சென்னை அம்பத்தூர் கள்ளிகுப்பம், கங்கைதெரு, பட்டரைவாக்கம் சர்வீஸ் சாலை அருகில், அம்பத்தூர் வேங்கடபுரத்தை சார்ந்த கேசவன் என்பவர் குளிர்பானக் கடை நடத்தி வந்துள்ளார். இவருடைய தந்தையின் உடல் நலன் காரணமாக அவரை பார்க்க கடையை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுள்ளார்.
சில நாட்கள் பிறகு, தனது கடையை திறப்பதற்காக சென்றுள்ளார். அங்கே கண்ட காட்சி அவரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. ஏனெனில் கடை முன்பாக, கடையையே திறக்க முடியாமல் கதவின் அருகிலேயே பிள்ளையாருக்கு கோவிலையே கட்டி வைத்து உள்ளார்கள்.
இதைப் பார்த்து புலம்புகிறார். ‘‘நானும் கடவுளை வணங்குகிறவன் தான், நானும் இந்துதான், விழாக்களின் போது நன்கொடை வழங்குகிறவன் தான்.இது போன்று பொது சாலையில் கோயில்கட்டுவது, கடைக்குள்ளே செல்லமுடியாமல் கட்டுவது எல்லாம் எந்த கடவுளுக்கும் பொறுக்காது.
கோவில் கட்டுவது என்றால் அவர்கள் வீட்டு வாசலில், அவர் இடத்தில் கட்டிக் கொள்ள வேண்டியது தானே. இது மிகவும் அராஜகம்’’ என்று புலம்புகிறார்.
நகராட்சியில் புகார் கொடுத்துள்ளதாக குறிப்பிட் டுள்ளார். விரைவில் அப்புறப்படுத்தப்பட வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளார்.
பிரதான சாலை ஓரங்களில் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என்று சட்டம் போடும் நீதிமன்றம், பொது மக்களுக்கு பெரும் இடைஞ்சலாக, தெருக்குத் தெரு இருக்கும் இது போன்ற சிலைகளை அகற்ற நீதிமன்றம் ஆணை இடுமா? என்று ஆசிரியர் கேட்பது நியாயம் தானே.
ஆசிரியர் கோரிக்கையின்படி பக்தியின் பேரால் நடைபெறும் இதுபோன்ற அடாவடி செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும். சாலையோரங்களில் அனுமதி இல்லாமல் இருக்கும் சிலைகளை அகற்ற வேண்டும். பொது இடங்களில் எவ்வித அனுமதி இல்லாமல் கோவில் கட்ட இனிமேல் அனுமதிக்க கூடாது. இதனை அரசின் கவனத்திற்கு முன் வைக்கின்றோம்.
(அனைத்து ஊடகங்களிலும் இச்செய்தி வெளி வந்துள்ளது)
– பெ. கலைவாணன்
திருப்பத்தூர்