிழர்களிடம் அந்தப் பண்பாடு இல்லை; ஆரியக் கலாச்சாரமான அந்த நோய்த் தொற்றுப் பற்றியுள்ளது.
படித்து பணியில் அமர்ந்தாலும் பெண் வீட்டிலிருந்து மணமகன் வீட்டாருக்கு பணம் நகைகள் பாத்திரம், பண்டம், மெத்தை, பீரோ, நவீன கருவிகள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம் – இவற்றை எல்லாம் அளிக்கப்படும் அநாகரிக நிலை!
‘‘அய்ந்தாறு பெண் பிறந்தால் அரசனும் ஆண்டிதான்’’ என்று எப்பொழுதோ எதற்கோ சொல்லியிருந்தாலும் இப்பொழுது திருமணத்திற்குப் பொருந்துகிறது.
குறைந்தபட்சம் படித்த பெண்கள் இப்பிரச்சினையில் ஆவேசமாகப் பொங்கி எழ வேண்டும். மகளிர் காவல் துறைக்குப் புகார் அளிக்க முன்வர வேண்டும். ‘‘தொட்டிலை ஆட்டும் கை தொல்லுவகை ஆளும் கை’’ என்ற புரட்சிக் கவிஞரின் கவிதை வரிகளை நினைவூட்டுகிறோம்.