இதற்குப் பெயர் தான் ‘திராவிட மாடல்’ அரசு
சென்னை, ஆக.29 இந்தியாவில் சராசரி யாக ஒரு லட்சம் மக்களுக்கு 99 மருத்துவர்களும், தமிழ் நாட்டில் 194 மருத்துவர்களும் இருக்கிறார்கள் என்ற புள்ளி விவரங்கள் கிடைத்திருக்கின்றன.
நாட்டின் சுகாதார கட்டமைப்பில் மருத்துவர்களின் பங்கு மிகமுக்கிய மானது. அவர்கள் மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கும், பெருகி வரும் நோய்களைத் தடுப்பதற்கும், அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்வதற்கும் மற்றும் சமூகத்தின் ஒட்டுமொத்த நலவாழ்வை மேம்படுத்துவதற்கும் முதுகெலும்பாக இருக்கின்றனர்.
அதிலும் குறிப்பாக தொற்று நோய்க ளைக் கட்டுப்படுத்துதல், தொற்று கண்காணிப்பு மற்றும் அதற்கான சுகாதார கொள்கைகளை வகுப்பதில் மருத்துவர்கள் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஒட்டுமொத்த உலகத்தையும் உலுக்கி எடுத்த கரோனா தொற்றுக் காலத்தில் மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதார கட்டமைப்பில் அங்கம் வகித்தவர்கள் பலரையும் அனைத்து மக்களும் அரிதாகவே பார்த்தனர்.
சுகாதார கட்டமைப்பின் மய்யப்புள்ளி யாக பார்க்கப்படும் மருத்துவர்கள், இந்தியாவில் அரசு மற்றும் தனியார்த் துறைகளில் தங்கள் பங்களிப்பு மூலம் மக்களுக்குத் தரமான மருத்துவ தேவையை உறுதி செய்து வருகிறார்கள். இருந்தபோதிலும், அதிகரித்து வரும் மக்கள் தொகை காரணத்தினால், போதிய மருத்துவர்கள் எண்ணிக்கை இல்லாதது ஒரு கவலையளிக்கும் செய்தியாகவே உள்ளது.
அதன்படி, கடந்த ஆண்டு (2024) அக்டோபர் மாதம் வரையிலான ஆதார் அடிப்படையிலான மக்கள் தொகை புள்ளி விவரங்களின் அடிப்படையில், இந்தியாவில் சராசரியாக ஒரு லட்சம் மக்களுக்கு பதிவு செய்யப்பட்ட 99 மருத்துவர்கள் இருப்பதாகத் தெரிய வந்துள்ளன. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களிலும் இருக்கும் மக்கள் தொகை அடிப்படையில், ஒரு லட்சம் மக்களுக்கு எவ்வளவு மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்ற விவரங்களும் வெளி யாகியுள்ளது.
அந்த வகையில் தமிழ்நாட்டில் ஒரு லட்சம் மக்களுக்கு 194 மருத்துவர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களின் பட்டியலில் ஒரு லட்சம் மக்களுக்கு கோவாவில் 298 மருத்துவர்களும், கருநாடகாவில் 207 மருத்துவர்களும், கேரளாவில் 203 மருத்துவர்களும், ஆந்திராவில் 198 மருத்துவர்களும், பஞ்சாபில் 173 மருத்துவர்களும், மராட்டியத்தில் 164 மருத்துவர்களும், டில்லியில் 148 மருத்துவர்களும், ஜம்மு காஷ்மீரில் 137 மருத்துவர்களும், குஜராத்தில் 109 மருத்துவர்களும், அருணாசலப் பிரதேசத்தில் 105 மருத்துவர்களும் இருக்கின்றனர். மற்ற மாநிலங்களில் ஒரு லட்சம் மக்களுக்கு இரட்டை இலக்கத்தில் மருத்துவர்களின் எண்ணிக்கை இருக்கிறது.