மேற்கு வங்காள மக்களைத் திருடர்கள் என பிரதமர் அழைத்ததை எதிர்பார்க்கவில்லை : மம்தா கண்டனம்

2 Min Read

கொல்கத்தா, ஆக.28  பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்காள மக்கள் அனைவரையும் ‘திருடர்கள்’ என்று அழைத்ததையும், மாநில முதலமைச்சர் பதவிக்கு உரிய மரியாதை அளிக்காததையும் சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்று மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி கொல்கத்தாவில் மெட்ரோ ரயில் திட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, “ஊழல் மற்றும் குற்றங்களுக்கு மறுபெயராகத் திரிணமூல் காங்கிரஸ் திகழ்கிறது. ஒன்றிய அரசு மேற்கு வங்காளத்திற்கு ஒதுக்கும் நிதி, மாநில மக்களுக்குச் செல்லவில்லை. மாறாக, திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்களால் விழுங்கப்படுகிறது,” என்று குற்றஞ் சாட்டினார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில், வர்த்தமானில் 26.8.2025 அன்று அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய மம்தா, “மாநில அரசுக்கு உரிய நிதியை ஒதுக்காமல், மேற்கு வங்காள மக்கள் ஒன்றிய அரசு நிதியை விழுங்குவதாகப் பிரதமர் பேசியுள்ளார். ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீட்டில் ஏற்பட்ட நெருக்கடியால், மாநில அரசுக்குக் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

பிரதமர் பதவிக்கு நான் எப்போதும் மரியாதை அளிக்கிறேன். அதேபோலப் பிரதமரும் முதலமைச்சர் பதவிக்கு மரியாதை அளிக்க வேண்டும். உத்தரப் பிரதேசம், மகாராட்டிரா, பீகார் உள்ளிட்ட பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களில்தான் ஊழலும், குற்றச் செயல்களும் அதிகம் நிகழ்கின்றன. ஒன்றிய அரசு நிதி எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து ஒன்றிய அரசு கேட்ட விளக்கங்களுக்கு, மாநில நிர்வாகம் உரிய பதில்களை அளித்துள்ளது. மத்திய அரசு உரிய நிதியைத் தராமல் நிறுத்தி வைத்துவிட்டு, திருட்டுக் குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறது. மேற்கு வங்காளம் இதுபோன்ற அவமதிப்பை ஒருபோதும் ஏற்காது,” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சீர்திருத்தம் குறித்துப் பேசிய மம்தா, “மருத் துவக் காப்பீட்டு பிரீமியம் மீதான 18 சதவீத ஜிஎஸ்டி-யை நீக்கினால், மேற்கு வங்காளத்திற்கு 900 கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்படும். எனினும், மக்கள் நலன் கருதி இதனை மேற்கு வங்காள அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஜிஎஸ்டி குறையும்போது காப்பீட்டு நிறுவனங்கள் பிரீமியம் கட்டணத்தை உயர்த்திவிடக் கூடாது. அரசின் வரிச்சலுகை மக்களுக்கு முழுமையாகக் கிடைக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்,” என்றார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *