புதுக்கோட்டை, ஆக.29 அமெரிக்கா விதித்துள்ள 50% வரியால் புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 1 லட்சம் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டுமாவடி முதல் முத்துக்குடா வரை சுமார் 1 லட்சம் மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். 70க்கும் மேற்பட்ட பெரிய இறால், நண்டு ஏற்றுமதி நிறுவனங்கள், சிறு, குறு இறால் ஏற்றுமதி நிறுவனங்கள் உள்ளன. மீனவர்கள் பிடித்து வரும் இறால், நண்டுகளை கணிசமான விலைக்கு வாங்கி நிறுவனங்கள் பதப்படுத்தி ஏற்றுமதி செய்கின்றன. தாங்கள் பிடித்து வரும் இறால், நண்டுகளை ரூ.400 முதல் ரூ.600 வரை ஏற்றுமதி நிறுவனங்கள் கொள்முதல் செய்து வந்தன.
50% வரியால் தற்போது ரூ.200 முதல் ரூ.150 வரைக்கு மட்டுமே இறால், நண்டுகளை ஏற்றுமதி நிறுவனங்கள் வாங்குவதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இறால், நண்டுகளுக்கு உரிய விலை கிடைக்காவிட்டால் தொழிலை விடும் அபாயம் உள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் வரி விதிப்பை குறைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாக்காளர் பட்டியல் மோசடிப் புகார்:
தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை, ஆக 29 2024 மக்க ளவைத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் மோசடி நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் மற்றும் ஒரே முகவரியில் அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் இடம்பெற்றிருந்ததாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார்.
இந்திய தேர்தல் ஆணையம் இந்தக் குற்றச்சாட்டுக்கு உரிய விளக்கம் அளிக்காமல், ராகுல் காந்தியை மிரட்டும் வகையில் அறிவிக்கை அனுப்பியதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். இது ஜனநாயக அமைப்புகளைப் பலவீனப்படுத்தும் என்பதால், நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.
கோடம்பாக்கத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் வெங்கட சிவகுமார் தாக்கல் செய்துள்ள இந்த பொதுநல மனுவில், அனைத்துத் தொகுதிகளுக்குமான வாக்காளர் பட்டியல் தரவுகளை, பொதுமக்கள் பார்வைக்காக இணையத்தில் PDF வடிவில் வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்காளர் பட்டியல் மோசடி புகார்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகள் குறித்த முழுமையான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த பொதுநல வழக்கு விரைவில் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.