சென்னை, ஆக.29 “அ.தி.மு.க.வை ஆர்.எஸ்.எஸ். வழிநடத்துகிறது” என்ற விஜயின் விமர்சனத்துக்கு, ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன் பதிலடி கொடுத்துள்ளார். “ஆர்.எஸ்.எஸ். ஒரு சமூக சேவை இயக்கம், அதன் கொள்கைகளை அ.தி.மு.க. கேட்பது வரவேற்கத்தக்கது. விஜயும் ஆர்.எஸ்.எஸ்சிடம் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள குடியிருப்புப் பகுதியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட எல். முருகன், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
பா.ஜ.க.வை போல் அ.தி.மு.க.வையும் ஆர்.எஸ்.எஸ். வழிநடத்துவதாக விஜய் கூறியது குறித்த கேள்விக்கு, எல். முருகன், “ஆர்.எஸ்.எஸ். என்பது சமூக சேவைக்கான இயக்கம், இது நூற்றாண்டு கண்ட இயக்கம். இந்த இயக்கம் குறித்து ஜவஹர்லால் நேரு, அம்பேத்கர் போன்ற தலைவர்களும் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகளிலும் விருந்தினர்களாகக் கலந்துகொண்டுள்ளனர்” என்று கூறினார்.
“அரசியல் கட்சிகளை நல்வழிப்படுத்தும் அனைத்து கொள்கைகளையும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் கொண்டுள்ளது. அப்படிப்பட்ட இயக்கம் அ.தி.மு.க.வை வழிநடத்தினால் என்ன தவறு? முதலில் விஜய்தான் ஆர்.எஸ்.எஸ்.இல் சேர்ந்து அரசியல் தெளிவு பெற வேண்டும், அதன் கொள்கைகள் மூலம் அரசியல் கற்றுக் கொள்ள வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.