ஆசிரியர் விடையளிக்கிறார்

5 Min Read

கேள்வி 1: காலை உணவுத் திட்டம் மூலம் 20.50 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெறுவார்கள். ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி வளர்ச்சியில் அக்கறை செலுத்திய நீதிக்கட்சி ஆட்சித் திட்டங்களின் ஓர் அங்கமாக இத்திட்டத்தைக் கருதலாமா?

-ஜே.இராஜன், கிழக்கு தாம்பரம்.

பதில் 1: ‘நீதிக்கட்சி’ என்ற திராவிடர் இயக்கமான தாத்தாவின் (கொள்கைச்) சொத்தினை பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னரும் தேடி மீண்டும் பெற்று, அதைப் பல மடங்குப் பெருக்கி, உலகம் மெச்சத்தக்க வகையில் பயனுள்ளதாக்கிய ‘தம்மின் தம்மக்கள் அறிவுடைமை’யைக் கண்டு தாய்க்கழகத்தின் பூரிப்பும், பெருமிதமும் எல்லையற்றதாகிறது. இதுபோன்ற கல்வி நீரோடை நாடெல்லாம் பாய்ந்து, நமது செல்வங்களின் கல்வி வளர்ச்சியைக் காண்கையில் இளம் பயிர்களை முற்றிய கதிர்களாக்கி, களத்துமேட்டுக்கு அழைத்துச் செல்வதைப் பார்த்த உழவனின் எல்லையற்ற மகிழ்ச்சியைப் பெறுகிறோம்.

இத்தகைய தொடர் திராவிடர் ஆட்சியை சிறப்புடன் நடத்தி வருவதோடு, தந்தை பெரியாருக்கு அறிஞர் அண்ணாவால் அர்ப்பணிக்கப்பட்டு, கலைஞர், மு.க.ஸ்டாலின் என்ற நல்முத்துகள் ஆட்சி வரைப் பார்க்கும் வாய்ப்பு எம்மைப் போன்ற ‘முதிய இளைஞர்களுக்கு’ கிடைத்ததும் எத்தகைய அரிய வாய்ப்பு!

  • ••••

கேள்வி 2: மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலவரையின்றிக் கிடப்பில் போட்டாலும் நீதிமன்றம் தலையிடக் கூடாதா? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பிய பின்பும் சம்பந்தப்பட்டவர்கள் அலட்சியம் செய்வது ஏன்?

– ஜெ.இராதாகிருட்டிணன், கூடுவாஞ்சேரி.

பதில் 2: “எப்போதும் குறுக்குவழி – குதர்க்கப் புத்தி – அடாவடி அரசியல் – ஆணவ யதேச்சாதிகாரம்” என்றும் வரலாற்றில் தங்கியதில்லை – நிரந்தரமாக. ‘கிரகணங்கள்’ மறைப்பதுபோல ஒருசிறு இடைவெளி!’ அவ்வளவுதான். மக்கள் தக்க தண்டனை – ஜனநாயக முறையில் தருவார்கள் என்பதே கடந்தகால வரலாறு, அல்லவா? இயற்கை நியதியும் அதுதானே!

  • ••••

கேள்வி 3: அதிபர் டிரம்ப் கூறியபடி அமெரிக்காவில் இந்தியப் பொருட்கள் மீதான 50 சதவீத வரிவிதிப்பு அமலுக்கு வந்துள்ள நிலையில் – இதன் பாதிப்புகளிலிருந்து இந்தியா மீளுவது எப்படி?

 – அ.அப்துல்சமத், வேலூர்.

பதில் 3: ‘விசுவகுரு’ என்ற நமது பிரதமர்தான் இதற்குத் தக்க வகையில் – செயல் மூலம் பதில் அளித்து, நம் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை அடாவடிப் பெரியண்ணனாகத் தன்னைக் கருதி, தாவிப் பாயும் டிரம்பிற்குப் புரிய வைத்து, வீசும் ‘பொருளாதார சுனாமி’யிலிருந்து நமது நாட்டுப் பொருளாதாரத்தையும், தொழில், தொழிலாளர் உரிமைகளையும் காப்பாற்ற முன்வரவேண்டும். (இதுபற்றி விரிவான அறிக்கை வெளிவந்துள்ளதே.)

  • ••••

கேள்வி 4: வருகிற செப்டம்பர் 7ஆம் தேதி சந்திர கிரகணம் என்பதால், திருப்பதி ஏழுமலையான் கோவில் 12 மணி நேரம் மூடப்படும் என்று திருமலை-திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருப்பது எதைக் காட்டுகின்றது?

– ந.முனியாண்டி, ஆரணி.

பதில் 4: ‘ஏடு கொண்டல வாடு’ திருப்பதி வெங்கடாஜலபதியைவிட, ராகு-கேது பாம்பு அபார அதிகார சக்தி அச்சுறுத்தும் ஆற்றல் படைத்தது என்று அறிவிப்பது போல, ‘கடவுள் சக்தி’யின் அதிகார எல்லைக் கோட்டை மறைமுகமாக விளக்குவதே அது! – என்று புத்தியுள்ளவர் புரிந்துகொள்ளலாமே!

  • ••••

கேள்வி 5: தமிழ்நாட்டைப் போன்று காலை உணவுத் திட்டம் பஞ்சாப் மாநிலத்திலும் கொண்டுவரப்படும் என்று அம்மாநில முதல் அமைச்சர் பகவந்த் மான் அறிவித்துள்ளாரே?

– ம.வேல்விழி, வெங்கோடு.

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

பதில் 5: ‘திராவிட மாடல்’ ஆட்சியின் மாட்சி – முதல் அமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆளுமைத் திறன் பஞ்சாப் போன்ற மாநிலங்களில் மட்டுமல்ல, கனடா போன்ற நாடுகளிலும் பாராட்டிப் பின்பற்றும் நிலை ஏற்பட்டுள்ளதே!

“பசியுள்ள உலகத்தை மாற்றியமைக்கப் பாதை அமைப்பதே திராவிட இயக்கப் பாதை” என்பது இப்போதாவது ‘மரமண்டைகளுக்கு’ப் புரிந்தால் நல்லது!

  • ••••

கேள்வி 6: தமிழ்நாடு முழுவதிலும் உள்ள மாவட்ட அலுவலகம் மற்றும் கமிட்டி அலுவலகங்களில் ஜாதி மறுப்பு – காதல் திருமணங்களை நடத்துவதற்கான பாதுகாப்பு வழங்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் அறிவித்துள்ளது பற்றித் தங்கள் கருத்தென்ன?

– செல்வி பாபு, மதுரை.

பதில் 6: பாராட்டி வரவேற்க வேண்டியது தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் தோழர் பெ.சண்முகத்தின் அறிவிப்பு.

நமது பெரியார் திடலில் உள்ள சுயமரியாதைத் திருமண நிலையம் போல் – ஜாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை அழிப்பு, பெண்ணடிமை நீக்கமான சுயமரியாதைப் புரட்சித் திருமணங்களை முன்னிறுத்தி, மணமக்களாக விழைவோரை வாழ்த்தி இருகரம் நீட்டுவதோடு, முற்போக்கு சக்திகள் ஓர் அணியில் திரண்டு பாதுகாப்பையும் கொடுத்து, ஜாதிவெறியை சவப் பெட்டியில் ஏற்ற முனைவோம்.

(ஏற்கெனவே அக்கட்சியின் திருநெல்வேலிக் கிளை வழிகாட்டியும் உள்ளதே!)

  • ••••

கேள்வி 7: ‘தந்தை பெரியார் விருதுக்கு’ (2025) நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களை தி.மு.க. சார்பில் தேர்வு செய்திருப்பதை அறிந்தபோது தங்களின் உணர்வு எத்தகையது?

– ந.கண்மணி, காட்பாடி.    

பதில் 7: வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத மகிழ்ச்சி! உடனே அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தி அன்பையும், பாசத்தையும் கொட்டியபோது, சொன்ன ஒன்றை உங்களைப் போன்ற அனைவரிடமும் பகிர்ந்தாலே எனது உணர்வு எப்படி என்பது எவர்க்கும் எளிதில் புரியும். முன்பு காஞ்சியில் நடைபெற்ற அறிஞர் அண்ணா நூற்றாண்டில் எனக்குத் தந்தை பெரியார் விருதினைத் (கலைஞருக்கு அண்ணா விருது) தந்தனர். இனமானப் பேராசிரியர் வழங்கினார். “ஆசிரியரின் பகுத்தறிவுக் கொள்கை வார்ப்பில் மாணவியாக இருந்து வளர்ந்தேன்” என்று எந்த மேடையிலும் தவறாமல் சொல்லும் எங்கள் பகுத்தறிவுச் செல்விக்கு அதே விருது – இப்படி ஆசிரியர் பெற்றத் தகுதியை மாணவியும் பெறும்பேரு பெறுகையில் மகிழ்ச்சிக்கு எல்லை உண்டா? என்று கூறி மகிழ்ந்தோம்! எனது வாழ்விணையரும் வாழ்த்தினார்!

  • ••••

கேள்வி 8: கோவில்களில் ஜாதி மதப் பாகுபாடு பார்க்கும் அவலமும், புனிதத்தன்மை கெட்டுவிட்டதாகக் கூறி பரிகார பூஜைகள் நடத்தப்படுகின்ற கேவலமான செயல்களும் இந்தியாவில் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருவது ஜனநாயக நாட்டிற்கு அழகா?

 – பா.பாலகிருஷ்ணன், பாலக்காடு-கேரளா.

பதில் 8: இந்தியா ஜனநாயக நாடாக இருந்த நிலை மெல்ல மெல்ல மறைந்து, ஹிந்துராஷ்டிரமாகவே மாறிவரும் நிலையில் மோடி, ஆர்எஸ்எஸ் ஆட்சியில் அரசியல்கூட மதச்சார்பின்மைக்கு எதிராக ஆகிவிட்டதே. இப்போது இதில் மட்டும் என்ன குறை? “முழுக்க நனைந்த பிறகு முக்காடு ஏதுக்கடி குதம்பாய்?”

  • ••••

கேள்வி 9: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூந்தமல்லி மற்றும் மாதவரம் பகுதியில் பந்தல் அமைத்தபோது மின்கம்பி உரசியதால் மின்சாரம் தாக்கி இரண்டு பேர் பலியானாதை விநாயகர் தடுக்க வரவில்லையே – என்பதை பக்தர்கள் உணர்ந்து செயல்படுவார்களா?

– க.பூவராகவன், பூந்தமல்லி.

பதில் 9: விக்னத்தைப் போக்கும் விக்னேஸ்வரன் ‘சக்தி’ சகதியாக ஆகிய பரிதாபம் இது!

  • ••••

கேள்வி 10: குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் தமிழர் என்ற அடையாளத்தை முன் நிறுத்துவதில் எந்தப் பலனும் இல்லை என்று எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் கூறியிருப்பது சரியா?

– ச.பிரபாகரன், மணிமங்கலம்

பதில் 10: முழுமுகத்தை மறைக்க முகமூடிகள் பல ஆர்எஸ்எஸில் உள்ளன. அதில் இந்தத் ‘தமிழர் முகமூடி’ – லேட்டஸ்ட்.

தமிழர் என்பதற்கு விளக்கம் தெரியாது அதைப் பயன்படுத்தும் “மெண்டல்”களைப் போன்றதல்ல; திட்டமிட்ட திசைத்திருப்பல் இது! புரிந்துகொள்ளட்டும் தமிழர்கள்! எச்சரிப்பதே எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் கூற்று!

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *