லக்னோ, ஆக.28- எதிர்க்கட்சி யின் குடியரசு துணைத் தலை வர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி இந்தியா கூட்டணியில் இல்லாதவர் களும் தனக்கு உதவ முன் வருவதற்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.
குடியரசு துணைத்
தலைவர் வேட்பாளர்
தலைவர் வேட்பாளர்
இந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழ்நாட்டை சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணனும், காங்கிரஸ் தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் மேனாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியும் போட்டியிடுகின்றனர்.
இதையடுத்து அவர்கள் ஒவ்வொரு மாநிலமாக சென்று தங்களது கூட்டணிக் கட்சி தலைவர் களை சந்தித்து நாடாளுமன்ற உறுப்பினர்க்களின் ஆதரவை பெறும் முயற்சியில் இறங்கி உள்ளனர். ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி டெல்லியில் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலையும், சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.
வெளியே உள்ளவர்களும்…
இதற்கிடையே சுதர்சன் ரெட்டி உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப் பினர்களின் ஆதரவை திரட்ட நேற்றுமுன்தினம் (26.8.2025) லக்னோ சென்றார். அங்கு சமாஜ்வாடி கட்சி தலைமையகத்தில் கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் தலைவர்களின் முன்னிலையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கட்சி எல்லைகளுக்கு அப்பால் தகுதி மற்றும் கொள்கை அடிப்படையில் தன்னை பரிசீலிக் குமாறு அனைத்து அரசியல் கட்சி களின் உறுப்பினர்களுக்கும் சுதர்சன் ரெட்டி வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து அவர் கூறியதாவது:-
எதிர்க்கட்சிகள் என்னை நம்பி யுள்ளன. ‘இந்தியா’ கூட்டணி மட்டுமல்ல, கூட்டணிக்கு வெளியே உள்ளவர் களும் உதவ முன்வருவதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாகஇருக்கிறேன். அகிலேஷ் யாதவ் இல்லாமல், இது சாத்தியமில்லை.
அரசியலமைப்பு பதவி
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா என்னை நக்சலைட்டு ஆதரவாளர் என்று கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டு குறித்த விவா தத்தை விரிவுபடுத்த விரும்பவில்லை. அவர்கள் ஒரு கதையை உருவாக்க முயற்சிக்கிறார்கள். நான் அதற்கு பதில் அளித்துள்ளேன்.
குடியரசு துணைத் தலைவர் என்பது ஒரு அரசியல் அலுவலகம் அல்ல என்பதால் நான் அரசியல் பிரச்சினைகள் பற்றிபேச மாட்டேன். குடியரசு துணைத் தலைவர் பதவி ஒரு உயர்ந்த அரசியலமைப்பு பதவி, தத்துவஞானிகள், தேசிய தலைவர்கள் மற்றும் கல்வியாளர்கள் இதற்கு முன்பு அந்த பதவியை வகித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.