இந்திய அரசியலில் மாநில அடையாளங்களும் தேசிய அளவிலான கூட்டணிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அத்தகைய சூழலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பீகார் மாநிலத்திற்குச் சென்று, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, தேஜஸ்வி மற்றும் இந்தியா கூட்டணி தலைவர்களுடன் இணைந்து வாக்காளர் அதிகார பயணத்தில் பங்கேற்றது, தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தேசிய அரசியலில் தென்னகத்தின் பங்கு
தமிழ்நாட்டின் அரசியல் எப்போதும் தேசிய அளவிலான தனித்துவமான உரிமை மீட்புக் குரலாக வெளிப்படுத்தியுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பீகார் பயணம் தென்னகக் கட்சிகளின் தேசிய அரசியலுக்கான பங்களிப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் பயணம், ஜனநாயகத்தை மீட்கும், அரசியலில் சமத்துவம் மற்றும் சமூக நீதியை வலியுறுத்தும் முழக்கமாகும்.
பீகார் மாநிலம் பொது உடமை மற்றும் சமூக நீதி அரசியலில் முக்கியப் புள்ளியாக கருதப்படுகிறது. அது விடுதலைக்கு முன்பும், அதன் பிறகான காலத்திலும் தாக்கம் தொடர்ந்தது. பொதுவுடைமைவாதி ஜெயப் பிரகாஷ் நாராயண், சமூகநீதியின் அடையாளங்களுள் ஒன்றாக திகழும் கர்பூரி தாக்கூர் போன்றவர்களிடம் அரசியல் பயின்றவர்களில் ஒருவர் தான் லாலுபிரசாத். அவரது மகனான தேஜஸ்வியுடன் தமிழ்நாடு முதலமைச்சரின் பங்கேற்பு, வடக்கு மற்றும் தென்னிந்திய அரசியல் ஒருமைப்பாட்டை வலுப்படுத்தி ராகுலின் பயணத்திற்கு கூடுதல் ஊக்கத்தை வழங்கியது.
முதலமைச்சர் கலந்துகொண்டதன் மூலம் தமிழ் நாட்டின் அரசியல் தெளிவு மற்றும் தொலைநோக்குப் பார்வை போன்றவற்றை வட இந்திய மாநிலங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்தப் பங்கேற்பு தமிழ்நாட்டின் அரசியலில் ஜனநாயகப் பங்கேற்பு மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை உறுதிசெய்யும் ஒரு முக்கியமான கட்டமாகும்.
பொதுவாக எந்த ஒரு விவகாரத்திலும் எதிர்வினை ஆற்றும் பா.ஜ.க. தலைமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பீகார் பயணம் குறித்து ஆழ்ந்த அமைதி காக்கிறது.
ஏற்கெனவே வாக்குத்திருட்டில் அம்பலப்பட்டுக் கொண்டு நிற்கும் பா.ஜ.க. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பீகார் பயணத்திற்குப் பதிலடி கொடுக்கும் போது அதற்கான எதிர்விணை அவர்களுக்கே ஆப்புவைக்கும் ஒன்றாகப் போய்விடும் என்பதால் பா.ஜ.க.வின் டில்லி தலைமை, பீகார் மற்றும் தமிழ்நாடு அமைதி ஒன்றையே பதிலாக வைத்துள்ளது.
இதிலிருந்தே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பீகார் பயணம் ஏற்படுத்திய அரசியல் அதிர்வலைகளை புரிந்து கொள்ளலாம்.