புதுடில்லி, ஆக. 29- இணையவழி விளையாட்டு இளைஞர்கள், சிறுவர்களை அடிமையாக்கியுள்ளது. அவர்களைத் தவிர இளம் பெண்களும், சிறுமிகளும் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகியுள்ளனர். சிலர் பணம் கட்டி விளையாடும் ஆன்லைன் விளையாட்டில் தீவிரமாக மூழ்கி விபரீத முடிவுகளை எடுக்கும் அபாய நிலைக்கும் தள்ளப்பட்டுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.
இதனால் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடைசெய்யும் வகையில், ஒன்றிய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. இதனால் பணம் செலுத்தி விளையாடும் விளையாட்டுகள் தடைசெய்யப்பட்டுள்ளன.
டில்லியை சேர்ந்த இரண்டு நடுத்தர சிறுமிகள் விவி பிளே (We Play) என்ற ஆன்லைன் விளையாட்டை தொடர்ந்து விளையாடி வந்துள்ளனர். அப்போது அரியானா மாநிலம் சோனிபட்டைச் சேர்ந்த கிஷிஷ் என்ற பையனுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது தடைவிதிக்கப்பட்ட நிலையில், அந்த பையன் இருவரையும் தொடர்பு கொண்டு நாம் தொடர்ந்து ஆன்லைனில் விளையாடலாம். அதற்கான வழிகள் எனக்குத் தெரியும் என ஆசைவார்த்தை கூறியுள்ளான். இதை நம்பி உறவினர்களான அந்த இரண்டு சிறுமிகளும் விடியற்காலையில் யாருக்கும் தெரியாமல் வீட்டில் இருந்து வெளியேறி பானிபட் சென்றடைந்துள்ளனர். காலையில் விவேக் குமார் என்பவர் தன்னுடைய மகள், உறவினர் மகளுடன் சேர்ந்து வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அவர்களை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்துள்ளார்.
உடனடியாக காவல்துறையினர் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு, இருவரும் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து, அவர்கள் பாதுக்காப்பாக மீட்டு, பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.
கூகுள் மேப் – ஓர் எச்சரிக்கை
ஜெய்ப்பூர், ஆக. 29- ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, ஜெய்ப்பூரை சேர்ந்த குடும்பத்தினர் 9 பேர் 27.8.2025 அன்று ஆன்மிக சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் சொந்த ஊருக்கு 27.8.2025 அன்று இரவு வேனில் திரும்பிக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில், வேனை ஓட்டுநர் கூகுள் மேப்பை பார்த்து வேனை ஓட்டியுள்ளார். குடும்பத்தினர் அனைவரும் உறங்கிய நிலையில், வேன் சொமி-உப்ரிடா பாலத்தில் சென்றுள்ளது. அந்த பாலம் பராமரிப்புப் பணி காரணமாக கடந்த சில மாதங்களாக மூடி இருந்துள்ளது.
ஆனால், கூகுள் மேப்பில் பாலம் பயன்பாட்டில் இருப்பதுபோல் காட்டப்பட்டிருந்ததால் ஓட்டுநர் வேனை இயக்கியுள்ளார். அப்போது, வேன் பாலத்தில் இருந்து திடீரென பனாஸ் ஆற்றுக்குள் பாய்ந்தது. இந்த சம்பவத்தில் வேனில் பயணித்த குழந்தை உள்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 5 பேர் உயிர் பிழைத்தனர். உயிர் பிழைத்தவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற காவல்துறையினர், ஆற்றில் அடித்து செல்லப்பட்டவர்களின் உடல்களை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.