திராவிட இயக்கக் கொள்கை வீரர் சட்டமன்ற மேனாள் உறுப்பினர் ஆர். சின்னசாமி அவர்கள் மறைந்த செய்தியறிந்து ஆழ்ந்து துயருற்றோம்.
ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்டத்தின் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு மூன்று முறை (1971,1984,1989) வெற்றி பெற்று தருமபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பெரும் பங்கு ஆற்றியவரில் முக்கியமானவராவார்.
திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்த போதும் தந்தை பெரியார்மீதும், இயக்கத்தின்மீதும், இயக்க கொள்கைமீதும் மாறா பற்றுக் கொண்டவராவார். சென்னை வரும்போதெல்லாம் பெரியார் திடலுக்கு வருகை தந்து எங்களோடு உரையாடிச் செல்வார். கடந்த ஆண்டு தருமபுரிக்கு சென்றபோது அவரது இல்லத்திற்கு கழகத் தோழர்களுடன் நேரில் சென்று நலம் விசாரித்தோம்.
85 வயது 92 வயதை பார்க்க வேண்டுமே தவிர, 92 வயது 85 வயதை பார்க்க வேண்டியது இல்லை என எங்களிடம் குறிப்பிட்டார். அவரது மறைவு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல; திராவிடர் இயக்கங்களுக்கு பேரிழப்பாகும். அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
29.8.2025