சென்னை, ஆக.30- அனை வருக்கும் அய்.அய்.டி. திட்டத்தின் கீழ் சென்னை அய்.அய்.டி.யில் 2 விதமான படிப்புகளை 353 அரசு பள்ளி மாணவர்கள் படித்து வருகிறார்கள். நடப்பாண்டில் 28 பேர் தற்போது சேர இருக்கின்றனர்.
அனைவருக்கும்
அய்.அய்.டி. திட்டம்
“அனைவருக்கும் அய்.அய்.டி.” திட்டத்தின் கீழ் சென்னை அய்.அய்.டி. பி.எஸ். தரவு அறிவியல், எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் ஆகிய சுயமாக கற்றல் (செல்ப் லேனிங்) படிப்புகளை அறிமுகம் செய்தது. இந்த படிப்பில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளை சேர்க்க ஏதுவாக தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை, சென்னை அய்.அய்.டி.யுடன் இணைந்து பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்காக ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளி மாணவ-மாணவிகளை நேரடியாக சந்தித்து, இந்த படிப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதற்கான தகுதித்தேர்வுக்கு தயார்படுத்தும் முன்னெடுப்புகள் செய்யப்படுகின்றன.
அதிலும் சராசரியாக படிக்கும், நன்றாக படிக்காத மாணவர்களை இந்த படிப்புகளில் சேர்க்கவேண்டும் என்ற நோக்கில் அவர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.
2 பட்டப் படிப்புகளை
முடிக்கும் வாய்ப்பு
அவ்வாறு அடையாளம் காணப்படும் மாணவ-மாணவிகள் இந்த தகுதித்தேர்வை எழுதுவதற்கு செலுத்த வேண்டிய தொகையையும் அரசே செலுத்துகிறது. அந்த தகுதித்தேர்வில் வெற்றிபெறும் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இந்த 2 படிப்புகளை சென்னை அய்.அய்.டி. ஆன்லைன் வாயிலாக வழங்கி வருகிறது.
தேர்வாகும் மாணவர்களின் பெற்றோருடைய ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால், அவர்களின் படிப்புக் கட்டணத்தில் 75 சதவீதத்தை அய்.அய்.டி.யே செலுத்துகிறது. மீதமுள்ள 25 சதவீதத்தை எஸ்.சி., எஸ்.டி.
எஸ்.சி.ஏ. மாணவர்களாக இருந்தால் அவர்களுக்கான கட்டணத்தை தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் செலுத்துகிறது.
மற்ற பிரிவினர் அந்த 25 சதவீத கட்டணத்தை மட்டும் செலுத்தினால் மட்டும் போதும். இந்த படிப்புகளை படிக்கும் மாணவ-மாணவிகள் வேறு படிப்புகளையும் தொடரலாம். அந்தவகையில் 2 பட்டப்படிப்புகளை முடிக்கும் வாய்ப்பையும் சென்னை
அய்.அய்.டி. இதன் மூலம் வழங்குகிறது.
353 பேர் படிக்கிறார்கள்
அதன்படி, 2022ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 353 அரசு பள்ளி மாணவ-மாணவிகள் சென்னை அய்.அய்.டி. வழங்கும் பி.எஸ். தரவு அறிவியல், எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் படிப்புகளை ஆன்லைன் வாயிலாக கற்று வருகின்றனர். அவர்களில் சிலர் ஒட்டு மொத்த சராசரி தரப்புள்ளி 8 என்ற அளவில் சிறந்து விளங்கவும் செய்கின்றனர்.
இதன் தொடர்ச்சியாக நடப்பாண்டிலும் மேற்சொன்னபடி, அரசு பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி, மாணவ-மாணவிகளை அடையாளம் கண்டு, 170 பேர் இந்த படிப்புகளை படிப் பதற்கான தகுதித்தேர்வை எழுதினார்கள். அவர்களில் 28 பேர் வெற்றி பெற்று, சென்னை
அய்.அய்.டி. வழங்கும் பி.எஸ். தரவு அறிவியல், எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் படிப்புகளில் தொடர இருக்கிறார்கள்.
இதனை சுட்டிக்காட்டி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தன்னுடைய எக்ஸ் தளப்பக்கத்தில், ‘முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தும் திட்டங்களின் துணையோடு அரசு பள்ளி மாணவச் செல்வங்கள் கல்வியில் உயரங்களை எட்டிப்பிடித்து சாதனை படைக்கிறார்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.