‘விமானப் பயன்முறை’ (ஃப்ளைட் மோட்) என்பது விமானப் பயணங்களில் மட்டுமல்ல, அன்றாட வாழ்விலும் மிகவும் பயனுள்ள அம்சம்.
கைபேசியைப் பயன் படுத்தும் அனைவருக்கும், ‘ஃப்ளைட் மோட்’ அல்லது ‘ஏரோபிளேன் மோட்’ பற்றித் தெரிந்திருக்கும். இது, கைபேசியில் உள்ள அனைத்து வயர்லெஸ் நெட்வொர்க்குகளையும் தற்காலிகமாக செயலிழக்கச் செய்யும் ஒரு அம்சம். விமானப் பயணத்தின் போது, விமானத்தின் வழிசெலுத்தல் அமைப்பில் கைபேசியின் ரேடியோ அலைகள் குறுக்கிடுவதைத் தடுக்க பெரும்பாலான மக்கள் இதை பயன்படுத்துகின்றனர். ஆனால், இந்த ‘ஃப்ளைட் மோட்‘ பல அன்றாடச் சூழ்நிலைகளிலும் பயனுள்ளதாக இருக்கும் என்பதைப் பலர் உணருவதில்லை. இந்தக் குட்டி அம்சம், நம் அன்றாட வாழ்வில் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.
பேட்டரி சேமிக்க சிறந்த வழி: நெட்வொர்க் இணைப்பு சரியாக இல்லாத பகுதிகளில், உங்கள் கைபேசி தொடர்ந்து சிக்னலைத் தேடிக்கொண்டே இருக்கும். இது பேட்டரியை வேகமாக காலி செய்துவிடும். ஃப்ளைட் மோடை ஆன் செய்வதன் மூலம், இந்தச் செயல்பாடு நின்று, உங்கள் போனின் பேட்டரி நீண்ட நேரம் நீடிக்கும்.
வேகமாக சார்ஜ் (மின்னூட்டம்) செய்ய: உங்கள் கைபேசி வேகமாக சார்ஜ் ஆக வேண்டுமென்றால், சார்ஜரில் போடுவதற்கு முன் ஃப்ளைட் மோடை ஆன் செய்யுங்கள். கைபேசி நெட்வொர்க்குடன் இணைக்க முயற்சி செய்யாததால், சார்ஜிங் வேகம் 20–25% வரை அதிகரிக்கும்.
குழந்தைகளுக்கான பாதுகாப்பான பயன்முறை: குழந்தைகள் விளையாடுவதற்கோ அல்லது காணொலி பார்ப்பதற்கோ உங்கள் போனை கொடுக்கும்போது, ஃப்ளைட் மோடை ஆன் செய்தால் அவர்கள் இணையத்தைப் பயன்படுத்த முடியாது. இது கைபேசி டேட்டாவை முடக்கி, அவர்கள் தற்செயலாக இணையதளங்களை பார்வையிடுவதையோ அல்லது செயலிகளை பதிவிறக்கம் செய்வதையோ தடுக்கும்.
போனை சூடாகாமல் தடுக்க: நெட்வொர்க் சிக்னல் இல்லாதபோது, கைபேசி தொடர்ந்து இணைப்பைத் தேடுவதால் சூடாகும். ஃப்ளைட் மோடை இயக்குவது இந்தச் செயல்பாட்டைக் குறைத்து, கைபேசி சூடாகாமல் இருக்க உதவும்.
கவனச்சிதறல் இல்லாத பயன்முறை: நீங்கள் படிக்கும்போதோ அல்லது வேலை செய்யும்போது கவனம் சிதறாமல் இருக்க வேண்டுமா? ஃப்ளைட் மோட், அனைத்து அழைப்புகள், குறுஞ்செய்திகள், குறுந்தகவல்களை சத்தம் இல்லாமல் முடக்கி, தடையற்ற நேரத்தைப் பெற உதவுகிறது.
ஃப்ளைட் மோடில் இணையத்தைப் பயன்படுத்த முடியுமா? ஃப்ளைட் மோட் இயக்கப்பட்டிருந்தாலும், நீங்கள் வைஃபை மற்றும் புளூடூத்தை கைகளால் ஆன் செய்ய முடியும். இதன் மூலம், கைபேசி நெட்வொர்க்குகளை இயக்காமல் இணையத்தில் உலாவவும், வயர்லெஸ் ஹெட்ஃபோன்களை இணைக்கவும் அல்லது வைஃபை மூலம் இயங்கும் செயலிகளைப் பயன்படுத்தவும் முடியும்.