சென்னை, ஆக.28- போக்குவரத்து சிக்னல்களில் குழந்தையை வைத்து பிச்சை எடுப்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கு டி.என்.ஏ. பரிசோதனை செய்து குழந்தைகளை மீட்கும் திட்டம் குறித்து பரிசீலனை செய்யப்படும் என மேயர் பிரியா தெரிவித்தார்.
கருத்தடை மய்யம்
சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட அலுவலக கூட்டரங்கில் நேற்று முன்தினம் (26.8.2025) ஆகஸ்டு மாதத்திற்கான மாதாந்திர மன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடந்தது. கூட்டத்துக்கு, துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் 61ஆவது வார்டு கவுன்சிலர் பாத்திமா (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) பேசும் போது, ‘சென்னையில் 1.80 லட்சம் தெருநாய்கள் உள்ளது. இதில், 27 சதவீதம் தெருநாய்களுக்கு மட்டுமே கருத்தடை செய்யப்பட்டுள்ளது.
அனைத்து நாய்களுக்கும் எப்போது முழுமையாக கருத்தடை செய்யப்படும்? மாநகராட்சி அறிவுறுத்தியும் நாய்களை வளர்ப்பவர்கள் பொது வெளியில் வாய்கவசம் அணியாமல் நாய்களை அழைத்து வருகிறார்கள். இதற்கு கடும் நடவடிக்கை தேவை’ என கூறினார்.
இதற்கு பதில் அளித்து மேயர் பிரியா பேசும்போது, ‘நாய்கள் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடந்து வருகிறது.
வருகிற டிசம்பர் மாதத்திற்குள் 15 மண்டலங்களிலும் நாய்கள் இன கருத்தடை மய்யம் அமைக்கப்படும். அனைத்து தெருநாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்தப்படும் என கூறினார்.
குழந்தை மீட்புத் திட்டம்
இதைத்தொடர்ந்து, துணை மேயர் மகேஷ் குமார் பேசுகையில், ‘பஞ்சாப் மாநிலத்தில் போக்குவரத்து சிக்னல்களில் குழந்தையை வைத்து பிச்சை எடுப்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கு டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்பட்டு அது அவர்களது குழந்தைகளா? என சோதனை செய்யப்படும்.
சோதனையில் அவர்களது குழந்தைகள் இல்லை என்றால் அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அந்த குழந்தையை மீட்டு பஞ்சாப் மாநகராட்சி சார்பாக கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்தும் செய்து கொடுக்கப்படுகிறது.
அதேபோல, சென்னையிலும் சிக்னல்களில் பிச்சை எடுக்கும் குழந்தைகளின் டி.என்.ஏ.வை பரிசோதனை செய்ய வேண்டும்.
அப்போது தான் அந்த குழந்தை களுடன் இருக்கும் நபர்கள் அவர்களின் பெற்றோர்களா, இல்லையா? என்பதை கண்டறிய முடியும். மீட்கப்படும் குழந்தைகளை மாநகராட்சியின் குழந்தை மீட்பு மய்யங்களில் அனுப்பி வைத்து அவர்களுக்கு தரமான கல்வியை வழங்க முடியும். இதை சென்னை மாநகராட்சியில் அமல்படுத்த வேண்டும்’ என கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதில் அளித்து பேசிய மேயர் பிரியா. ‘இது நல்ல திட்டம். இதை சென்னை மாநகராட்சியில் அமல்படுத்துவது குறித்து பரிசீலனை செய்யப்படும்’ என தெரிவித்தார்.
மெரினா கடற்கரை மெருகேறுகிறது
கூட்டத்தில், மெரினா பாரம்பரிய வழித்தட மேம்பாட்டிற்காக உழைப்பாளர் சிலையில் இருந்து கலங்கரை விளக்கம் வரை திட்டப் பணிகள் செயல்படுத்த மன்றத்தின் அனுமதி வழங்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் 230 கிலோ மீட்டர் நீளத்திற்கு 4 மீட்டர் அகலத்தில் சிந்தடிக் சைக்கிள் பாதை உருவாக்குதல், காமராஜர் சாலையின் இருபுறமும் 9 பேருந்து நிறுத்துமிடங்களை உருவாக் குதல், 3 புறக்காவல் நிலையங்கள், பாரம்பரிய கட்டிடங்களை கண்டு களிக்கும் வகையில் 9 காட்சி தளங்கள் அமைத்தல் மற்றும் பொல்லார்ட் விளக்கு அமைப்பது ஆகியவற்றிற்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது.
15 மண்டலங்களில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் 200 மாணவர்களுக்கு ஒரு தூய்மை பணியாளர் என்ற அடிப்படையில் 1747 தற்காலிக தூய்மை பணியாளர்களை நியமிக்க அனுமதி அளித்து, இவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த தினக்கூலி ரூ.687-ல் இருந்து ரூ.753 ஆக உயர்த்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் ரூ.80 கோடியில் 803 உட்புற சாலைகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட மொத்தம் 83 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கம்யூனிஸ்டு
கவுன்சிலர்கள் வெளிநடப்பு
சென்னை மாநகராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்களை போலீசார் கடந்த 13ஆம் தேதி நள்ளிரவு கைது செய்தனர்.
இந்தச் சம்பவத்தை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர்கள் 4 பேர் சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் இருந்து நேற்று (26.8.2025) வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து அவர்கள் தூய்மைப்பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர். இதனால், மாநகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.