உலக மயமாகிறார் தந்தை பெரியார்!
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில்
தந்தை பெரியார் படத்தைத் திறக்கிறேன்!
எண்ணிப் பார்க்கும்பொழுது மகிழ்ச்சிக் கடலில் மிதக்கிறேன்!
சென்னை, ஆக.29 உலகின் மிகப்பெரிய அறிஞர்களைத் தந்த, புகழ்மிக்க அறிவுசார் நிறுவனமாகப் போற்றப்படும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில், அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் உருவப்படம் திறக்கப்பட இருக்கிறது! அதை என்னுடைய கரங்களால் திறந்துவைக்க இருக்கிறேன் என்று எண்ணிப்பார்க்கும்போது நான் இப்போதே மகிழ்ச்சிக் கடலில் மிதந்துக்கொண்டு இருக்கிறேன். என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னையில் நடந்த மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினர் வழக்குரைஞர் என்.ஆர்.இளங்கோ இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் கூறியதாவது:
நாளையதினம் (30.8.2025) நான் ஜெர்மனி – இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு ஒரு வார காலம் பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். நம்முடைய ‘திராவிட மாடல்’ ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாட்டிற்கு இதுவரை சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தொழில்களை நாம் ஈர்த்திருக்கிறோம்.
இதற்கான என்னுடைய வெளிநாட்டு பயணங்களின்போது, முதலீட்டாளர்களும், தொழில்நிறுவனங்களும் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய மனப்பூர்வமாக ஆர்வம் காட்டுவதை நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில்
தந்தை பெரியார் சிலையைத் திறக்கிறேன்!
இப்போது இந்தப் பயணத்தில் என்ன திட்டமிட்டி ருக்கிறோம் என்றால், அதைப்பற்றி நாளைய தினம் நான் விமானத்தில் ஏறி புறப்படுவதற்கு முன்பு, நிச்சயமாக பத்திரிகையாளர்களை சந்தித்து அந்த விவரங்களையெல்லாம் சொல்லப்போகிறேன்.
ஆனால், அதற்கு முன்பு நடைபெறக்கூடிய இந்தத் திருமண விழாவில், ஒரு முக்கியமான நிகழ்வை அறிவிக்க விரும்புகிறேன். நம்முடைய தமிழ்ச்சமூகம் சுயமரியாதையுடன் தலைநிமிர்ந்து நடைபோடுவதற்கு காரணம், தந்தை பெரியார் அவர்கள்!
அதனால்தான், தந்தை பெரியாரைப் பற்றி எழுதிய புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள்,
“தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்!” என்று எழுதினார்.
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் சிந்தனையை உலகு தொழும் காட்சியை நாம் இந்தப் பயணத்தில் பார்க்கப்போகிறோம்.
உலகின் மிகப்பெரிய அறிஞர்களைத் தந்த, புகழ்மிக்க அறிவுசார் நிறுவனமாகப் போற்றப்படும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில், அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் உருவப்படம் திறக்கப்பட இருக்கிறது! அதை என்னுடைய கரங்களால் திறந்துவைக்க இருக்கிறேன் என்று எண்ணிப்பார்க்கும்போது, நான் இப்போதே மகிழ்ச்சிக் கடலில் மிதந்துகொண்டு இருக்கிறேன்.
தந்தை பெரியார் சிந்தனைகள் உலகத்திற்கானது!
தந்தை பெரியார் தமிழ்நாட்டில் பிறந்து, தமிழில் பேசி – எழுதியிருந்தாலும், அவருடைய சிந்தனைகள் இந்த உலகத்திற்கானது; அனைவருக்கும் பொதுவானது!
அவர் வலியுறுத்திய, சுயமரியாதை – பகுத்தறிவு – பெண் விடுதலை – ஏற்றத்தாழ்வு மறுப்பு – தன்னம்பிக்கை – அனைவரும் சமம் ஆகிய கருத்துகளுக்கு எல்லைகள் கிடையாது. இவை உலக மக்கள் அனைவரும் பொதுவான வகையில் ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட அறிவுமேதை உலகளவில் அடை யாளம் காணப்பட்டு, அங்கீகரிக்கப்படுவது நம்முடைய தமிழ்நாட்டிற்கு பெருமை!
அதற்கு முன்பு, நம்முடைய என்.ஆர்.இளங்கோ இல்லத் திருமணத்தை நடத்தி வைத்துவிட்டுதான், அந்த பயணத்தை நான் மேற்கொள்ள இருக்கிறேன் என்பதையும் இங்கு நான் சுட்டிக்காட்டுகிறேன்.
மணமக்களுக்கு வாழ்த்துகள்!
இந்த நேரத்தில் நான் மணமக்களை அன்போடு கேட்டுக்கொள்ள விரும்புவது, உங்களுக்கு பிறக்கக்கூடிய குழந்தைகள் அது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அழகான தமிழ்ப் பெயர்களைச் சூட்டுங்கள்… சூட்டுங்கள்… என்று என்னுடைய அன்பான வேண்டுகோளை வைத்து, புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லி இருக்கும், “வீட்டிற்கு விளக்காய், நாட்டிற்குத் தொண்டர்களாய்” மணமக்கள் வாழுங்கள்… வாழுங்கள்… வாழுங்கள்… என்று வாழ்த்தி விடைபெறுகிறேன்.
– இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை யாற்றினார்.